வடகிழக்கு பிரச்சினைகளை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரும் ஜனாதிபதி
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.
வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத் தன்மைகள் தொடர்பாகவும் அத்தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற தடைகள் பற்றியும் மக்களுக்கு சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் கடந்த அமர்வுகளில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
வட, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வட, கிழக்கு பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் சமூக தாக்கங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஸ்ரீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கே.கோடீஸ்வரன், அங்கஜன் ராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் காணப்படும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் அதன்போது எழுகின்ற தடைகள் பற்றியும் அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்கள்.
அக்கருத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் செவிமடுத்த ஜனாதிபதி, இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் தெரிவித்தார்.
தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச - தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, யாழ் இராணுவ கட்டளைத்தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச அதிபர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2rIzbVy
via Kalasam
Comments
Post a Comment