மு.காவின் மாவடிப்பள்ளி ஆரம்பகால ஆணிவேர்ப் போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு..!
- அஹமட் சாஜித் -
அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஸாட் பதியுதின் அவர்களை வாழ்த்தி வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ( 23 ) செவ்வாய்க்கிழமை அ.இ.ம.கா. மத்திய குழு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீல் ஆகியோரின் ஏற்பாட்டில் பிரதேச சபை உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாமனிதர் எம் எச் எம் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போதிலிருந்து கட்சியோடு பயணித்து, கட்சியின் வளர்ச்சிக்காக கண்ணீர் சிந்தி உழைத்த அதியுச்ச ஆரம்பப் போராளிகளும், மு.கா வின் மாவடிப்பள்ளி பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள் சிலரும் தற்போதை கட்சியின் நிலையையும், தலைமைத்துவத்தின் வழிகாட்டலினாலும் அதிர்ப்தியடைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கட்சியின் தலைவருக்கு மாலை அணிவித்து இணைந்து கொண்டனர்.
பல போலி வாக்குறுதிகளை அளித்து எம்மையும் எமது ஊரையும் 20 வருடமாக ஏமாற்றி வாக்குப்பிச்சையைப் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, பம்மாத்து அபிவிருத்தித் திட்டங்களை வைத்து போலி தேர்தல் வாக்குறுதிகளை அளித்து எமது ஊரை குட்டிச்சுவராக்கிய முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமையையும் எமது மாவட்டத்தைவிட்டுத் துரத்துவதுடன்,
முஸ்லீம் சமூகத்திற்காக தைரியமாக குரல் கொடுத்துப் போராடியதன் விளைவாக இனவாதிகளால் பல்வேறு இன்னல்களுக்குட்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, பலிவாங்கப்பட்டு நிம்மதியை இழந்து தவிக்கும் போதும் சிறுபான்மைச் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் தலைமையையும், கட்சியையும் பலப்படுத்துவதற்காகவே அ.இ.ம.காங்கிரஸில் இணைந்ததாக தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஸாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீரலி, கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் சுபைதின் ஹாஜியார், கட்சியின் பொருளாளர் முன்னாள் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, பாராளுமன்றத் தேர்தலில் அ.இ.ம.காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களான முஸாரப், மாஹிர், ஜவாத் போன்றோரும், கட்சியின் போராளிகளும் கலந்து சிறப்பித்தனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3eP9R7f
via Kalasam
Comments
Post a Comment