இயங்குகின்ற இயக்கங்களும், இயங்காத இஸ்லாமும்...
இலங்கை போன்ற ஒரு முஸ்லிம் சிறுபான்மை நாட்டில் இஸ்லாம் பல வழிகளில் பரவலுக்குள்ளாகியது, அறபுக்களின் வர்த்தகம், ஆதம் மலைக்கான யாத்திரை, நாடுகாண் பயணங்கள்,இந்திய இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் செல்வாக்கு போன்ற பல காரணிகளால் இலங்கையில் இஸ்லாம் பரவியது எனலாம், ஆனாலும் ஆரம்ப காலத்தில் வேகமான அதன் வளர்ச்சி பின்னர்,குறைவடைந்து, ,இன்றைய தேக்கத்திற்கான காரணங்களில் ஒன்றான #இயக்கவாதம் பற்றிய பதிவே இதுவாகும்,
இஸ்லாத்தின் செழுமை,
இஸ்லாமும் அதன் தத்துவப் பின்பற்றல்களும் முழு உலகிற்கும் பொதுவானவை அவை ஒரு குறித்த இனத்திற்கோ, சமுகத்திற்குள்ளோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல, அந்தவகையில் அதன் பரவலும், செழிப்பும் உலகின் எல்லா சமூகங்களுக்கும் சென்றடைய வேண்டிய தேவை உண்டு, அதனை முன்வைத்து செயற்படுவது அனைவரதும் கடமை ,அந்தவகையில் எல்லா முஸ்லிம்களும் ஏதோ ஒரு வகையில் தம்மாலான முயற்சியை மேற் கொள்ளலாம்,
இயக்கவாத இஸ்லாம்,
இலங்கையில் இஸ்லாம் முகவும் செழிப்பான நாகரிகத்தின் நிர்மாண சக்திகளில் ஒன்றாகவும், இன ஒற்றுமைக்கான அதன் வழிபாட்டு மரபுகள், போன்றவற்
றை மட்டுமல்லாது, ஏனைய சமயங்களோடு ஒன்றித்த சமூக நிகழ்வுகளையும் கொண்டதாகவே தன்னை வளர்த்து வந்திருக்கின்றது, ஆனால் பிற்கால இயக்கவாதங்களின் தோற்றம், இஸ்லாத்தின் விசாலத் தன்மையைக் குறைத்து ஒரு "குண்டான் சட்டிக்குள்குதிரை ஓடும் "தன்மைக்குள்ளாக்கி இருக்கின்றது எனலாம், இது இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாத்தின் அறிமுகத்திற்கும் பரவலுக்குமான தடையாகவே நோக்கப்பட வேண்டி உள்ளது,
இயக்கவாத நோக்கம்,
இஸ்லாத்தின் பெயரில் இயக்கவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் தமது நோக்கில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும், விசாலத்தையும் கவனத்திற் கொள்ளாது தமது இயக்க வளர்ச்சியை மட்டுமே கவனத்திற் கொண்டு செயற்படுகின்றனர், இது உண்மையில் இலங்கை போன்ற ஒரு பன்மைத்துவ சமூகம் வாழும் ஒரு நாட்டில் இஸ்லாமும், அதன்பண்பாடும் வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் காரணிகளில் ஒன்றாகவே உள்ளது,
மட்டுமன்றி, எல்லாச் சமூகங்களையும், பண்பாடுகளையும் இணைத்துச் செல்லும் இஸ்லாமிய மரபில் இருந்தும், இயக்கவாதிகள் விலகி முஸ்லிம்களிடையே மட்டுமே தமது இயக்கவாத பரப்பலை முன்வைக்கின்றனர், இது தமது சமயத்தின் பிரதான நோக்கை மறந்து வழிமாறிச் செல்லும் தன்மையையே குறிக்கின்றது,
இலங்கையில் இயக்கவாதம் அவசியமா?
இலங்கை தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாக்க் கொண்ட ஒரு நாடு அந்த வகையில் அவர்கள் கிரிகைகள், வழிபாடுகள் ,புனிதம் போன்ற பல செயற்பாடுகளை வைத்தே தமது சமயத்தை விசாலப்படுத்திக்கொள்கின்றனர், அந்தவகையில் அதற்கு இயைபான தன்மைகளுடனான இஸ்லாமிய மனப்பாங்கு, ஒன்றித்த நிலை என்பனவும் எம் முன்னோர்களால் வகுக்கப்பட்டு பின்பறப்பட்டு வந்த்தன் விளைவே, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றிய நல்ல மன நிலை பெரும்பான்மை பௌத்தர்களிடையே நிலவக்காரணமாக இருந்திருக்கின்றது,
ஆனால் தூய இஸ்லாம் என்ற பெயரில் " பிற நாடுகளில் பின்பற்றப்பட்ட மாதிரிகளை " இலங்கையிலும் இவ் இயக்கங்கள் அறிமுகம் செய்ய முற்பட்டதன் விளைவே இன்றைய இன முரண்பாட்டிற்கான காரணிகளில் பிரதான ஒன்றாகவும் உள்ளதுடன், அது முஸ்லிம்களின் இருப்பை ஒரு #ஓரத்துச்_சமூகமாகவும் மாற்றி அமைத்துள்ளது,
அந்தவகையில் பௌத்தத்தையும் அதனைப் பின்பற்றும் மக்களின் தன்மைகளையும் அறிந்து அதற்கேற்ப செயற்படாமல், தான்தோன்றித்தனமான இயக்கவாதக் கருத்துக்களை இலங்கையில் விதைக்க முற்பட்டதன் விளைவே இஸ்லாத்தை ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்வதில் தாமதத்தையும், தடைகளையும் கொண்டு வந்துள்ளது எனலாம்.
உள் குத்து வெட்டுக்கள்,
இலங்கையில் இஸ்லாத்தின் பெயரில் இயங்கும் இயக்கங்கள் தமக்கிடையேயான போட்டித்தன்மை, பிரபலம், அங்கத்துவ ஆட்சேர்ப்பு, நிதிச் சேகரிப்பு,போன்றவற்றிற்காக உள்குத்து வெட்டுக்களை அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளனர், வருடாந்தம் குட்டி போட்டுக்கொண்டிருக்கும், இயக்கங்களின் பிரிவினைகளும், அதன்விளைவாக தோற்றம் பெறும் புதிய பள்ளிவாசல்களும்,செயற்பாடுகளும்
இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய அறபுக்களின் "கோத்திரச் சண்டைகளை" நோக்கியே எம்மை அழைக்கின்றன, மட்டுமல்ல முஸ்லிம்களையும்,ஏனையோரையும், வெறுப்புக்கும், சலிப்புக்கும் உள்ளாக்கியும் வருகின்றது,
அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற "ஒரு மிம்பரில் இரு இமாம்" என்ற நிலை, மாவனல்லை வன்முறை, வாழைச்சேனை ,பள்ளிவாசல் முரண்பாடுகள் என்பன, இதன் உச்ச கட்ட அநாகரிகம் என்றே கூறலாம்,
இயக்கங்களின் தோல்வி,
இலங்கையில் இஸ்லாம் வளர்க்க பல்வேறு காரணங்களைக் கூறி தோற்றம்பெற்ற இயக்கங்கள் , தமது நோக்கமான இஸ்லாத்தை வளர்ப்பதை செய்யாது தமது இயக்கங்களை மட்டுமே வளர்த்துள்ளனர், இதுவரை காலமும், மரபுரீதியான முஸ்லிம்கள் தாம் இலங்கைப் பண்பாட்டுடன் இணைந்து தனித்துவத்துடனும், முஸ்லிம்கள் என்ற மரியாதையுடனும் வாழ்ந்த வாழ்வியல் பாரம்பரியத்திற்கும் இவ் இயக்கங்கள் இன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன,
அந்தவகையில் இலங்கையில் இயக்கவாதம், முஸ்லிம் இருப்பியலுக்கான எதிர்வினையையே உண்டு பண்ணி உள்ளதுடன், அவற்றின் செயற்பாடுகள் பிரிவினைப்பட்ட சமூகத்தையே உருவாக்கி உள்ளது, அந்த வகையில் இயக்கவாத சிந்தனை இலங்கையில் தோல்வி அடைந்த ஒன்றாகவும், பொருத்த மற்றதாகவும், மனித சக வாழ்வுக்கான அச்சுறுத்தலாகவும் மாறி தோல்வி கண்டுள்ளது,
என்ன செய்யலாம்,
இயக்கவாத்த்தின் பெயரால் இஸ்லாமியப் பணி புரிவதாக கூறி, அடிப்படை வாத்த்தின்பால் சமூகத்தை அழைப்போர், வழி நடத்துவோர் ,தமது சமூகங்களுக்குள்ளேயே இன்னும் பிரிவினைகளையே உண்டு பண்ணிவந்துள்ளனர்,
அந்தவகையில் இஸ்லாத்தின் பெயரால் இதுவரை தமது இயக்கத்தை வளர்த்ததை விட்டு விட்டு இனியாவது இலங்கையில் இஸ்லாமும் அதன் விசாலத்துவமான ஒன்றித்த பண்பாடும் பரவுவதற்கான பணிகளைச் செய்ய இவர்கள் முன்வர வேண்டும், அரசியல் கட்சிப் பிளவுகளால் மக்கள் அடைந்துள்ள சமூக அரசியல் துயரத்திற்கு நிகரான துயரத்தையே இயக்கப் பிரிவுகளும் வழங்கி இருக்கின்றன,,
1).பொது மக்கள்,புத்திஜீவிகள், உலமாக்களிடையே, சமயப் பிளவு,
2). அளவுக்கு மீறிய புதிய இயக்கப் பள்ளிவாசல்களின் தோற்றம்,
3). பொதுத்திட்டமற்ற சமூக, சமயச் செயற்திட்டங்கள்,
4). மக்களது அந்த்தியவசிய உலகியல் பிரச்சினைகளை புறந்தள்ளிய சமய மனப்பாங்கு,
5),அடிப்படைவாத, பிற்போக்குப் பிரசாரங்கள்,
போன்றனவும், இவர்களின் சமூகத் தாக்கம் எனலாம்,
அந்தவகையில், எல்லை மீறிய இயக்கவாத வெறியர்களை கட்டுப்படுத்துவதும், புறக்கணிப்பதும், இன்றைய சமூகத்தின் கடமையாகவே கருத வேண்டி உள்ளது, இன்றேல் ,இயக்கம் என்ற பெயரில் இடம்பெறும் அத்து மீறல்களையும், சமூக அழிவுகளையும் நாமும் ஆதரித்தவர்களாகவே கருதப்படுவதோடு,
இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாம் #வன்முறையாளர்களின்_மார்க்கம் என்ற பழிச்சொல் இலகுவாக முழுச்சமூகத்தையும் வந்தடைய இவ் இயக்கவாதிகள் காரணமாக அமைவார்கள் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை, எனவேதான் காலமறிந்து, இவர்களுக்கு கடிவாளமிட முயற்சிப்போம்,
"இயக்கப் பிரிவினையற்ற இயங்குகின்ற இஸ்லாமே இன்றைய இலங்கையின் தேவையாகு
MUFIZAL ABOOBUCKER,
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
29;03;2019,
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform https://ift.tt/2I1y9gv
via Kalasam
Comments
Post a Comment