காணி விவகாரம் : ஜனாதிபதிக்கு றிப்கான் பதியுதீன் அவசர கடிதம்

Rifkhan Bathiudeen letter to President 
ஊடகப்பிரிவு

வடக்கில் கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகள் , கிராமங்களை அவசரமாக விடுவித்து மீள் குடியேற்றங்களை துரிதப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அடையாளமாக வடக்கில் பல காணிகள், ஆங்காங்கே விடுவிக்கப்பட்டு மீளக்குடியேற்றங்கள் , சுய தொழில் ஊக்குவிப்புகள்,அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தங்கள் மீதான நம்பிக்கை வலுவடைந்து வருகின்றது.

நல்லிணக்க அடையாளங்களின் இம்முயற்சிகள் வடக்கில் உள்ள மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை, முள்ளிக்குளம் மற்றும் முசலி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட காணிகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நீண்டகால போரில் வாழ்விடமிழந்து ,தொழிலிழந்து ,உறவுகளை தொலைத்து விரக்தி நிலையில் வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு உங்களது வழிகாட்டல்கள் விடியல்களாக மாறவேண்டும். பாதுகாப்பு காரணமாக படையினரால் கையகப்படுத்தப்பட்ட சிலாவத்துறை காணிகளை விடுவித்து மக்களை குடியேற்றுவதில் ஜனாதிபதியாகிய உங்களது கரிசனை அவசரமாக தேவைப் படுகின்றது.

சிலாவத்துறையில் இந்தமக்களுக்கு சொந்தமான 42 ஏக்கரில் 06 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ள போதும் இன்னும் எஞ்சியுள்ள 36 ஏக்கர் காணிகளை மக்களுக்கு கையளிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இந்த மக்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் குறிப்பிட்ட காணிகளில் 180 வீடுகளும் 68கடைகள், 01 கூட்டுறவுச்சங்கம் ,பெற்றோல் நிலையம் , கிராம சங்கக் கட்டிடம், இரண்டு பள்ளிவாசல்கள் ,இந்துக்களின் அம்மன் கோவில் ,கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம் உட்பட வைத்தியசாலை ஒன்றும் உள்ளடங்கி இருந்தன.


சமாதானம் ஏற்பட்டு 2010 ஆம் ஆண்டளவில் சிலாவத்துறை வைத்தியசாலையின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டே அங்குள்ள நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் கடற்படை முகாமின் மேற்குப்பக்கத்தின். எல்லைப்புறத்தில் இந்த வைத்தியசாலை அமைந்துள்ளதால் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதில் அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. இந்த வைத்தியசாலையை சூழவுள்ள 31 கிராம மக்கள் இங்கு வந்தே சிகிச்சைபெறுகின்றனர். அத்துடன் கடற்படை முகாமின் கிழக்குப் பக்க எல்லையில் அமைந்திருக்கும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் கடற்படை முகாமுக்கு அருகே செல்லும் பாதை வழியாகச்சென்றே உட்பிரவேசிக்க வேண்டி இருக்கின்றது. அதுமாத்திரமன்றி பாடசாலைச் சிறார்கள் ஒரு பய பீதியுள்ள சூழலிலேயே கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அடுத்து, மன்னார் மாவட்டத்தின் கிறிஸ்தவ பூர்வீக கிராமமான முள்ளிக்குள மக்களும் இவ்வாறன கஷ்ட நிலை ஒன்றுக்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தில் பொது மக்களுக்கு சொந்தமான சுமார் 1200 ஏக்கர் காணிகளில் கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இந்த காணியில் 100 ஏக்கர் காணியை விடுவிப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்ன ஏற்கனவே உறுதியளித்திருந்த போதும் ஆக 23 ஏக்கரே விடுவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள காணிகளில் விவசாய நிலங்கள் ,குளங்கள் மற்றும் மேய்ச்சல் தரைகள் உள்ளடங்குவதால் பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

அதுமாத்திரமன்றி 2017-03-24 ஆம் திகதி நீங்கள் ரஷ்யாவுக்கான விஜயத்தின் மத்தியிலும் வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி அவற்றை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டிருந்தீர்கள். இந்த திட்டத்தின் கீழ் 40 ஆயிரத்து முற்பது ஹெக்டயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த பிரதேசமானது உண்மையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த அவர்களின் சொந்தக் குடியிருப்பு என்பதால் அந்த மக்கள் 40 நாட்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை அப்போது நடத்தி இருந்தனர். அதுமாத்திரமின்றி இந்த பிரதேசத்தில் அந்த வேளை தொடர்ந்து பதற்ற நிலை நிலவியதால் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா , தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் தற்போதைய மேல் மாகாண ஆளுநருமான ஆசாத் சாலி உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உங்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து இந்த அநீதியை உங்களுக்கு எடுத்துரைத்த போது இது சம்மந்தமாக மக்கள் சார்ந்த முடிவை எடுப்பதாக உறுதியளித்திருந்தீர்கள்.

இது தொடர்பில் உங்களின் செயலாளரினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு களத்திற்கு சென்று உண்மை நிலைகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றையும் தங்களுக்கு சமர்ப்பித்திருந்தது. எனினும், இதுவரை அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். 

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! யுத்த முடிவின் பின்னர் இந்த பிரதேசங்களில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எந்தக் காரியங்களும் இடம்பெறவில்லை. எனவே சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி மக்களின் வாழ்வில் விடியலேற்ற வேண்டும். அதேபோன்று கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழ்ந்த முள்ளிக்குள மக்களின் பூர்வீக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் வில்பத்து வன பாதுகாப்பு என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தயவாக மீண்டும் வேண்டுகின்றேன்.

எனவே, சொந்த நிலங்களை இழந்ததால் வாழ்வியலில் எதிர்கால நம்பிக்கையில் தொலைத்துள்ள மக்களின் நம்பிக்கையில் ஒளியேற்றுவது ஜனாதிபதி ஆகிய உங்களின் கடமையாகவுள்ளது. இதனுடன் தொடர்புடைய அமைச்சும் உங்களிடம் உள்ளதால் காணிகளை உடன் விடுவிக்க முடியும் என இம்மக்கள் நம்புகின்றனர்.

அதேபோல் தாயாரை நிரந்தரமாக இழந்தும், தந்தையாரை சிறையில் தொலைத்தும் நொந்து போயுள்ள சுதாகரின் எதிர்காலம் கருதி சுதாகரனையும் சிறையிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோருவதோடு. காணாமல் ஆட்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளிலும் நீங்கள் உங்கள் பார்வையை செலுத்துமாறும் வேண்டுகின்றேன். அத்துடன் கேப்பாபிலவு மக்களின் நீண்ட கால போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த மக்களின் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் சிறுபான்மையினரின் நம்பிக்கையை வெல்வதற்கு உதவுமென்று அதிமேதகு. ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் எழுதியுள்ள இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2EBNu5s
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!