வக்பு சபையில் ஆவணங்கள் சமர்ப்பித்து நியமனம் பெறாவிடின் பள்ளி நிர்வாகத்தை ஏற்க மாட்டோம் - முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் திட்டவட்டமாக தெரிவிப்பு
ஊர் மக்களால் பள்ளிவாசலுக்காக நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் வக்பு சபையில் ஆவணங்களை சமர்ப்பித்து நியமனம் பெறாவிட்டால், வக்பு சட்டத்தின்படி நம்பிக்கையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். வெறும் பராமரிப்பாளர்கள் என்ற நிலையிலே காணப்படுவார்கள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பராமரிப்பாளர்கள் எந்த இடத்திலும் பள்ளிவாசலைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இது போன்றே நம்பிக்கையாளர் நியமனம் பெற்று அது காலாவதியான நிலையிலுள்ளவர்களும் நம்பிக்கையாளர்கள் என அழைக்கப்படமாட்டார்கள். அவர்கள் பொறுப்பாளர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
வக்பு சபையில் சட்ட ரீதியாக நியமனம் பெறாதவர்கள் பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு தகைமையை இழந்து விடுகிறார்கள். பள்ளிவாசலின் நிதி ஒரு ரூபாவைக்கூட செலவழிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. பள்ளிவாசல்களின் ஆவணங்களைக் கூட பயன்படுத்த முடியாது.
அவ்வாறே வக்பு சொத்துகள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவர்கள் ஆஜராக முடியாது. அவர்கள் நியமனம் பெற வேண்டும் என்ற சட்டத்தை மீறிய குற்றவாளிகளாகவே கருதப்படுவர். இதனால் வக்பு சொத்துகளை இழக்கக் கூடிய நிலையும் ஏற்படலாம்.
வக்பு சட்டத்தின் 14.1 உறுப்புரையானது பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு நடைமுறையிலுள்ள அதன் பழக்கங்கள், விதிகள், ஒழுங்கு விதிகள் மற்றும் வேறு ஒழுங்கு விதிகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நம்பிக்கையாளர்களாக உறுதிப்படுத்தி வக்பு சபை நியமனம் வழங்கும் என தெரிவிக்கிறது என்றார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) Vidivelli
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39tt11z
via Kalasam
Comments
Post a Comment