மஹர ஜூம்ஆ பள்ளியினுள் புத்தர் சிலை வைப்பு
அதிகாரிகளின் ஓய்வு அறையாகவும் மாற்றம் முஸ்லிம் அமைப்புகள் கவலை; கண்டனம், ஜனாதிபதி, பிரதமரிடம் முறைப்பாடு
மஹர தேர்தல் தொகுதியில் ராகமையில் அமைந்துள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல் கட்டடம் புனரமைக்கப்பட்டு கடந்த 5 ஆம் திகதி அங்கு புத்தர் சிலையொன்றும் நிறுவப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் சுமார் 250 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தமது பள்ளிவாசலை இழந்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரிவித்தார்.
1967 ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இப்பள்ளிவாசல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டு அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ, பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோருக்கு முறையிட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் தெரிவித்தார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மக்களுக்கு இப்பள்ளிவாசலைத் தடை செய்தனர்.
பாதுகாப்பு காரணம் கருதி பள்ளிவாசலைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. பள்ளிவாசலை சுத்தம் செய்வதற்கோ அங்கிருக்கும் பொருட்களை உபயோகப்படுத்துவதற்கோ சிறைச்சாலை அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டது. ராகமை பகுதியின் ஜனாஸாக்களுக்கு பள்ளிவாசலில் இருக்கும் சந்தூக்கு மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில் என்பனவற்றைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த தளபாடங்கள் ஜனாஸாக்களுக்காக மாபோலை பள்ளிவாசலிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன. ஜனாஸா தொழுகைகள் கூட மையவாடிக்கு அருகிலிருக்கும் பழைய வீட்டிலே தொழுவிக்கப்பட்டது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு அப்போதைய அரசாங்க காலத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அப்போதைய அமைச்சர் ஹலீம், வக்புசபைத் தலைவர், நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்பு பள்ளிவாசல் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த பள்ளிவாசல் மஹர சிறைச்சாலை அதிகாரி சந்தன வீரசிங்கவின் ஆலோசனைக்கமைய திருத்தியமைக்கப்பட்டு இதுவரை காலம் சிறைச்சாலைக்கு குறைபாடாக இருந்த ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதாக மஹர சிறைச்சாலையின் உத்தியோகபூர்வ முகநூலில் புகைப்படங்களுடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விகாரம் தொடர்பில் தெவட்டகஹ பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதி செயலாளர் எம்.எஸ்.எம்.தாஸிம் மெளலவி ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்தப் பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகை, தராவிஹ் தொழுகை மற்றும் விஷேட நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் அஹதியா பாடசாலையும் இடம்பெற்று வந்ததாக பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார்.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2wO03co
via Kalasam
Comments
Post a Comment