‘தகனம் மட்டுமே’ எனும் விஞ்ஞானபூர்வமற்ற சட்டத்தை ஓர் அரசாங்கம் திணிப்பது சிக்கல்களைத் தோற்றுவிக்கும்! -தேசிய சூரா சபை



'தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும்’ என்ற கொள்கை தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை உலகெங்கிலும் உள்ள நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, Word Health Organization (உலக சுகாதார நிறுவனத்தின்) விஞ்ஞான வழிகாட்டுதல்களுக்கு மாற்றமாக, கோவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் பலவந்தமாக தகனம் செய்துவருகிறார்கள். 






இந்நிலையில், இவ்விவகாரத்தில் அரசியல் தீர்வை எட்டுவதற்கு உயர்மட்ட அதிகாரிகள் விருப்பம் காட்டாமல் இருப்பது தொடர்பில் பொதுமக்களினால் பரந்த அளவில் வெளிப்படுத்தப்பட்டு வரும் அவநம்பிக்கை மற்றும் அதிருப்தியின் காரணமாக தேசிய சூரா சபை அச்சமடைந்துள்ளது.




தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு விஞ்ஞானபூர்வமற்றது; சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது; மற்றும் தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் மறைமுகமான குழப்ப நிலைக்கு வழிகோலும் என்பது இப்போது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




$ads={2}




‘தகனம் மட்டுமே’ எனும் விஞ்ஞானபூர்வமற்ற சட்டத்தை ஓர் அரசாங்கம் அதன் குடிமக்கள் மீது திணிப்பது என்பது பரந்த மட்டத்தில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் ஒரு தேசிய பிரச்சினையாகும். இது மனித உரிமைகளைப் பாதிக்கிறது; சமூகத்தில் வகுப்புவாத துருவப்படுத்தல் நிலையை தோற்றுவிக்கிறது; தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது; நாடு முழுவதும் அனைத்து மட்டங்களிலும் கடும்போக்கு மற்றும் தீவிரவாத செயல்களை அதிகரிக்கத் தூண்டுகிறது.




அதேநேரத்தில், அரசாங்கத்தின் தூரநோக்கற்ற இந்த கொள்கையின் காரணமாக, கோவிட்-19 மூலம் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களை மாலத்தீவுகளில் அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது, உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேசமயமாக்கியிருக்கிறது. இம்முயற்சி, எமது நாடு இறந்தவர்களை மதிக்காதது என உலக நாடுகளின் நகைப்புக்கு அதனை இலக்காக்கி அதன் மாண்பை சீர்குலைத்துள்ளது. 




உள்நாட்டு மோதல்கள் காரணமாக சட்டவிரோத இடம்பெயர்வு தொடர்பான சிக்கல்கள் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில், குறிப்பிட்ட இன,மதக் குழுவைச் சார்ந்த ஒருவர் இறந்தவுடன்,அவரை நாட்டின் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பிரஜையாகக் கருதுவது, புதிய பிராந்திய ரீதியான அரசியல் சிக்கல்களை மேலும் அதிகரிக்கக்கூடும்.




இந்த நிலைப்பாடு சமூகத்தின் பல்வேறு துறைகளைப் பாதிக்கும்; பரந்த தாக்கங்களைக் கொண்டிருக்கும். அதேநேரம்,தேசத்திற்கு மிகவும் குந்தகம் விளைவிக்கக் கூடியதுமாகும். இது முஸ்லிம்கள் மற்றும் சில கிறிஸ்தவ மதப்பிரிவினர் உள்ளிட்ட பலரில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் பிரச்சினை என்பதை விடவும், தேசத்தை பாதிக்கும் அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கையாகவும் இருக்கிறது.




சுகாதாரத் துறை,சட்ட சபைகள் போன்ற அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கொள்கைகள், பிரகடனங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்தும் அறிவியல், நீதி மற்றும் பொது அறிவின் அடிப்படையில் நம்பகத்தன்மையின் உச்சநிலையில் அமைந்திருக்கவேண்டும். அதன் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். 




உரிமைகள், கடமைகளை மதிக்காமல் மனித ஒழுக்கத்தை சரியாகப் பேணாமல், வெளிப்படைத் தன்மை இன்றியே ‘தகனம் மட்டுமே’ என்ற இந்தக் கொள்கை செயல்படுத்தப்படுகிறது. இது அராஜகத்திற்கு வழிவகுக்கும் வகையில் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை இல்லாமலாக்கிவிடும்.




‘தகனம் மட்டுமே’ எனும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தற்போது தோன்றியுள்ள பிரச்சினைகள் தேசிய ஒழுங்கை பாதித்துள்ளன. மேலும் இது அமைதி, சகவாழ்வு, தேசிய பாதுகாப்பு,பிராந்திய ஒருமைப்பாடு, தேசத்தின் இறையாண்மை ஆகியவற்றில் பரவலான மாற்றங்களைக் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.




எனவே, இந்தக் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் சட்டங்கள் மீதான பொது நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிக்குமாறும் அரசாங்கத்தை நாம் வேண்டிக்கொள்கிறோம்.




$ads={1}




இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து வெளிவரவும், தேசிய நலனையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், அரசாங்கத்திற்கும் தேசத்திற்கும் அனைவரும் ஒன்றிணைந்து உதவுமாறும் அனைத்து தேசபற்றுள்ள இலங்கையர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். 




இந்த சவாலான காலம் அனைவருக்கும் பொதுவானதாகும். சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நம்பிக்கை, பொறுப்பு மற்றும் ஒற்றுமையுடன் அரசாங்கமும் மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.




‘தகனம் மட்டுமே’எனும் கொள்கை காரணமாக வேகமாக மோசமடைந்து வரும் நாட்டின் நிலைமை குறித்து தேசிய ஷூரா சபை தனது கவலையைத் தெரிவிக்கும் அதேவேளை, சோதனைகள் நிறைந்த இந்நேரத்தில் விவேகமான கொள்கை மீளாய்வு மற்றும் தேசிய ஒற்றுமையை அது வலியுறுத்துகிறது.




மேலும், உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் எங்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கும் கைகோர்த்து நிற்கும் தரப்பினர் அனைவரினதும் அனைத்து விதமான முயற்சிகளையும் அங்கீகரிப்பதுடன் அதற்காக நாம் நன்றியும் கூறுகிறோம்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/34SFU2W
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!