கார்டினலை காட்டி மக்கள் திசை திருப்பப்படுகின்றனரா...?

 

அ.இ.ம.கா தலைவரின் கைது பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளன. இந்த காட்டுமிராண்டித் தனமான கைதின் பின்னணியில், யார் உள்ளனர் என்ற சிந்தனையில் பலர் மீது சந்தேகப் பார்வையை செலுத்த முடியும். மிக வலுவான சந்தேசங்கள் எம்மவர்கள் மீதுள்ளன. இந்த தலைப்பினுள் செல்வது, தற்போதைய சூழ் நிலைக்கு பொருத்தமானதல்ல. அ.இ.ம.கா தலைவரின் கைதின் பின்னணியில் கார்டினல் மாத்திரமே உள்ளார் என்ற வகையிலான ஒரு விம்பம் மக்கள் மத்தியில் காட்டப்படுகிறது.


கார்டினலின் பேச்சு அ.இ.ம.கா தலைவரின் கைதில் ஒரு பெரிய தாக்கம் செலுத்தியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது மாத்திரமே கைதின் காரணமல்ல என்பதில் நாம் தெளிவாக இருத்தல் வேண்டும். இது போன்று இன்னும் எத்தனையோ காரணங்களுள்ளன. கார்டினல் தான் காரணம் எனும் வகையில் கருத்துக்களை பரப்பி, இவ் விடயத்தில் அரசின் மீதுள்ள தவறின் பாரதூரத்தை சிலர் குறைக்க முற்படுகின்றனர். இக் கருத்தை முதன்மையாக தூக்கி பிடிப்பதன் மூலம், இவ் விடயத்தில் உள்ள ஏனைய சந்தேகங்கள் மறைய வாய்ப்பாக அமைந்துவிடும்.


கார்டினலின் குற்றச்சாட்டென்ன?


அ.இ.ம.காவின் மூன்று பா.உறுப்பினர்களும் 20ஐ ஆதரித்திருந்தார்கள். இது அ.இ.ம.கா தலைவருக்கும், அரசுக்கும் இடையிலான உடன்பாட்டில் ஏற்பட்டதாகும். இதன் காரணமாக தான், இவ் அரசு றிஷாதை கைது செய்ய தயங்குகிறதா என்பதே அவருடைய குற்றச்சாட்டு. கார்டினலின் மேலுள்ள கூற்றே அ.இ.ம.கா தலைவரின் கைதுக்கு காரணம் என ஏற்கும் ஒருவர், அ.இ.ம.காவின் பா.உறுப்பினர்கள் 20ஐ ஆதரவளித்தமையே அ.இ.ம.கா தலைவரின் கைதுக்கு காரணம் என்பதையும் ஏற்றேயாக வேண்டும். இவர்களின் செயற்பாட்டால் தானே அ.இ.ம.கா தலைவர் கார்டினலின் பார்வையில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்?


கார்டினலுக்கு எவ்வாறு பதிலளிப்பது பொருத்தம்?


கார்டினல், தனது கூற்றில் ஒரு தர்க்க ரீதியான வாதத்தை முன் வைத்துள்ளார். அந்த தர்க்க ரீதியான வாதத்தை முறியடிப்பதே அ.இ.ம.கா தலைவரை குற்றவாளியாக சந்தேகிப்பதிலிருந்து விடுவிக்கும். அ.இ.ம.கா தலைவர் கூறி நாங்கள் 20க்கு வாக்களிக்கவில்லை, நாங்கள் சுய விருப்பிலேயே வாக்களித்தோம் என அ.இ.ம.காவின் மூன்று பா.உறுப்பினர்களும் கூறினால், அ.இ.ம.கா தலைவர் கார்டினலின் பார்வையில் குற்றமற்றவராக மாறிவிடுவார். மூவரில் ஒருவராவது கூறினால் கூட கார்டினல் சிந்திக்க வாய்ப்புள்ளது. கார்டினல் தர்க்க ரீதியான வாதத்தை முன் வைத்துள்ளார். நாம் " கண்பொஞ்சாதி " போல அவரை திட்டி கொண்டிருக்கின்றோம். இது எவ்வாறு அவருக்கான பொருத்தமான பதிலாக அமையும்?


ஏன் கார்டினலை மையப்படுத்தி குற்றச்சாட்டு?


தற்போது அ.இ.ம.கா தலைவர் கைது செய்யப்பட்டிருப்பதில் ஊழல்களை மறைத்தல், அரசின் தோல்வியை சரி செய்தல், சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை எதிர்கொள்ளல் என அரசின் இயலாமைகள் பல மறைந்துள்ளன. அ.இ.ம.கா தலைவரின் கைதில், அரசை சாடாத காரணமாக கார்டினலின் பேச்சை மாத்திரமே குறிப்பிட முடியும். கார்டினலின் பேச்சாலேயே அ.இ.ம.கா தலைவர் கைது செய்யப்பட்டார் என கூறும் போது, அது ஒரு போதும் அரசை நேரடியாக குற்றவாளியாக்காது. அதே நேரம், அ.இ.ம.கா தலைவரின் கைதுக்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அமைந்துவிடும். அரச சார்பு அணியினர், அரசை நோகாது இக் காரணம் ஒன்றையே கூற முடியும். இதனை அழுத்தமாக பதிவாக்கும் போது, இவ் விடயத்தில் அரசின் மீதுள்ள தவறு மறைக்கப்பட்டு, மக்கள் பார்வை கார்டினலை நோக்கி திரும்பும். இவ் விடயத்தில் எம்மவர்கள் மீதுள்ள தவறுகளும் வேறு திசை நோக்கி திரும்பிவிடும். இவைகளே கார்டினலின் பேச்சை பிரதானமாக்குவதன் பின்னாலுள்ள நுணுக்க அரசியல்.


தற்போது அ.இ.ம.கா தலைவரின் கைதுக்கு எதிராக நாம் வெளிப்படுத்தும் எதிர்ப்புக்களின் போது கார்டினலின் பேச்சை பிரதானமாக தூக்கி பிடித்தல் பொருத்தமானதல்ல. ஆயிரம் காரணங்களில் அதுவுமொன்று. நாம் கார்டினலுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி எதனை சாதிக்க போகிறோம். நாம் கார்டினலை மையப்படுத்தி கேள்வி கேட்பதானது, எம் எதிரியின் திட்டத்தை நிறைவேற்றிடச் செய்யும். கார்டினலை மையப்படுத்திய பிரச்சாரம் அரசுக்கான அழுத்தத்தை குறைக்கும். நாம் தற்போது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதன் நோக்கம் அரசுக்கு அழுத்தம் வழங்குவதாகும். எமது எதிர்ப்புக்கள் முழுமையாக அரசை நோக்கியதாகவே அமைதல் வேண்டும். நாம் அரசிடமே கேள்வி கேட்ட முடியும். அதுவே பொருத்தமான வழியுமாகும்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QzPQdZ
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!