மாற்றுத் தலைமைகளின் முரண்பாட்டு முழக்கங்கள்; சிறுபான்மைத் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமா?
சுஐப் எம் காசிம்
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் புதிய முதலீடுகளில் சில கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்த கட்சிகளின் வருகைகள்,எந்தளவு தாக்கத்தை எற்படுத்தும். சிங்களச் சமூகத்தைவிடவும் சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து முட்டுக்கு வைத்த கம்புகள் தழைப்பதைப் போன்று பல கட்சிகள் முளைப்பதேன்? தேர்தல் காலங்களில் நாக்கிள் புழுவும் படம் எடுக்கும் என்பார்கள். இதைப்போன்ற படங்களையா புதிதாக முளைக்கும் கட்சிகள் திரையிடுகின்றன.
அரசியல் பங்கீடு,சுயஅதிகாரம், ஆள்புல எல்லைகளை அடையாளம் காண்பதற்கான நகர்வுகளில் சிறுபான்மைச் சமூகங்களின் பாரம்பரியக் கட்சிகள் விட்ட தவறுகளிலிருந்தா? இப்புதிய கட்சிகள் தழைக்கின்றன. இல்லாவிட்டால் பிழைப்புக்கு வழியின்றி ஏதாவது கோஷங்களுடன் அரசியலில் முதலிட இவை முனைகின்றதா? இந்தக் கேள்விகளுக்குத்தான் இன்று பலரும் விடைகளை எதிர்பார்க்கின்றனர். எனினும் இவை எவையும் புதிதாக முளைத்த கட்சிகளும் இல்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பாரம்பரியக் கட்சிகளில் முக்கியஸ்தர்களாகவும், பங்காளர்களாகவும்,
போராளிகளாகவும் இருந்தவர்களே புதுப்புது அணிகளில் சங்கமிக்கின்றனர்.
வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடுகளில் முரண்பாடுகளுள்ள இவர்களிடையே, ராஜபக்ஷக்களைப் பலப்படுத்துவது மட்டுமே ஒற்றுமையாகவுள்ளது.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டணியென, தற்போது அடையாளப்படுத்தப்படும் இக்கட்சிகளின் இயங்கு தளங்கள் கிழக்கையே மையப்படுத்தியுள்ளன. ஒரே தளத்திலிருந்து எழும் இரு சமூகங்களுக்கான குரல்களாகவுள்ள இக் கட்சிகளுக்கிடையில் ஒரு விடயத்திலும் இணக்கப்பாடுகள் இல்லை.இதுவும் இதிலுள்ள விசித்திரங்களில் பிரதானமானது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. ஆகிய சிறுபான்மை தலைமைகளில் அதிருப்பதியுற்றோர், தாம் சார்ந்த சமூகங்களுக்கான அபிலாஷைகளை வேறு பாதையில் சென்று அடையப் போவதாகச் சூளுரைக்கின்றனர். அவ்வாறானால் சிறுபான்மைச் சமூகங்களுக்கான இந்த மாற்றுத் தலைமைகள் இதுவரை ஏன்,தங்களுக்கிடையில் கலந்துரையாடவில்லை. "கிழக்கைப்பிரி" என்போரும்,"மட்டு.ஷரீஆ பல்கலைக்கழகத்தை மூடு" என்போரும்,முஸ்லிம்களால் கிழக்கில் தமிழர்களுக்கு ஆபத்து எனக் கருதுவோரும் இணைந்தோ? பிரிந்தோ தமிழர்களுக்கு சமஷ்டி தேவையில்லை எனவாதிடுவோரும் மனம் திறந்து பேச எவ்வாறு முடியும்? மிதவாத சிந்தனைகளை கைவிட்டு கடும்போக்கில் காலடி வைத்ததாலே, இதுவரைக்கும் இவர்களால் சந்திக்க முடியவில்லை. மிதவாதத்திலிருந்து நழுவி சற்று கடுமையான சித்தாந்தங்களால் தத்தமது சமூக உரிமைகளை வெல்லப்புறப்பட்டுள்ள இந்த மாற்றுத் தலைமைகள் தனிச் சிங்களச் சித்தாந்தத்துக்குள் இணைந்து எதைச் சாதிக்கச் சாத்தியம். சகோதர சமூகங்களுக்கிடையில்,வீணாக உருவாக் கப்பட்ட சமூகப் பகைகளைப் பழிவாங்குவதே இவர்களின் அரசியல் வியூகங்களாகும்.ஒட்டு மொத்தமாக பழிவாங்குவதற்கு பயிற்சியளிக்கப் படும் கூடாரமாக ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவுக்கு ஒரு விம்பத்தை கொடுத்திருப்பதும்,இம் மாற்று சிறுபான்மைத் தலைமைகளின் புதிய வருகைகளே!.
தேசிய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற மிதவாதச் சிந்தனையுள்ள சிறுபான்மைத் தலைமைகளும் இந்த அணியில் இல்லாமலில்லை. ராஜபக்ஷ கூடாரத்துக்குள் நுழைந்த, நுழையவுள்ள புதிய தலைமைகள் பற்றியதே இந்த ஆய்வு என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.
இது வரைக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் உறவாடும் சிறுபான்மைச் சமூகங்களின் பாரம் பரியக் கட்சிகளை உடைப்பது, இக்கட்சிகளுடாக, ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை தனக்கும் இல்லாது, எதிரிக்கும் இல்லாது தளம்பவைப்பது, இவ்விரு சமூகங்களுக்கு மத்தியிலும் பிளவு, பகையை உருவாக்க,அடையாளம் காணப்படாத ஏஜண்டுகளை களமிறக்குவது,ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர் புனையப்பட்டுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற சொல்லைப் பிரபல்யப்படுத்தி வடக்கு கிழக்கு மாணங்களின் ஓரங்கள்,எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழர்களைப் பயமுறுத்தி பாதுகாப்புக்கு அடைக்கலமாக ராஜபக்ஷக்களை நாட வைப்பது உள்ளிட்ட பல பவ்வியமான திட்டங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்தக் களங்களின் கறிவேப்பிலையாகவே சிறுபான்மை சமூகங்களின் மாற்றுத் தலைமைகள்
பயன்படுத்தப்படுகின்றன.மட்டு பல்கலைக்கழகத்தை மூடுமாறு கோரும் கருணா, வியாழேந்திரன் போன்றோர் உள்ள அணியில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நேரடியாக இணைய முடியாது. இதனால் ராஜபக்ஷ முகாமுக்கு தூரத்திலிருந்து உதவுவதற்காக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க தூண்டப்பட்டாரோ! .முஸ்லிம் காங்கிரஸ்,மக்கள் காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்து, ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கவுள்ள வாக்குகளைக் குறைப்பதுதான் இவர்களின் திட்டம் போலும். மேலும் வாக்களிப்பதில்லையென நடு நிலையாகவுள்ள முஸ்லிம்களை ஹிஸ்புல்லாஹ் பக்கம் ஈர்த்தெடுப்பது.இதனூடாக பாரம்பரிய முஸ்லிம் தலைமைகளின் பிரச்சாரக் கவர்ச்சிகளை மழுங்கடித்து வாக்கு வங்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது, இவைகளும் ராஜபக்ஷ முகாம்கள் உயிர்வாழ்வதற்கான கைங்கர்யங்களே.
இவ்வாறுதான் தமிழர் தரப்பு அரசியலை உடைப்பதென்பதிலும் இவர்களின் வியூகங்கள் தொடர்கின்றன.கல்முனை வடக்கு பிரதேச செயலகம், வாழைச்சேனை பிரதேச சபையை தரமுயர்த்துவது, தோப்பூர் போன்ற அக முரண்பா டுகளும்,காணிப்பங்கீடு, கல்முனைக் கரையோர மாவட்டம் உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினைக்கான விடயங்களிலும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப் பின் முக்கியஸ்தர்களான ஹஸனலி,பஷீர் ஷேகுதாவூத் உள்ளிட்ட குழுவினர் மிதவாதத்திலிருந்து விலகியதாகவே எண்ணத் தோன்றுகிறது. இதனால்தான் ராஜபக்க்ஷ அணிக்குள் இவர்கள் மூழ்கி,முகவரி தேடப்பார்க்கின்றனர்.புலிகளை ஒழித்து கிழக்கு முஸ்லிம்களின் காணிகளை, விடுவித்தமை,புலிகளால் வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றி வடக்கில் மூடப் பட்டுக் கிடந்த பள்ளிவாசல்களைத் திறந்த, மஹிந்தவாலே சகல பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென்பதே இவர்களது வாதம். இது எவ்வாறு நியாயமாகும்?.
"கிழக்கு மாகாண ஆட்சியை தாரைவார்க்க முடியாது", "மட்டு ஷரீஆ பல்கலைக்கழகம் அடிப்படைவாதத்தின் விளை நிலம்", "கிழக்கிஸ்தானை உருவாக்க முஸ்லிம்கள் முயற்சி" எனக்கூறும் தமிழ் கடும்போக்கும், "கல்முனையை பிரிக்க விடமாட்டோம்","அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான சுய அலகு, கல்முனை மாவட்டமே" எனக்கூறும் முஸ்லிம் கடும் போக்கும் ஒன்றாகவுள்ள ஒரே அணியில் மஹிந்தவால் எதைச் செய்யமுடியும். இத்தனைக்கும் இவர்கள் மிதவாதப் போக்குள்ள பாரம்பரியத் தலைமைகளாக இருந்தால்தானே எதையாவது பேசித் தீர்க்கலாம்."வென்ற பின்னர் பார்ப்போம். வெற்றிக்கு ஒத்துழையுங்கள்" என்ற வேத வாக்கை நம்பியா? இம்மாற்றுச் சிறுபான்மை தலைமைகள் களமிறங்கின.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2Uf4EvR
via Kalasam
Comments
Post a Comment