அம்பாறை பள்ளிவாயல் இனவாத தாக்குதல் : முஸ்லிம் தலைவர்களுக்கு வேண்டுகோள்
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்டஈடுகளை தொடர்ந்தும் கால தாமதப்படுத்தாமல் விரைவில் பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்களும் பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாக சபைத்தலைவர்களும் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலின் சேதம் 4 ½ கோடி ரூபாவென அப்போதைய நிர்வாக சபையினால் மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் பள்ளிவாசலுக்கான சேதம் 27 மில்லியன் ரூபா என அரச நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நஷ்டஈடாக 27 மில்லியன் ரூபா வழங்கமுடியாது எனவும் ஒரு மில்லியன் ரூபாவே நஷ்டஈடாக வழங்க முடியும் எனவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பள்ளிவாசலுக்கு நஷ்டஈடாக வழங்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த 27 மில்லியன் ரூபாவும் தாமதமில்லாமல் வழங்கப்படவேண்டுமென பள்ளிவாசலின் அப்போதைய தலைவர் ஏ.எல்.ஆர். ஹாரூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, புனர்வாழ்வு அதிகாரசபையின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடாக 3.6 மில்லியன் ரூபாவே வழங்கப்படவுள்ளதாகவும், அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஒரு மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை வன்செயல்கள் இடம்பெற்று ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் நஷ்டஈடுகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார்.
அம்பாறையில் இயங்கிவந்த காசிம் ஹோட்டலில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்ட உணவுகள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பரிமாறப்படுகின்றன என்று குற்றச்சாட்டி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இரவு பெரும்பான்மை இனத்தவர்கள் ஹோட்டலைத் தாக்கியதுடன் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலையும் தாக்கினார்கள். அம்பாறையில் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் தொடர்ந்தும் வழங்கப்படாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2VzcLmz
via Kalasam
Comments
Post a Comment