பொது நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி தலைமைகளுக்கே உள்ளது; -கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
தற்போதைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில் எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்றும் இது மக்களை குழப்புகின்ற நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது விடயமாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், அத்துடன் இக்கட்டளைச் சட்டத்தின் மீது 25.03.2020 அன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட 2168/6 ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி என்பனவற்றின் ஏற்பாடுகளுக்கிணங்க, உள்ளூராட்சி மன்றங்களின் ஆள்புல எல்லைக்குள் Covid-19 தொற்று தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு, நடைமுறைப்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியாக குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இதன்படி ஓர் உள்ளூராட்சி மன்ற எல்லைக்குள் Covid-19 நோய்த் தொற்றிலிருந்தான மக்களின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாக தீர்மானங்களை மேற்கொண்டு, அமுல்படுத்துகின்ற அதிகாரம் குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் தலைமைக்கே பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மாநகர சபைகள் கட்டளைகள் சட்டம் 96 இன் கீழ் பொதுச் சுகாதாரம் சம்மந்தப்பட்ட அதிகாரம் மாநகர சபைகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை சுகாதார சேவைகள் சட்டம் பிரிவு 08 இன் கீழ் ஓர் உள்ளூராட்சி மன்றமானது, தனக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதார விடயங்களை செய்யத்தவறும் பட்சத்திலேயே சுகாதார அமைச்சரின் எழுத்து மூலமான பணிப்புரையின் பேரில், பிராந்திய/ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலையீடு செய்யலாம்.
கல்முனை மாநகர சபையை பொறுத்தளவில் இலங்கையில் கொவிட்-19 தொற்று ஆரம்பமானதும் அரச பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டதையடுத்து, அன்றைய தினமே தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு மாநகர சபை அவசர நடவடிக்கை எடுத்தது. அடுத்த சில தினங்களில் மக்கள் கூடுகின்ற சந்தைகள், மைதானங்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களையும் மூடினோம். அவ்வாறே திருமணங்கள், கூட்டங்கள் உட்பட பொது நிகழ்வுகளுக்காக மண்டபங்கள் வழங்கப்படுவதையும் தடை செய்தோம்.
இதற்கு மேலாக சுகாதாரத்துறையினரையும் பொலிஸ் மற்றும் முப்படையினரையும் இதர தரப்பினரையும் உள்ளடக்கிய கல்முனை மாநகர கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியொன்றை அமைத்து, அதன் ஊடாக இன்னும் பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம். அத்துடன் அவ்வப்போது அரசாங்கத்தினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். கொவிட்-19 தொற்றில் இருந்து எமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு, இவற்றை இன்றுவரை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம்.
அதேவேளை, கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் பொது நிகழ்வுகள் நடத்துவதற்கு மாநகர சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் கூறியிருப்பது முற்றிலும் தவறாகும். இது மக்களை குழப்புகின்ற நடவடிக்கையாகும்.
அதிகாரம் இல்லாத தரப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்று எந்த அடிப்படையில் வற்புறுத்த முடியும். கொவிட்-19 கட்டுப்பாடு விடயத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்க முடியுமேயன்றி, தீர்மானங்களை மேற்கொள்வதற்கோ, அமுல்படுத்துவதற்கோ சட்டப்படி முடியாது என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும்- என்று கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3c9GDNZ
via Kalasam
Comments
Post a Comment