“அநாதையாகும் மூன்றாம் தேசியம் ” ஜெனியாவில் ஆரத்தழுவ யாருமில்லையா ?

Geneva , Maithiri, Ranil, Mahinda - Suaib M Caseem 
சுஐப் .எம் . காசிம்

ஜெனீவா அமர்வின் ஆரம்பம் மீண்டும் இலங்கை அரசியலின் மறைக்கப்பட்ட பக்கங்களை திரை விலக்க ஆரம்பித்துள்ளன. ராஜபக்ஷ நிர்வாகத்தை தோற்கடித்து ஆட்சி, அதிகாரத்க் கைப்பற்றும் முயற்சிகளில் பல தடவைகள் சறுக்கி விழுந்த ஐக்கிய தேசிய கட்சி, கடைசி சந்தர்ப்பத்தில் கையாண்ட யுக்தியே சர்வதேசத்தின் தலையீடாகும். நாட்டின் சகல தொழிற் சங்கங்கள்.பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து 2015 இல் ஏற்படுத்திய மிகப்பெரிய அரசியல் கூட்டே, மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது. இல்லா விட்டால் இன்னும் இருபது வருடங்களுக்கு ராஜபக்ஷக்களின் சட்ட ஆட்சியும், கடும்போக்கு கெடுபிடிகளும் தொடர்ந்திருக்கும். 

ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் சிறுபான்மைக் கட்சிகள் உட்பட பல அமைப்புக்களை ஒன்று திரட்டியமை சர்வதேசத்தின் சாதனை மட்டு மல்ல. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தெற்கில் விழிப்படைந்த, அல்லது விழிப்படைய வைக்கப்பட்ட பௌத்த கடும் போக்கும், ஐக்கிய தேசிய முன்னணியைப் பலப்படுத்தியது. குறிப்பாக தமிழர்களும், முஸ்லிம்களும், மஹிந்தவின் போக்கினால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்புற்ற சிங்களவர்களும் ஆட்சிமாற்றத்துக்கு அணி திரண்டனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கம்,சர்வதேசத்தின் வலைப்பின்னலை மீறிச் செயற்பட முடியாதிருந்தது.இலங்கை அரசாங்கம் தங்களுக்கான கைம்மாறுகளை இன்னும் சரியாகச் செய்யவில்லை என்ற சர்வதேசத்தின், ஆதங்கமும், ஆத்திரமும், தற்போது ஆரம்பமாகியுள்ள ஜெனீவா அமர்வில் மீண்டும் எதிரொலிக்கு மெனவும் எதிர்பார்க்கப் படுகிறது. 2015 இல் இந்த அரசாங்கம் வந்த கையோடு சர்வதேசத்தின் சில கடப்பாடுகளுக்கு கட்டுப்பட வேண்டியிருந்தது.போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்தில் நடத்துதல், காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, தகவலறியும் சட்டமூலம்,  புதிய அரசியலமைப்பு, எனப் பல விடயங்களுக்கு 2015 09 22 ஜெனீவா அமர்வில் அரசாங்கம் உடன்பட்டது.வெளிநாட்டு அமைச் சராக இருந்த மங்கள சமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடன்பாட்டுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

எவராலும் வெல்லப்பட முடியாத தேர்தலை வென்று தந்த கைங்கர்யமாக இதைச் செய்ய வேண்டும். இதுதான் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு. சிங்கள தேசத்துக்கு எதிரான பல தீயகரங்கள் இந்த எதிர்பார்ப்புக்குப் பின்னாலுள்ளதாகக் கூறுவதும், ஐரோப்பாவுக்கு எதிரான மன உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் மூலதனப் படுத்துவதும், நாட்டைப் பிரிக்கும் நிகழ்ச்சி நிரல் இன்னும் கைவிடப்படவில்லையென்ற பீதியைத் தெற்கில் பரவவிட்டு அரசியலில் நிலைப்பதுமே மொட்டு அணியின் "ரெடிமேட்" திட்டம். 

தற்போதைய ஜெனீவா அமர்வுகளும் அங்கு நிகழவுள்ள நிரல்களும் மஹிந்த தரப்பு க்கு வாய்ப்பாகலாம்.இந்த வாய்ப்புக்களின் வாடைகள் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவுக்கு நம்பிக்கையூட்டிற் று. உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்புடன் இணங்கிய விடயங்கள் உள்நாட்டு சிவில் யுத்தம் நடைபெற்ற நாடுகளில் கட்டாயம் அமுல் படுத்தப்பட வேண்டியவையே. இந்த அமுலாக்கம் எவருக்கும் பக்கச்சார்பாக இருக்கக் கூடாதென்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் கடமைகள் என்ன? யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பொது மக்களுக்கு நடந்த கதியைப்பற்றி கண்டறிவதா?அல்லது போரில் ஈடுபட்ட இரு தரப்பிலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பரிகாரம் தேடுவதா என்பதில் குழப்பங்கள் உள்ளன.பொது மக்களைத் தேடுவதானால் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும், தேட வேண்டும். இவர்கள் கடத்தப்பட்டனரா? கொல்லப்பட்னரா? சித்திரவதைக்குள்ளாகினரா? யாரால் இக்குற்றங்கள் இழைக்கப்பட்டன. போரில் நேரடியாக ஈடுபட்ட புலிகளைத் தேடுவதானால், இராணுவத்தினரையும் தேட வேண் டும். இதுதான் மஹிந்த தரப்பு 2015 க்குப் பின்னர்கையாளும் அரசியல் யுக்தி. 

எந்தக்கூட்டுத் தன்னை வீழ்த்தியதோ, அந்த அரசியல் கூட்டின் வியூகத்திலுள்ள பாதகங்களை, தேசப்பற்றுக்கு எதிராக்குவது, இராணுவ வீரர்களுக்கு எதிரான சதியாகச் சித்தரிப்பது. இதிலுள்ள கவலை முஸ்லிம்களும் காணாமல் போயுள்ளதாகக் காட்டப்படாமையே. போரியல் குற்றங்கள் படையினரால் மட்டும் செய்யப்படவில்லை எனவும்,புலிகளும் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் விவாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

இதில் ஒன்றைச் சிந்திக்க வேண்டி உள்ளது. அமெரிக்கா,ஐரோப்பாவைப் பொறுத்த வரை புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கப்பட்டது. எனவே பயங்கரவாத அமைப்பிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது?சட்ட நடவடிக்கை எடுக்கவும் இயலாது.ஒரு குறுகிய எல்லைக்குள் புலிகள் நடத்திய அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள் ளவும் இல்லை.இதனால் சட்ட அந்தஸ்துப்பெறாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் முடியாது.

இது மஹிந்த தரப்புக்கு தெரியாத விடயமில்லை.ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்று செயற்படும், சுரேந்திரன், ருத்ரகுமார், மாணிக்கவாசகன் ஆகியோரை புலிகளின் பிரதிநிதிகளாக விசாரிக்க வேண்டும். ஐரோப்பா இவர்களின் அரசை ஏற்பது, இலங்கையின் ஆள்புலத்துக்கு ஆபத்து என்பதே அவர்களின் வாதம். இந்த விவாதங்களின் யதார்த்தத்தால் கவரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 2015 க்குப் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் மிக முக்கிய தீரமானத்திலிருந்து விலகிக் கொண்ட நிகழ்வாக இது கருதப்படுகிறது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுத்த, வழங்கப்பட்ட வாக்குறுதிகள் சிலதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக,கடந்தவாரம் ஜனாதிபதி ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

குறிப்பாக படையினரைக் காட்டிக் கொடுக்கும் ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அமுல்படுத்தாது என்ற பாணியில் அவரது செவ்வியிருந்தது. "கடும்போக்கிற்குள் நுழையும் மைத்திரியின் வெள்ளோட்டம்" என்ற தலைப்பில் அண்மை யில் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன். இவர் முற்றாக இப்போக்கிற்குள் நுழைந்து விட்டால் இவரை நம்பி வாக்களித்த சிறுபான்மையினர் என்ன செய்வது. ஐக்கிய தேசிய முன்னணி யால் சிறுபான்மைக் கட்சிகளை தொடர்ந்து தக்க வைக்க முடியுமா? ‘மன்னிப்போம், மறப்போம்’ இரு தரப்பினரும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக. அண்மையில் பிரதமர் தெரிவித்தார். இதற்கு தமிழர் தரப்பிலிருந்தும், தென் பகுதியிலும் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.


மன்னிப்பதற்கும், மறப்பதற்கும் இது குடும்பச் சண்டையில்லை எனவும் குற்வாளிகளைத் தண்டிப்பதாக, ஜெனீவாவில் இணங்கப்பட்ட விடயங்களிலிருந்து அரசு விலக முடியாதென்றும், ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார். தென்னாபிரிக்க விடயங்களைப் போன்று இலங்கை விடயங்களை மன்னிக்க முடியாதென நவநீதம்பிள்ளை கூறியிருப்பதும், அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதுவர் இலங்கை வரவுள்ளமையும் இலங்கையின் இரு தேசிய இனங்களோடு சம்பந்தப்படும் அரசியல் அதிகாரங்களின் பங்கீட்டுடன் தொடர்பான வை.குறிப்பாக படையினரை இலக்கு வைத்து காய் நகர்த்தல், இதற்கு முடியாது போனால் முப்பது வருடமாக தமிழர்கள் இழந்தவற்றுக்கு சரியான மாற்றீடாக உரிய அரசியல் தீர்வை வழங்குதல். இந்த நகர்வுகள் என்றாவது தீர்வின் இலக்குகளை எட்டும்.இதில் நாட்டின் மூன்றாவது தேசிய இனமெனக் கூறும் முஸ்லிம்கள் அடைந்து கொள்ளவுள்ள தீர்வுகள் என்ன??? 


from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2EkhgKx
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!