ராஜபக்‌ஷக்களின் தெற்குக் கோட்டைகள் முற்றுகைக்குள்?



 சுஐப் எம் காசிம்

வேட்பாளர் தெரிவுத் தலையிடியில் ஐக்கிய தேசிய கட்சி சுகமடைந்தாலும் வெற்றி பெறும் சவாலால் வந்துள்ள தலையிடிக்கு மருந்து தேடும் பணி, சஜித் பிரேமதாஸாவின் தலையில் குந்திக்கொண்டது. இழுபறிச் சுமைகளை சமாளிக்க முடியாது திணறிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, கடைசி வரைக்கும் நகர்த்திய கச்சிதக்காய்கள் கட்சியைக் காப்பாற்றுவதற்கானவைதான். எனினும் இவ்வளவு அதிகாரமுள்ள ரணிலால் வேட்பாளராக முடியாமல் போனதேன்.?

2010,2015 ஜனாதிபதித் தேர்தல்களில் முகங்காட்ட விரும்பாத ரணில் இத்தேர்தலில் ஏன் விரும்பினார்? ரணிலைப்புரிவதால் மட்டும் இதை விளங்க முடியாது. அவரது ராஜதந்திரங்களையும் சற்றுத் தெரிவதில்தான் இந்த இரகசியங்களைப் புரிய முடியும்.

ராஜபக்‌ஷக்களின் தென்னிலங்கை எழுச்சியை வீழ்த்துவதற்கு தன்னால் முடியாதென்பதை, தானாகவே அறிவித்த தலைவராகத்தான் இவரது 2010,2015 தேர்தல்களின் ஒதுங்கல்கள் வௌிப்படுத்தின. இதனால் பங்காளிக் கட்சிகளை, தனது கூட்டணிக்குள் பக்குவமாகக் கட்டிப்போடத் தெரிந்த ரணிலுக்கு, தனது வேட்பாளர் விருப்புக்கு உதவுமாறு கோர முடியாமல் போயிற்று.

இன, மதவாதங்களின் உச்ச நம்பிக்கையில் அரசியல் முதலீட்டுக்காகக் களமிறங்கும் ராஜபக்‌ஷ அணிக்கு, ரணிலின் ஆளுமைகள் போதுமானதில்லை என்பதை இதற்கு முன்னரான தேர்தல்களில் விசேடமாக (உள்ளூராட்சி) பங்காளிக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசிய கட்சிப் போராளிகளும் அடையாளம் கண்டனர். இதன் வௌிப்பாடுகளே ரணிலை வேட்பாளர் போட்டியிலிருந்து இப்போது வௌித்தள்ளியுள்ளன.

சஜித் பிரேமதாஸாவை வேட்பாளராக்க ரணில் விதித்த நிபந்தனைகளில் பிரதான நான்கு, பங்காளிக் கட்சிகளின் சமூகம் சார்ந்தவையே. என்ன செய்வது? கைக்கு எட்டிய கனி, ரணிலின் வாய்க்கு எட்டவில்லையே.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணல், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்தலைத் தூக்கிப்போட்ட ரணில், கடைசியிலாவது தோழமைக் கட்சிகள் தோள் கொடுக்கும் என எதிர்பார்த்தார். இப்போது சிறுபான்மையினரின் நம்பிக்கைக் காப்பாளனாக சஜித் அறிமுகமாக்கப்பட்ட கணத்திலிருந்துதான் தேர்தல் களம் நகரப் போகிறது.

ராஜபக்‌ஷக்களின் தென்னிலங்கைக் கோட்டைக்குள் 19 வருட அரசியல் அனுபவமுடைய சஜித் எப்படி நுழைவார்.? அரசியலில் ஒரு வருடமேனும் அனுபவமில்லாத எதிரணி வேட்பாளரை இயக்கும் 42 வருட அரசியல் முதிர்ச்சியுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ இதற்கு எப்படி இடம்கொடுப்பார்? என்னை மட்டுமல்ல சகலரையும் குழப்பியடிக்கும் கேள்விதானிது.

புலிகளை ஒழித்து சிங்களக் குடிமகன்களைக் காப்பாற்றிய குல தெய்வமாக ராஜபக்‌ஷக்கள் இருக்கையில் 52 வயது இளம் யானை எதைச் செய்யும்? அமரர் பிரேமதாஸாவை நேசிப்பவர்கள் புலிப்பயங்கரவாதத்தை ஒழித்த எங்களை நேசிக்க வேண்டுமென, கோட்டா கர்ச்சித்தால் இந்த இளம் யானை எப்படிப் பதிலளிக்கும்.

உண்மையில் ராஜபக்‌ஷக்களுக்கு உள்ளதைப் போன்ற ஒரு அரசியல் மவுசு முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாஸாவின் குடும்பத்துக்கும் இருந்தது. இருபது வருடங்களுக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்ததாலும் ரணில் விசுவாச அணியினரின் சஜிதை ஓரங்கட்டும் முயற்சிகளும் பிரேமதாஸாவின் ஞாபகங்களை தூசு தட்டி எடுக்குமளவுக்கு பழைமையாக்கின. எனினும் 2015ல் தனது தந்தையாரின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சைப் பெற்றுக் கொண்ட சஜித், அமரர் பிரேமதாஸாவின் கொள்கைகளை உயிரூட்டி தனது குடும்பப் பெருமைகளை சிங்கள சமூகத்தின் மத்தியில் நினைவூட்டத் தொடங்கி, தேசிய அரசியல் தலைமைக்கான, அடையாளம் அங்கீகாரங்களுக்காகக் கடுமையாக உழைத்தவர்.

அமரர் ரணசிங்க பிரேமதாஸாவும் 1988 இல் இவ்வாறான கடுமையான போட்டிக்கு மத்தியில் வேட்பாளரான ஞாபகங்களை, சஜிதின் சில கால எதிர் நீச்சல்கள் ஆதரவாளர்களுக்கு அனுதாபத்தையும், அபிமானத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இவரின் உயர்ச்சிக்குப் பொறுமை மிகப் பக்கபலமாக இருந்ததைப் போல், ரணிலின் எதிரிகளும் தங்களையறிமாலே பக்கத் துணையாற்றினர்.
52 நாள் நெருக்கடியில் பிரதமராகு மாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து தலைமைத்துவ விசுவாசத்தைக் காட்டியதால், சஜித் அடுத்த தலைவராகப் பார்க்கப்பட்டார். தற்போது தனக்கிருந்த சவாலை வெற்றி கொண்டு முறியடித்துள்ள இவர், ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கைகளை வெல்லச் சிரமப்பட நேரிடும்.
சிறுபான்மைத் தளங்களின் ஆதரவால் மட்டும் வெற்றியடைய முடியாதென்ற எமது நாட்டு நிலவரங்களில், தென்னிலங்கையில் காலூன்றுவதே, சஜிதை நாட்டின் கதாநாயகனாக்கும். ரணிலின் நிபந்தனைகள் நான்கையும் ஒரேயடியாக நிராகரித்ததும், இவரது ராஜதந்திரங்களாகவே பார்க்கப்பட வேண்டும்.

தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் நாட்டைப்பிரிக்க, இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டு, தென்னிலங்கையைத் தாரைவார்க்க வந்துள்ளதாக ராஜபக்‌ஷக்கள் எடுக்கவுள்ள பிரச்சாரங்களுக்குப் பதிலடியாகவே ரணிலின் நிபந்தனைகள் இவரால் நிராகரிக்கப்பட்டன.

ஒரே மாவட்டத்து வாழ்விடப்பின்னணியுடைய ராபக்‌ஷக்களும், பிரேமதாஸக்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களில்லை என்பதை நிபந்தனைகளின் நிராகரிப்புக்கள் நிரூபிக்கின்றன.

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. பழையதைப்பாடி வருமானம் பெறமுடியாது. திறைசேரி ஊழலைத் தூக்கிப்பிடிக்கத் துள்ளிக் குதித்த ராஜபக்‌ஷக்களுக்கு ஊழலேயில்லாத ஒருவர் வேட்பாளரானது அதிர்ச்சிதான்.

முள்ளை, முள்ளாலே எடுக்க வேண்டுமென்ற யுக்தியில் தென்னிலங்கை களத்தில் மோதும் சஜித், நாசூக்காகச் செய்யும் பிரச்சாரங்கள் சிறுபான்மையினருக்கு அவநம்பிகையை ஏற்படுத்தக் கூடாது. இவ்விடயத்தில் சஜித் பிரேமதாஸாவை களமிறக்க தோள்கொடுத்த சிறுபான்மைத் தலைமைகள் தமது சமூகத்தை விழிப்பூட்டுவதிலே தெற்கில் ராஜபக்‌ஷக்களின் கோட்டைகளை உடைக்கும் சஜிதின் யுக்திகள் வெற்றி பெறலாம்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2m2fPLP
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்