முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பொறுப்புக்களை ஏற்குமாறு பௌசி வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்பட விருந்த பேராபத்தை தவிர்க்கும் வகையில் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது பதவியை பொறுப்பேற்குமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டினதும், சமூகத்தினதும் பாதுகாப்பைக் கருதி தமது பதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாடு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்கொள்கின்றேன்.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் என பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தி இருக்கின்றது. அது மத்திரமின்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவிலின் தலைவரின் அறிவிப்பும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் தெரிவுக்குழுவில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பூரண விளக்கமளித்துள்ளதோடு தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்தவர்களும் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர். இது தேசியத்தில் ஒரு புதிய மாற்றத்தையும் தெளிவையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகள், உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கள், பள்ளிவாசல்கள், அரபுக் கலாசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடனும் சிரத்தையுடனும் எனது தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டு வந்தனர். தொடர்ச்சியாக ஜனாதிபதி, பிரதமருடன் நடாத்தப்பட்ட பலசுற்று பேச்சுவார்த்தைகளின் விளைவாக நல்ல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

நேற்று (28) மாலை பிரதமருடன் நடாத்திய சந்திப்பின் பயனாக வன்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வேலைத்திட்டம் இன்ஷா அல்லாஹ் இன்று (29) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. ஆவணங்கள் சரி செய்யப்பட்ட பின் இன்னும் இரண்டு வார காலத்தில் குருநாகல் பிரதேச பாதிப்புக்களுக்கான நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி, நஷ்ட ஈடு வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பை பிரதமரின் வேண்டுகோளின் பேரில் எனது தலைமையில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் தொடர்ந்தேர்ச்சியாக கண்காணிப்பதற்கும் அவசரமாக செயற்படுத்துவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஷாபி உட்பட அப்பாவி இளைஞர்களின் முறைகேடான கைதுகளும் முடிவுக்கு கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை (20) மீண்டும் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்த போதும் பிரதமருடன் சில உறுதி மொழிகளை பெற வேண்டியதன் அடிப்படையில் இன்று அவ்விடயங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. எனவே, காலத்தை தாமத்திக்காது அமைச்சு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த காலங்களில் சமூகப் பொறுப்புடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி பேதம் பாராமல் செயற்பட்டது போன்று எதிர்வரும் காலங்களிலும் சமூகரீதியான பிரச்சினைகளுக்கு ஒற்றுமையும்டன் முகம்கொடுத்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக அமைகிறது. அத்துடன் இரு கட்சிகளும் சமூகப்பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும், இரண்டு கட்சிகளும் எதிர்வரும் காலங்களிலும் ஒற்றுமையாக செயற்படுவதுடன் பரஸ்பரம், பிரமுகர்கள் கட்சித் தாவல்களை தவிர்ந்துகொள்வதே ஒற்றுமைக்கு பலம் சேர்க்கும் என நான் திடமாக நம்புகின்றேன்.

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பிரதமரின் வேண்டுகோளின் படி இன்று (29) காலை அமைச்சர் வஜிர அபேவர்த்தன் அவர்களை நானும் ரவூப் ஹக்கீம் , ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சந்தித்து பேசவுள்ளோம்.

பிரதமருடான சந்திப்பில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, அமீர் அலி ,பைஷல் காசீம் , அலி சாஹிர் மௌலானா, அப்துல்லா மஹ்ரூப், முஜூபுர் ரஹ்மான் , மரைக்கார், நசீர், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2Y6S6Ma
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!