அக்னிச் சுவாலையிலிருந்து ஜனாஸாக்கள் விடுதலை; ஐ.நா வை குறிவைக்கும் இராஜதந்திரம்!


 

சுஐப் எம். காசிம்-


இலங்கை எதிர்கொள்ளும் அண்மைக்கால சவால்களை அடிக்கடி வந்து போகும் வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயங்கள் மற்றும் ஜெனீவா அமர்வுகளின் எதிரொலிகள் புலப்படுத்துகின்றன. இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் பின்னர், பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் இடம்பெற்றுள்ளது. எனினும், தமிழர்கள் இந்தியா மீது வைத்துள்ள எதிர்பார்ப்புக்கு நிகரானதல்ல,

இலங்கை முஸ்லிம்களின் பாகிஸ்தான் மீதான நம்பிக்கை.


இவ்வாறுதான், கடாபி, சதாம் ஹூஸைன், அரபு நாடுகள் எங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இலங்கை முஸ்லிம்கள் காலம் கடத்திய வரலாறும் இருக்கிறது. நாட்டில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில், தமிழர்களுக்கு இந்தியா என்ற எண்ணம் ஓங்கியிருந்த காலத்தில்தான், முஸ்லிம்களும் தமக்கென்று பல நாடுகளை எஜமானர்களாக்கி இருந்தனர். தமிழ்,முஸ்லிம் இணக்க அரசியலில் இடைவௌி ஏற்படும்போதோ, அல்லது அரசாங்கத்தின் நெருக்குதல்கள் அதிகரிக்கும் போதோ, இந்த நம்பிக்கைகள் அடிக்கடி முஸ்லிம்களிடம் வருவதும் போவதுமாக இருந்தன. காலப்போக்கில் இவையும் காலாவதியாகின.


பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளாதிருந்தால் இம்ரானின் வருகை முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்திருக்காதுதான். ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு, ஜனாஸா எரிப்புச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் வந்ததால்தான், முஸ்லிம்கள் அவரையே கதாநாயகனாகக் கருதிக்கொண்டனர். எத்தனையோ கடமைப்பாடுகளுக்குள் கட்டுப்பட்டு வந்த இம்ரானுக்கு முஸ்லிம்கள் விடயத்தையும் கடைக் கண்ணால்தான் பார்க்க முடிந்தமை, எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இதனால், சாத்திய வழிகளில் சமயோசிதமாகச் சாதித்திருக்கலாம் என்றும் இவரது விஜயம் நோக்கப்படுகிறது. என்ன செய்வது?

"எலிக்காவலுக்கு வளர்க்கும் பூனை கொழுத்து புலியானது" என்பார்களே. இந்நிலை, இம்ரானுக்கு பொருந்துவதுபோல இலங்கை அரசாங்கத்துக்கும் பொருந்துகிறது. இதனால்தான் இம்ரானின் விஜயம் அமைதியான முடிவைத் தந்திருக்கிறதோ தெரியாது.


சகல உரிமைகளையும் கசக்கி எறிந்த முஸ்லிம்கள், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு மட்டுமே அனுமதியை வேண்டி நின்றனர். இந்நிலையில், கட்டுங்கடங்காத இத்தனை பெரிய ஆவலை இம்ரானின் விஜயம் கட்டவிழ்த்திருக்கிறதோ தெரியாது. எனவே, இதுவரைக்கும் ஏதோவொரு சக்தி இடைஞ்சலாய் இருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது. எலியைப் பிடிக்க வளர்த்த பூனை கொழுத்ததால் வந்த வினைகள்தான் இவை. உலக வல்லரசை நண்பனாக்கிஅயல் நாட்டை சமப்படுத்தும் பாகிஸ்தானின் ராஜதந்திரம், தனது அதே ஆத்மீக நம்பிக்கைகளிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் அடக்கியே வாசித்திருப்பதும், ஆட்சியைப் பிடிப்பதற்காக வளர்க்கப்பட்ட ஒரு சக்தியின் அழுங்குப்பிடிக்குள் இலங்கை அரசு முதுகை நெழிப்பதும் இதனால்தான். பறவாயில்லை, நம்பிக்கையோடு நாடு திரும்பிய இம்ரானின் காதுகளில் நல்லடக்கச் செய்தியும் எட்டிட்டு.


இதுமட்டுமல்ல, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிரொலிக்கும் அத்தனை நகர்வுகளும் எலிக்காவலுக்கு வளர்த்த பூனை கொழுத்ததால் வந்த விஸ்வரூபங்கள்தான். இணை அனுசரணையை இலங்கை அரசு விலக்கியதும் இதற்காகத்தானே. வௌிநாட்டு நீதிபதிகள் எமது படையினரை விசாரிப்பதா? காணாமல் போனோர் அலுவலகம் யாருக்காக? யுத்த காலத்தில் புலிகளால் கடத்தப்பட்ட படையினரும் காணமலாக்கப்பட்டனரே, இவற்றை விசாரிப்பதில்லையா? என்ற மறு கேள்விகள் கேட்கப்படுவதும் அழுங்குப் பிடிக்குள் சிக்கிய அரசின் மன நிலைகளையே காட்டுகிறது. இத்தனை வருட அரசியல் அனுபவமுள்ள இந்த அரசாங்கத்தின் தலைவர்களுக்கு, வௌிநாடுகளின் ராஜதந்திர நெருக்குவாரங்களிலுள்ள அபாயங்கள் தெரியாதிருக்காதுதானே! தெரிந்ததால்தான், ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்ததை இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்துக்கு (oic) இலங்கை உடன் அறிவித்திருக்கிறது. "உடையவன் செய்யாவிடில் ஒரு முழம் கட்டை." ராஜபக்‌ஷக்களை சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இந்த அழுங்குப்பிடிகள் அனுமதித்திருந்தால், புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரல் இந்தளவு தலைநிமிர்ந்திருக்காது. மேலும், நல்லடக்கமும் என்றோ சாத்தியமாயிருக்கும்.


வடகொரியா, சிரியா, சூடான் நாடுகளில் நடந்த பாரிய யுத்தக் குற்றங்களுக்கு நிகரான பதிலைப் போன்று, இலங்கை அரசும் பொறுப்புக் கூற வேண்டுமென அமெரிக்கா உட்பட பெரும்பாலான மேலைத்தேய நாடுகளின் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. சிரியாவில் 2011 முதல் இதுவரைக்கும் சுமார் பத்து இலட்சம் பேர் அகதிகளாகி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளமை, இலட்சக்கணக்கில் பலியானமை அங்கு நடந்த போரின் கொடுமைகளுக்கான சாட்சிகளாகின்றன. சூடானில் ஒரு பகுதியே (டர்புர்) பிரித்து வேறு நிர்வாகமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு உலகிலிருந்து தனிமைப்படுமளவுக்கு வடகொரியாவும் வந்துள்ளது.


இதுபோன்ற பிரதிபலன்களை இலங்கை அரசுக்கு எச்சரிக்கும் பாணிகள்தான் ஐ.நா மனித உரிமை அமர்வில் எதிரொலிக்கின்றன. இவற்றைச் சமாளிக்கும் சமயோசிதம் இலங்கை அரசுக்கு இருக்கிறதுதான். இந்தச் சமயோசிதத்துக்குள் மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது மற்றும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பது என்பவை இருந்துதானிருக்கும். இதில் ஒன்றுதான் அழுங்குப்பிடியை உடைத்து தற்போது வெளிவந்துள்ளது. ஏனையதிலும் இந்த அழுங்குப்பிடிகள் நுழையாதிருக்க வேண்டுமே.


ஈஸ்டர் தாக்குதல்களின் கொடூரங்களை ஞாபகமூட்டி, பயங்கரவாத வெறித்தனங்களின் விஸ்வரூபங்களை, மேற்குலகுக்கு காட்டி வருகிறது அரசாங்கம். இலங்கை அரசாங்கம் தோற்கடித்தது இதைத்தான். இராணுவ நெறியாள்கைகள் ஒரு சில நேரங்களில் வழி தவறியிருக்கலாம் என்பதற்காக, ஜனநாயக அரசின் செயற்பாடுகளை, பயங்கரவாதத்தோடு ஒப்பிடுவதா? எல்லோரும் அனுபவித்த கொடுமையைத்தானே, நாம் இல்லாமலாக்கி இருக்கிறோம் என்பதும் இலங்கையின் வாதம். அப்பாவிச் சிவில் சமூகம் நாளாந்தம் இறந்து வந்த துயர வரலாற்றை மாற்றிய இலங்கைக்கு, ஐரோப்பா வழங்கும் சன்மானம் இதுதானா?இந்தக் கேள்விகளுடன், ஐரோப்பாவில் நிமிர முனைகிறது இலங்கை. இந்த முயற்சிகளுக்கு இடைஞ்சலாக இருப்பது, நாட்டுப்பற்று என்ற போர்வையில் சமூகங்களை முடக்குவதற்கு அரசை அழுங்குப்பிடி பிடிக்கும் சக்திகள்தானே. இல்லாவிடின் இம்ரானின் இலங்கை விஜயமும், ஐ.நா இலங்கை எதிரொலிகளும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான பாகிஸ்தான் பிரதமரால் வேறு ராஜதந்திரத்தில், நகர்த்தப்பட்டிருக்கலாம். இவ்வாறு நகர்வது இலங்கைக்காக பங்காற்றும் பாகிஸ்தானின் நம்பிக்கையை, ஐ.நா வில் பன்மடங்காக்கலாம்.


இந்த ராஜதந்திரம்தான் பிரதமரை பெப்ரவரி 10 இல் பாராளுமன்றத்தில் பேச வைத்திருக்கும். எதுவானாலும் நல்லடக்க அனுமதிச் செய்தி கேட்ட இலங்கை முஸ்லிம்கள், இறைவனுக்கு சிரம் தாழ்த்தி, சுஜுதிலே விழுந்துள்ளனர். இனியென்ன மரணத்தின் வாசலுக்குச் சென்று இறப்பை வரவேற்கவும் இவர்கள் தயார்தான்.

எல்லாம் என்ன "எலிக்காவலுக்கு வளர்த்த பூனை கொழுத்த கதை" போலவே உள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3r1UTRp
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!