முஸ்லிம்களின் நிலங்களை தமிழ் கூட்டமைப்பு அபகரிக்க முயற்சி : ஹரீஸ் காட்டம்
இந்த நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிங்களாகிய நாம் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறோம். எமது உரிமைகள், நிலங்கள், சொத்துக்களை பாதுகாப்பதில் பாரிய முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்த ‘முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாடு’ இன்று (4) தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.
தனது உரையில் மேலும்,
இந்த நாட்டில் தொடர்ந்தும் மார்க்கவிடயங்களை கடைபிடிக்க முடியுமா என்ற சவால் எம் முன்னால் உள்ளதுடன் எமது பூர்விக நிலங்களையும் அந்நியர்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதை விட இந்த நாட்டில் வாழும் முஸ்லிங்களின் தனிமனித பாதுகாப்பு பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எமது முஸ்லிம் உம்மத்து இவற்றுக்கெல்லாம் பயந்து ஒடுங்கி வாழ முடியாது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள முஸ்லிம் விவாக சட்டத்தை எண்ணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வெட்கப்படுகிறோம். கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறோம். அசைக்க முடியாத பலத்துடன் இருந்த மஹிந்த அரசையே வீழ்த்திய பெருமைக்குரிய முஸ்லிம் சமூகம் இன்னும் சில மாதத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட பேரம் பேசும் சக்தியாக இருக்கிறோம். நமக்குள் நாம் பிளவுபட வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த காலங்களில் இருந்த எமது தலைமைகள் இந்த சமூகத்திற்க்கு சிறப்பான சேவைகளை வழங்கியதை பெருமையோடு நினைவு கூர்கிறேன். இந்த சமூகம் சார்ந்த பிரச்சினைக்காக எல்லோரும் அமைச்சை இராஜினாமா செய்தோம். வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டு முகவராலயங்களின் அஜந்தாக்களுக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது.
ஒரு நாள் மட்டுமே இடம்பெற்ற சம்பவத்தை காரணம் காட்டி எம் முஸ்லிம் பெண்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் கொடுக்கும் தண்டனை மிக பெரியது. அதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது.
ஆண்டாண்டு காலமாக நாங்கள் வாழ்ந்துவரும் எமது பூர்விக நிலங்களை கையகப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி செய்கிறது. கல்முனை என்பது முஸ்லிங்களின் பழமையான நகரம். அந்த நகருக்கென்று பல சிறப்புகள் இருக்கிறது அதை பொறுத்து கொள்ள முடியாத இனவாதிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நாட்டின் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதே போன்றே வாழைசேனை, தோப்பூர் விவகாரத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த சதிகளை முறியடித்து சரியான அணுகுமுறை அரசியலை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் மற்றும் பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆளுநர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட உலமாக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்த பெருந்திரளான சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.
(நூருள் ஹுதா உமர்.)
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/33eK2YM
via Kalasam
Comments
Post a Comment