மஹர பள்ளிவாசல் உடனே மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
மஹர தேர்தல் தொகுதியில் ராகமையில் அமைந்துள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன், கடந்த 5 ஆம் திகதி அங்கு புத்தர் சிலையொன்றும் நிறுவப்பட்டுள்ள சம்பவம் முஸ்லிம்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பதிவாகியுள்ள மிகவும் பாரதூரமானதொரு சம்பவம் இதுவாகும். அதுவும் சட்டத்தை நிலைநாட்டி மக்களின் மத சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.
குறித்த பள்ளிவாசல் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள போதிலும் அதனை இப்பகுதியில் வாழும் சுமார் 250 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களே பயன்படுத்தி வந்துள்ளன. வாராந்தம் ஜும்ஆ தொழுகையும் தினசரி ஐவேளை தொழுகையும் அங்கு நடந்து வந்துள்ளன. ஜனாஸா தொழுகை, நோன்பு மற்றும் பெருநாள் போன்ற விசேட தருணங்களிலும் பிரதேச மக்கள் இப்பள்ளிவாசலையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இப் பள்ளிவாசல் முறையான பதிவுகளுடனேயே இயங்கி வந்துள்ளது.1967 ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல பள்ளிவாசல்களும் தொழுகையறைகளும் மூடப்பட்டன. இதில் மஹர சிறைச்சாலை பள்ளிவாசலும் ஒன்றாகும்.
மஹர சிறைச்சாலை அதிகாரிகளே மக்களுக்கு இப்பள்ளிவாசலைத் தடை செய்தனர். பாதுகாப்பு காரணம் கருதி பள்ளிவாசலைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பள்ளிவாசலை சுத்தம் செய்வதற்கோ அங்கிருக்கும் பொருட்களை உபயோகப்படுத்துவதற்கோ சிறைச்சாலை அதிகாரிகளினால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தொழுகை மற்றும் ஜனாஸா நல்லடக்கம் போன்றவற்றுக்காக தூரத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கே இப்பகுதி முஸ்லிம்கள் செல்ல வேண்டியுள்ளமை துரதிஷ்டமானதாகும்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு அப்போதைய அரசாங்க காலத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அப்போதைய அமைச்சர் ஹலீம், வக்புசபைத் தலைவர், நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தபோதிலும் பள்ளிவாசலை திறக்க எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்பு பள்ளிவாசல் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டு புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எது எப்படியிருப்பினும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பள்ளிவாசலாக இயங்கி வந்த ஓரிடத்தை திடீரென ஓய்வு விடுதியாக மாற்றுவதும் அங்கு புத்தர் சிலை வைத்து வழிபடுவதும் நியாயமற்ற நடவடிக்கையாகும். ஒரு சிறு குழுவுடன் சம்பந்தப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலை காரணமாக காட்டி முழு முஸ்லிம் சமூகத்தினதும் சமய உரிமைகளை மறுதலிப்பதையும் அதற்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளே முன்னிற்பதும் கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும்.
தனது சுதந்திர தின உரையின்போது, நாட்டிலுள்ள சகல மக்களினதும் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் துரதிஷ்டவசமாக அவரது உரை இடம்பெற்ற மறுநாளே மஹர பள்ளிவாசலினுள் புத்தர் சிலை வைத்து அதனை விடுதியாகவும் மாற்றிய அநீதி நடந்தேறியிருக்கிறது.
பள்ளிவாசல் நிர்வாகம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறது. அமைச்சர் சுமுக தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்திருக்கின்றமை ஆறுதலளிக்கிறது.
இந்த விவகாரம் தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சைக்குள்ளாக்காது உடனடித் தீர்வை எட்டுவதே சமயோசிதமானதாகும்.
புத்தர் சிலையை அகற்றி அதனை மீண்டும் பள்ளிவாசலாக இயங்கச் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்களை சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்புகள் வழங்க வேண்டும். குறிப்பாக தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கமான முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகள் இதுவிடயத்தில் தமது பொறுப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli
from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/3cqj0Cm
via Kalasam
Comments
Post a Comment