வெறுப்புணர்வை தூண்டுவோரை நாடு கடத்தவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் குழு கோரிக்கை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் குற்ற விசாரணைப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம்கோரும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆண்டகை ஆகியோரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை வழங்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் அரசியல் தலையீடுகள் இடம்பெறக் கூடாது என்பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சியிடமும் பொறுப்பு வாய்ந்த சகலரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
தாக்குதல்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களை துரிதமாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹாஷிமுடன் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் பல வழிகளில் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் மற்றும் தொடர்புகளை மேற்கொண்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் காணப்படும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை முழுமையாக தடை செய்து , அவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் உள்நாட்டவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை நாடு கடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எம்.மனோசித்ரா)
metronews
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QHMV2i
via Kalasam
Comments
Post a Comment