பாபரி மஸ்ஜிதை தகர்த்த முதல் நபர் இன்று 100 பள்ளிகளை நிர்மாணிக்கிறார் ALLAHU AKBER
Q உங்களைப் பற்றியும் உங்களது குடும்பம் பற்றியும் தெரிந்து கொள்ள முடியுமா?
நான் மொஹமட் ஆமிர் (பல்பிர் சிங்). 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி ராஜ்புத் பரம்பரையில் பிறந்தேன். ஹரியானா மாநிலத்தின் பனிபட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமே என்னுடைய ஊர் ஆகும்.
எனது தந்தை ஒரு வளமான விவசாயி. அத்துடன் ஒரு ஆரம்பப் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் கூட. எப்போதும் அநீதிக்கும் கொடுங்கோண்மைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அவர் மனித நேயப் பண்பு கொண்ட மிகச்சிறந்த மனிதர் ஆவார்.
1947 ஆம் ஆண்டு தேசிய ரீதியாக களங்கத்தை ஏற்படுத்திய பயங்கரமான கலவரம் ஒன்றை அவர் கண்டார். பெருந்தொகையான முஸ்லிம்கள் அதில் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்நேரம் மனம் கலங்கிய எனது தந்தை முஸ்லிம்களுடைய புனர்வாழ்வுக்காக வேண்டி உதவ முன்வந்தார். தனது பாடசாலையிலுள்ள முஸ்லிம் சிறுவர்கள் கல்வியை நோக்கி பயணிக்க முக்கிய கவனம் செலுத்தியதோடு விஷேட சலுகைகளையும் வழங்கினார்.
என்னுடைய பாடசாலைக் கல்வியின் பின்னர் பனிபட்டின் இடைநிலைக் கல்லூரியொன்றில் அனுமதி பெற்றேன். அப்போது என்னுடைய பெயர் பல்பிர் சிங் ஆக இருந்தது. மும்பைக்குப் பின் சிவசேனா இயக்கத்தின் பலம் பொருந்திய கோட்டையாக பனிபட் விளங்கியது. அங்கு நான் முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சூட்டிய சிந்தனையைக் கொண்ட வெறியர்களான பல இளைஞர்களைக் கண்டேன். அவர்களால் நானும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவும் முஸ்லிம்களை சிதைத்து விடும் எண்ணம் கொண்டவனாகவும் மாறினேன்.
சிவசேனா இயக்கத்தின் பஜ்ரங்தள் மற்றும் இந்துத்துவாவினர் இஸ்லாம், குர்ஆன், மஸ்ஜித் மற்றும் முஸ்லிம்கள் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருந்திருப்பார்களேயானால் பாபரி மஸ்ஜிதுடைய அழிவில் இவர்களுடைய பங்களிப்பு இருந்திருக்காது. இப்படியொரு வெட்கக்கேடான செயலை செய்வதற்கு நினைத்திருக்கவே மாட்டார்கள். இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமாகும். 99 சதவீதமான இந்துக்கள் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர்கள்.
நான் சிவசேனா இயக்கத்துடன் இணைந்து கொண்டதை அறிந்த எனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியிருந்த என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். உண்மைச் சம்பவங்களான நீதிக்கதைகளை எனக்குக் கூறினார். பாபர், அவுரங்கஷிப் போன்ற ஆட்சியாளர்கள் பற்றி எனக்கு எத்தி வைத்தார்.
இந்தியாவில் பல சிதைவுகளை ஏற்படுத்தி, ஆங்கிலேயருடைய ஆதிக்கம் விரிவடைய முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இருந்த கசப்புணர்வுதான் காரணம் என்பதை உணர்த்த முற்பட்டார். இருந்த போதிலும் சிவசேனா இயக்கத்துக்கு என் மனதில் இருந்த செல்வாக்கு அவருடைய அத்துனை முயற்சிகளுக்கும் தோல்வியைக் கொடுத்தது. நான் அவருடைய வார்த்தைகள் எதையும் கண்டுகொள்ளவில்லை.
Q பாபரி மஸ்ஜிதை தகர்ப்பதில் உங்களுடைய பங்களிப்பு என்ன?
1990 ஆம் ஆண்டு அத்வானியின் ‘ரத யாத்ரா’வில் நான் ஒரு முக்கிய அங்கம் வகித்தேன். முஸ்லிம்களுக்கு எதிராக இருந்த வெறுப்பும் வெறியுமே என் இதயத்தை நிரப்பி இருந்தது. அயோத்தியின் ராம் மந்திர் வளாகத்தில் இருந்த பாபரி மஸ்ஜிதுடைய அமைப்பையே இல்லாமல் செய்து தரைமட்டமாக்குவேன் என உறுதிமொழி கூறினேன். அந்த வருடத்தின் ஒக்டோபர் 30 ஆம் திகதி சிவசேனாவின் இளைஞர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டேன்.
இளைஞர் படையோடு சேர்ந்து நான் அயோத்திக்குச் சென்றேன். சில இடங்களில் பொலிஸார் எங்களை வழிமறித்தார்கள். துப்பாக்கியால் சுட்டார்கள். எங்களால் பாபரி மஸ்ஜிதை அடைய முடியவில்லை. ஆனால் இந்தத் தடைகள் முஸ்லிம்கள் மீது இருந்த வெறுப்புணர்வை மேலும் தீவிரப்படுத்தியது. ராம் ஜன்ம பூமியான ராம் பகாட்ஸில் தோட்டாக்கள் வெடிப்பது சிவசேனா இயக்கத்தை மேலும் வெறுப்பூட்டியது. நான் கடுமையாக ஆத்திரமடைந்தேன். தோல்விகள் என்னைத் தற்கொலைக்குத் தூண்டியது. நாடெங்கும் கலவரம் வெடித்தது. பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரை மட்டமாக்குவதற்கான நாளை நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இறுதியாக அந்த நாளும் வந்தது.
1992 டிசம்பர் முதலாம் திகதி நான் அயோத்தியை எனது குழுவுடன் அடைந்தேன். அங்குதான் எனக்கு யோகேந்திர பால் அறிமுகமானார். அவர் சோனிபட் கிராமத்தைச் சேர்ந்த ஜெமீந்தார் சௌத்ரி ரக்ஹூபிர் சிங்கின் மகன். அவருடைய தந்தைக்கு நேர் எதிரானவராக அவர் இருந்தார். எனக்கு உற்ற நண்பராக மாறினார். டிசம்பர் ஐந்தாம் திகதி பாபரி மஸ்ஜிதை அண்மித்த பகுதியை நாம் நெருங்கினோம். அந்த இரவை அங்கிருந்த முஸ்லிம் வீடுகளின் கூரையில் நாம் கழித்தோம்.
இந்த முறை அனைவரும் பொறுமையாக செயற்பட்டோம். கடந்த வருடம் ஏற்பட்ட தோல்விகள் நினைவுக்கு வந்தது. கரசேவாவை தொடங்க முடிவு செய்தோம். ஆனால் எங்களுடைய சங்சலக் ஒழுக்கங்களை பேணுமாறு தடுத்து நிறுத்தினார். அந்த நேரத்தில் உமா பாரதி பேசிய தீவிரமான பேச்சு எங்களுடைய உணர்வுகளைத் தழுவியது. நான் யோகேந்திர பாலுடன் கோடரியை எடுத்துக் கொண்டு மஸ்ஜிதின் உயரத்துக்குச் சென்றேன்.
அந்த கணம் ‘ஒரு அடி கொடுத்து மஸ்ஜிதை தரைமட்டமாக்குங்கள்” என்று உமா பாரதி முழங்கினார். நான் எனது கோடரியால் மஸ்ஜிதின் மினாராவை சேதப்படுத்திவிட்டு கோடரியை உயர்த்தி ‘ஜெய் ஜெய் ராம் பகவான்” என்ற சுலோகத்தை உரத்து முழங்கினேன். சில மணி நேரத்தின் பின்னர் எங்களுடைய கண்களுக்கு முன்னால் மஸ்ஜித் நன்றாக சேதமடைந்தது. நாம் மிகுந்த சந்தோஷத்துடன் கீழே இறங்கியதோடு ராம் லல்லாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கினோம். நாங்கள் பனிபட் மக்களுக்கு காட்டுவதற்காக மஸ்ஜிதின் இரண்டு செங்கற்களை எம்மோடு எடுத்துக் கொண்டோம். அதைக் கண்ட மக்கள் அனைவரும் எம்மை பாராட்டினார்கள். குறித்த செங்கற்கள் இரண்டும் சிவசேனா இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
மஸ்ஜிதை உடைத்ததில் பங்களிப்பு செய்தவர்களுள் பிரதான பங்காளர் நான்தான் என என்னுடைய பெயரை அறிவித்தார்கள். நான் அனைவராலும் மெச்சப்பட்டேன். இவற்றையெல்லாம் என்னுடைய தந்தையிடம் நான் தெரிவித்த போது அவர் மிகவும் கோபமடைந்தார். என்னுடைய வெட்கக்கேடான செயலை நினைத்து மனமுடைந்து போனார். என்னை வீட்டை விட்டுச் செல்லுமாறு பணித்தார். அவருடன் நான் இருப்பதை அவர் விரும்பவில்லை. மஸ்ஜிதை உடைத்ததன் மூலம் நான் எவ்வளவு பிரமல்யமடைந்திருக்கிறேன் என்பது பற்றி அவருக்கு விளக்கம் கொடுத்தேன். ஆனாலும் இறையில்லம் ஒன்றை உடைத்த ஒருவனுடன் தொடர்ந்தும் இருக்க அவர் விரும்பவில்லை. அவராகவே வீட்டை விட்டுச் செல்வதாகக் கூறி வெளியேற முற்பட்டார். அவரை தடுத்து நிறுத்தி நான் வெளியே செல்வதாகக் கூறினேன். அதனைத் தொடர்ந்து நான் பனிபட்டை விட்டு வெளியேறினேன்.
Q இப்போது நீங்கள் எவ்வாறு இஸ்லாத்தைத் தழுவினீர்கள் என்று கூறுங்கள்.
அல்லாஹ் என்னை ஆசிர்வதிக்கப் போதுமான அளவு இரக்கத்தை கொண்டிருக்கிறான். தீவிரவாதம் எனும் இருளில் இருந்து வெளியில் வர அவன் எனக்கு வழிகாட்டல்களைத் தந்தான். அவனது வீட்டை அழிப்பதில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் இதுதான் சரியான பதிலடி.
ஒரு நாள் யோகேந்திர பால், பாபரி மஸ்ஜிதின் இரண்டு செங்கற்களையும் எடுத்து வந்து அதன் மீது சிறுநீர் கழிக்க இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தான். பெருந்தொகையானோர் அதன் மீது சிறுநீர் கழிக்கவென ஒன்று கூடினார்கள். நான்கு ஐந்து நாட்களின் பின்னர் இறையில்லத்தின் உரிமையாளன் அவனது மாட்சிமையைக் காட்டினான். ஆம்! யோகேந்திர பால் மனரீதியாக நோய்வாய்ப்பட்டான். அவன் ஒரு பைத்தியமாக மாறியதோடு எப்போதும் நிர்வாணக் கோலத்தையே விரும்பினான். இவன் கௌரவத்துக்குரிய ஜெமீந்தார் சௌத்ரி ரகுபிர் சிங்கின் ஒரே ஒரு மகன்.
ஒரு முறை அவன் தனது தாய் அணிந்திருந்த ஆடைகளை கிழித்தெறிந்ததோடு அவருடன் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்ள முற்பட்டான். இதன் பின்னர் அவனது தந்தை மிகவும் வருத்தப்பட்டார். தனது மகனுக்காக அவர் இறைவனிடம் மன்றாடினார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. ஒரு நாள் அவன் தனது தாயை கடுமையாக பலவந்தப்படுத்தினான். அயலவர்கள் அவனது தாயைக் காப்பாற்றியதோடு அவனையும் விலங்கிட்டனர். மிகுந்த கோபமடைந்த அவனது தந்தை அவனைக் கொல்லும் அளவுக்கு ஆத்திரமடைந்தார்.
அவனைக் குணப்படுத்த சோனிபட்டில் மத்ரஸா ஒன்றில் உள்ள மௌலானாவிடம் கூட்டிச் செல்லுமாறு ஒரு சிலர் ஆலோசனை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் மௌலானாவைத் தேடிச் சென்றார்.
மௌலானா வழக்கமாக தொழுகைக்காக வருகின்ற பாவனா மஸ்ஜிதின் இமாமை சந்திக்குமாறு ஒரு கடையின் பராமரிப்பாளர் அவருக்குக் கூறினார். பாபரி மஸ்ஜிதின் அழிவுக்குப் பின்னர் குறுகிய காலத்துக்குள் மௌலானா ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில் இந்த மாபெரும் சோகத்துக்கு முஸ்லிம்களாகிய நாமும் ஒரு விதத்தில் காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இஸ்லாத்தைப் பற்றி நாம் அவர்களுக்குக் கூறி ‘தஃவா’வை எத்தி வைக்கத் தவறியது ஒரு குற்றம் என அவர் அடையாளப்படுத்தி இருந்தார். நாம் அவர்களுக்கு தஃவாவை எத்தி வைக்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். யோகேந்திர பாலின் தந்தை சௌத்ரி ரகுபிர் சிங் பாவனா மஸ்ஜிதை அடைந்து அந்த இமாமை சந்தித்தார். அந்த இமாம் மௌலானாவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அந்த இமாம் ”இவருடைய மகனுக்கு அல்லாஹ்வினுடைய வேதனை இறக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை தழுவுவதன் மூலமே இவரை குணப்படுத்த முடியும்” எனக்கூறினார். நிர்வாணக் கோலத்தில் விலங்கிடப்பட்ட யோகேந்திராவை சௌத்ரி, பாவனா மஸ்ஜிதுக்கு மௌலானாவை சந்திக்கவென கூட்டி வந்தார். அவர் மௌலானாவின் காலில் விழுந்து, எவ்வளவு முயற்சி செய்தும் யோகேந்திராவை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையை தெரிவித்தார். அவரை எழுப்பி நடந்ததை விளக்குமாறு சௌத்ரியிடம் மௌலானா கூறினார். நடந்த விடயங்களை சௌத்ரி விளக்கினார்.
அனைத்தையும் கேட்ட மௌலானா, அனைவரும் தவறு செய்பவர்களே என்ற யதார்த்தத்தை விளக்கி விட்டு யோகேந்திரவை குணப்படுத்த உத்தரவாதம் அளித்தார். மௌலானா, மக்களிடம் யோகேந்திரவுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொண்டார். மக்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தனது தலைப்பாகை ஒன்றினால் யோகேந்திரவின் தனிப்பட்ட அங்கங்களை மறைத்தார். இதனைத் தொடர்ந்து மௌலானா , சௌத்ரிக்கு இஸ்லாத்தை எத்தி வைத்தார். அவரும் மகிழ்ச்சியுடன் இஸ்லாத்தை ஏற்றார்.
இருவரும் வுழு செய்து விட்டு மொஹமட் உஸ்மான் மற்றும் மொஹமட் உமர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள். இவர்கள் கிராமத்துக்கு திரும்பியதோடு இருவருடைய மாற்றமும் பிராந்தியம் முழுக்கத் தீயாகப் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட ஒரு சில செல்வாக்கு மிக்க இந்துக்கள் இவர்களைக் கொன்று விட திட்டம் தீட்டினர். இதையறிந்த உள்ளூர் பள்ளிவாசல் இமாம் இருவரையும் புலட் என்ற இடத்துக்கு 40 நாட்கள் தப்லீக் ஜமாஅத் குழுவினரோடு தஃவா பணிக்கு அனுப்பி வைத்தார். உமருடைய (யோகேந்திர) தாயும் இஸ்லாத்தை தழுவினார். உமர் இப்போது நல்லதொரு முஸ்லிம் குடும்பத்தில் மண முடித்து டில்லியில் ஒரு தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
தமிழில் : எம்.ஏ.எம்.அஹ்ஸன்
Thanks: Vidivelli
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2QOSB9Z
via Kalasam
Comments
Post a Comment