இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்களின் எரிக்கப்படுவதற்கு எதிராக குளியாபிடிய பிரதேசசபையிலிருந்து ஜனாதிபதி பிரதமர் சுகாதார அமைச்சுக்கு கடிதம்
-ரிம்சி ஜலீல்-
இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு குளியாபிடிய பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் பெரும்கவலை வெளியிடப்பட்டதுடன் கண்டனத் தீர்மானம் ஒன்றும் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குளியாபிடிய பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 11.01.2021 பிரதேசசபை சபா மண்டபத்தில் சபையின் தவிசாளர் விஜயசிரி ஏக்க நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிப்பதாக கூறும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பான முக்கிய பிரேரணை ஒன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் எம்.சி இர்பான் முன்மொழிந்தார்.
அத்துடன் சபை ஆரம்பத்தில் தலைமை உறையாற்றிய தவிசாளர் விஜயசிரி ஏக்கநாயக குறித்த ஜனாஸா எரிப்பு விடயம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்து கவலையும் கண்டனமும் தெரிவித்தார்.
இதேவேளை குளியாப்பிடி பிரதேசசபையின் எனைய முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதர உறுப்பினர்களின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் முன்மொழிந்த ஜனாஸா எரிப்பு தொடர்பான கவலையும் கண்டனமும் தெரிவிக்கும் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இப்பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட சுகாதாரப்பகுதி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பதுடன் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் சுகாதரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றால் இஸ்லாமிய முறைப்படி இனிமேல் நல்லடக்கம் செய்வதற்கு ஆவன செய்யுமாறு கோருவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் பிரேரணையை முன்மொழிந்து உறையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸினால் மரணிப்போரை நல்லடக்கம் செய்யலாமென சுகாதார அறிவுரை வழங்கியும் இலங்கையில் குறிப்பாக முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது பெரும் மனவேதனைக்குறியதாகும்.
பல்வேறு கோரிகைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் முஸ்லிம்களின் மத உரிமை, மத விழுமியங்கள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடாகும்.
முஸ்லிம்களின் மனங்களை வெகுவாகப் புண்படுத்தியுள்ள இலங்கை அரசின் இந்த நடவடிக்கை மிகக் கவலைக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும். சஹ்ரானின் பிரச்சினையால் மனம் நொந்து போய் உள்ள முஸ்லிம் மக்களுக்கு இது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவும் அமைந்துள்ளதுடன் வருந்தத்தக்கதுமாகும்.
எனவே மரணிப்போரை எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்வதுடன் முஸ்லிம் ஜனாஸாக்களை இனிமேல் நல்லடக்கம் செய்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்” என்றார்.
தவிசாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவருமான விஜயசிரி பிரேரணை மீது உரையாற்றுகையில், முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் துயர நிலமை மிக வண்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.
குறித்த கண்டனத்தீர்மானத்திற்கான பிரேரணை மீது மேலும் சில சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன் கவலையும் கண்டனமும் தெரிவிக்கும் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அதிகம் கொண்ட குளியாப்பிடிய பிரதேசசபையில் தவிசாலரின் கையொப்பத்துடன் கடந்த 26ம் திகதி மேற்ப்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2MwbehE
via Kalasam
Comments
Post a Comment