வடக்கு, கிழக்கில் 55 ஆயிரம் வீடுகள் - மகிந்த தரப்பு
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சோடு இணைந்து, வடக்குக்கும் கிழக்குக்குமான 55,000 வீடுகளை விரைவாக நிர்மாணிப்பதற்கு, ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினூடாக மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று முன்தினம் (27) தாக்கல் செய்திருப்பதாக, அவ்வமைச்சுக்கான அமைச்சர் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கூறும் வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்னமும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், இடைக்காலக் கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவே, மஹிந்த தரப்பு எதிர்பார்க்கிறது. எனினும், நாடாளுமன்றத்தில் அவ்வணிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற கேள்வியெழுந்துள்ளது.
எனினும், இடைக்காலக் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியுமென நம்புவதாக அவர் தெரிவித்தார். "இடைக்காலக் கணக்கறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற தேவையை உணர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இடைக்காலக் கணக்கறிக்கை என்பது, அரசியல் தொடர்பான பிரச்சினை இல்லை. அது, நாட்டின் செலவீனங்கள் தொடர்பான பிரச்சினை" என அவர் குறிப்பிட்டார்.
இடைக்காலக் கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ள நிலையில், அதை எப்போது நிறைவேற்றுவது என்பதற்கான உறுதியான திகதியை வழங்காத அவர், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
மஹிந்த தரப்பு, நாடாளுமன்றத்தில் தம்மை, "ஆளுங்கட்சி" என்றே வர்ணித்துவரும் நிலையில், அண்மைய நாடாளுமன்ற அமர்வுகளை, அத்தரப்புப் புறக்கணித்திருந்தது. இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்திருந்த போதிலும், தமது நடவடிக்கைகளுக்கான குற்றச்சாட்டை, ஐ.தே.க மீதே, வாசுதேவ எம்.பி முன்வைத்தார்.
"ஆளுங்கட்சி இல்லாது கூடிய நாடாளுமன்றம், உலகில் எங்கும் இல்லை. ஆளுங்கட்சி இல்லாது,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு யார் பதிலளிப்பது? இதற்கு, சபாநாயகரும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிப்பவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்புத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், ஐ.அமெரிக்க டொலர், நாட்டுக்கு வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2P5tMkB
via Kalasam
Comments
Post a Comment