கிரிந்த முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம், நடந்துது இதுதான்..!
தனிநபர்களுக்கு இடையே இடம்பெற்ற இருவேறு சம்பவங்கள், வன்முறைகளாக பரிணாமமடைந்ததன் விளைவாக மாத்தறை – ஹக்மன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிந்தவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், சொத்துக்களுக்கு வன்முறைக் கும்பலொன்றினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 15 வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பெறுமதியினை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் பிரதேசத்தில் கடந்தவார இறுதியில் அச்சத்துடன் கூடிய சூழல் ஏற்பட்ட நிலையில், பொலிஸ் அதிரடிப்படை, இராணுவம் குவிக்கப்பட்டு வன்முறையாளர்களின் நடவடிக்கைகள் முற்றாக முடக்கப்பட்டன. இதனால் தற்போது அப்பகுதியில் அமைதிநிலை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் அன்றாட வாழ்வும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பிரதேசத்துக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வன்முறைகளுக்கு தூபமிட அடிப்படையாக அமைந்ததாகக் கூறப்படும் இருவேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் மாத்தறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவிலும், மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலும் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சரணடைந்த நபர் ஹக்மன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அங்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளைத் தொடர்ந்து அவரை மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்கத் தவறியமை, கடமைகளை சரிவரச் செய்யாமை, சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஹக்மன பொலிஸ் நிலையத்தின் 4 பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். 3 பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரின் பணிகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
அத்துடன் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகள், இந்த சம்பவங்களின்போது செயற்பட்ட விதம் தொடர்பில் விசேட விசாரணைகளை நடாத்துமாறு தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அனில் பிரியந்தவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இரவு 7.50 மணியளவில் ரவீந்ர சந்தகன் எனும் இளைஞர் மீது இரு முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் 27 ஆம் திகதி, கிரிந்த – போதிருக்காராம விகாரைக்கு அருகிலுள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் இடம்பெற்றுள்ள வாக்குவாதமொன்றின் இடையே ‘பியர்’ போத்தல் ஒன்று விகாரை வளாகத்துக்குள் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்தே அப்பகுதியில் வன்முறைகளுடன் கூடிய பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனாலேயே அப்பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், சொத்துக்கள் வன்முறை கும்பலொன்றால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் அழைக்கப்பட்டு வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்ய மாத்தறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரின் உதவியுடன் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி பதிவான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மாத்தறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளனர். அவர்களை தாக்குதல் நடாத்தியமை மற்றும் இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்த பொலிஸார் மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்ததை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் சந்தேக நபரைக் கைது செய்யாமை, கடமைகளை சரிவரச் செய்யாமை, மோதல் ஏற்பட வழியமைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஒரு பொலிஸ் சார்ஜன்டும், கான்ஸ்டபிளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவரை மத ஸ்தலமொன்றின் மகிமைக்கு பங்கம் விளைவித்தமை, அச்ச நிலைமையை தோற்றுவித்தமை, அரச விரோத செயலொன்றினை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்த பொலிஸார், ஹக்மனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், அச்சம்பவம் பதிவாகும்போது அதாவது, கடந்த 27 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கிரிந்த போதிருக்காராம விகாரையில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். தனது கடமையை சரிவர செய்யாமை, சந்தேக நபரைக் கைது செய்யாமை, மோதல் ஏற்படுவதை தடுக்காமை தொடர்பில் அவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2mtCH70
via Kalasam
Comments
Post a Comment