தமிழ் மொழியில் போற்றும் தேசிய கீதத்தை அகற்ற வேண்டாம், ஜனாதிபதிக்கு தமுகூ தலைவர் மனோ கணேசன் கடிதம்...!


இலங்கை தாய்நாட்டை எமது தாய் மொழியில் போற்றும் தேசிய கீதத்தை அகற்ற வேண்டாம் - ஜனாதிபதி கோட்டாபயவுக்கு
தமுகூ தலைவர் மனோ கணேசன் கடிதம்...!

(மனோ கணேசன் ஊடகப் பிரிவு)

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இத்தகைய முடிவு, இலங்கையின் அரசியலமைப்பில் இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியை புறந்தள்ளி இலங்கையை மொழி இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத செயல் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

உங்கள் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்படுவேன்’ என்று நீங்கள் நாட்டுக்கு தந்த உங்கள் உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை ரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவீடர், முகநூல் தளங்களிலும் பதிவுகளை மேற்கொண்டுள்ள மனோ எம்பி, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளாதாவது, 

மூன்று மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட கட்சி தலைவர் என்ற முறையிலும், 67 வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை உறுதி செய்ய பாடுபட்ட ஒருவன் என்ற முறையிலும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரங்களை கையாண்ட முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் நான் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

இந்தியாவின் பெருமகன் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் சீடனாக, கொல்கத்தா சாந்தி நிகேதனில் பயின்ற, நமது நாட்டு தேசிய கவிஞர் அமரகோன் அவ்வேளையில் எழுதி, இசையமைத்த, அன்றைய தேசிய பாடல்தான், பின்னாளில் நமது தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். 

இந்த தேசிய கீதத்தை இலங்கையின் தமிழ் அறிஞர் நல்லதம்பி அவர்கள், வரிக்குவரி அப்படியே தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். ஒரே அர்த்தத்தில், ஒரே இசை வடிவில், நமது தாய் நாட்டை, “நமோ நமோ மாதா” என சிங்களத்திலும், “நமோ நமோ தாயே” என தமிழிலும் பாடும் தேசிய கீதம் எமக்கு கிடைத்துள்ளது எமது அதிஷ்டமாகும் என நான் நினைக்கிறேன். 

இதை பிரதானமாக கொண்டு மொழி உரிமைகளை பயன்படுத்தி நாம் இந்நாட்டில் வாழும் இரண்டு மொழிகளை பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என் நான் உங்களுக்கு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன். 

அதிகார பகிர்வை வலியுறுத்தும் அரசியலமைப்பின் 13ம் திருத்தம் தொடர்பாக உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். எனினும் மொழியுரிமை என்பது 13ம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை. 

16ம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4ம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

“ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என உங்களை வேண்டுகிறேன். 

உங்கள் அரசில் இருக்கின்ற சிலர், “ஒரே மொழி” என்ற கொள்கையை முன்னெடுக்க முயல்கின்றனர். இத்தகையை கொள்கைதான் 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அடுத்து வந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டை படுகுழியில் தள்ளியது. உண்மையில் ஒரே மொழி என்று சொல்லும் போது ஒரே நாடு என்ற கொள்கைதான் பலவீனமாகிறது. 

இவர்கள், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம், அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன. சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன. 

அதேவேளை பதினைந்து தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் இந்தி மொழியில் இருக்கின்றது என்றும் இதே சிலர் கூறுகின்றனர். இதுவும் பிழை. இந்தியாவின் தேசிய கீதம், இலங்கை தேசிய கீதத்தை எழுதிய அமரகோனின் குருவான ரபீந்திரநாத் தாகூர் அவர்காளால் தமது தாய்மொழி வங்காளியில் எழுதப்பட்டது. 

வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும். அதற்காக நாம் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என நாம் கூறவில்லை. தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம். 

சிங்கள, தமிழ் நாடுகளை தவிர்த்து, இலங்கை நாட்டை கட்டி எழுப்புங்கள். தமிழிலும் இலங்கை தேசிய கீதத்தை பாடுவது தேசாபிமான நடவடிக்கை ஆகும். சில போலி தேசிய வாதிகள், மொழி இனங்களை ஒன்று சேர்க்கும் இந்த தேசாபிமான நடவடிக்கையை நிறுத்தி விட முயல்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என உங்களை நான் கோருகிறேன்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2PZ1TOJ
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!