ACMC கட்சியிலிருந்து விலகுவதாக ஜெமீல் அறிவிப்பு !
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்து ஜெமீல் விலகினார்; கட்சியின் தலைவருக்கு வரைந்த இராஜினாமா கடிதம் வெளிவந்துள்ளது...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நான் வகித்து வருகின்ற அனைத்து பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்வதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மிகவும் வருத்தத்துடன் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.
முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு விடுதலை இயக்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழ வேண்டும் என்ற எனது பெரும் எதிர்பார்ப்பை சமகால கட்சியின் செயற்பாடுகளில் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.
இந்த விடயத்தில் கட்சியின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக எனக்குத் தெரியவில்லை.
கட்சி செயற்பாடுகள் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் கட்சியின் உயர்மட்டத்தினரிடையே மஷூரா செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படாதிருப்பதானது எனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நான் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவனாக இருந்த போதிலும் இவ்விடயங்களில் எனது வகிபாகம் கேள்விக்குறியாக இருப்பதை உணர்கின்றேன்.
மேலும், கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளராக நான் இருக்கின்ற நிலையில் இப்பிரதேசத்தில் கட்சி நடவடிக்கைகளையோ மக்களுக்கான சேவைகளையோ முன்னெடுப்பதற்கு கட்சியின் உயர்பீடத்தில் இருந்து எனக்கு எவ்வித ஒத்துழைப்பும் கிடைப்பதாக இல்லை.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் எனது ஆதரவாளர்களும் பொது மக்களும் எழுப்புகின்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலையில், நான் இக்கட்சியில் தொடர்ந்தும் பயணிப்பதில் அர்த்தமில்லை என்கின்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன்.
ஆகையினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்கின்றேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் தங்களது அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்ததைத் தொடர்ந்து என்னில் நம்பிக்கை வைத்து, கட்சியில் என்னை முக்கிய பொறுப்புகளுக்கு நியமித்தமைக்கும் 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது ஐ.தே.க. தேசியப்பட்டியல் வேட்பாளராக பெயரிட்டமைக்கும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக நியமித்தமைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து விடை பெறுகின்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2OinCCl
via Kalasam
Comments
Post a Comment