நம்பகத்தன்மை கொண்ட வேட்பாளருக்கே எமது கட்சி ஆதரவளிக்கும் : ACMC தலைவர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்பே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்கும். முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு உறுதி வழங்கும்,
நம்பகத்தன்மை கொண்ட வேட்பாளருக்கே எமது கட்சி ஆதரவளிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் “விடிவெள்ளி”க்குத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
“ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்பட்டதும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதமளிக்கும் வேட்பாளருக்கு நாம் ஆதரவு வழங்குவோம். இந்தத் தீர்மானம் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்திலே மேற்கொள்ளப்படும்.
அத்தோடு நாட்டில் இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி பொருளாதார வளர்ச்சிக்கு திட்டங்களை வகுத்துள்ள வேட்பாளர் தொடர்பிலும் எமது கட்சி கவனம் செலுத்தும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை எந்தத் தரப்புடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவில்லை.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் போதே, ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த முடியும் என்றார்.
இதேவேளை, அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் கலந்து கொள்ளவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி ஒன்றினை அமைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பிலும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவலர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2NFZhEP
via Kalasam
Comments
Post a Comment