இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் விமான சேவை இரத்து
காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெயிஷ் - முகமது அமைப்பு, கடந்த 14ஆம் திகதி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை, நேற்று முன்தினம் (26) தாக்குதல்களை நடத்தியது.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், தொடர் பதற்றம் நிலவிவருகிறதென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மீது கண்டிப்பாக தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து தயார் நிலையில் உள்ளதாக, இந்தியா தரப்பில் இருந்தும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படையின் f-16 ரக போர் விமானம் இந்தியாவின் வான் வெளியில் நேற்றுக் காலை அத்துமீறிப் பறந்ததால், அதிரடியாக அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவின் இரண்டு போர் விமானங்கள் வெடித்துச் சிதறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்திய விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். எனினும், அவரின் அறிவிப்பை இந்தியா முற்றிலும் மறுத்துள்ளது.
இந்தச் சம்பவங்களால் இந்திய எல்லையில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு, ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், லே ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களைத் தற்காலிகமாக மூட இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் வழியாகப் பணிக்கும் இந்திய விமான சேவையும் தற்காலிகமாக இரத்துச்செய்யப்பட்டு, வேறு பாதையில் அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறன.
இதேபோன்று பாகிஸ்தானில், இஸ்லாமாபாத், லாகூர், மூல்தான், சாயல்கோட், பைசலாபாத் ஆகிய நகரங்களில் உள்ள உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2IGqNB6
via Kalasam
Comments
Post a Comment