ஈரானின் நிலைப்பாடு இஸ்லாம் சார்ந்ததா? இருப்புச் சார்பானதா? தேர்தல் சொல்லப்போகும் பதிலெது?


 -சுஐப் எம்.காசிம்-


வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம்.


வளைகுடாவிலுள்ள அத்தனை அரபு நாடுகளுக்கு மத்தியிலும் மொழியால் வேறுபட்ட நாடும் ஈரான்தான். இங்குள்ள நாடுகளில் மதத்தால் மாத்திரம் ஒன்றுபட்டுள்ள இந்நாடு, ஏனைய அனைத்திலும் வேறுபட்டுத்தான் நிற்கிறது. தொழினுட்பம், விஞ்ஞானம், வீரம் மற்றும் விவேகங்களில் வளைகுடா வீரனும் இதுதான். இதனால், ஜூன் 18இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பிராந்தியப் பார்வைகளை தலைநகர் தெஹ்ரானில் குவித்துள்ளது.


மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்களைச் சவாலுக்குள் இழுக்கும் ஈரானின் போக்கில், மாற்றம் ஏற்படாதா?1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இப்பிராந்திய நாடுகள் இதையே எதிர்பார்க்கின்றன. ஒவ்வொரு தேர்தல்களிலும், இந்த எதிர்பார்ப்பு வீணடிக்கப்படுவதும், அரபு நாடுகளை விஞ்சிய ஈரானின் வளர்ச்சியும்தான் இப்பிராந்தியப் பதற்றத்துக்கு காரணம். அரபு மண்ணில் அல்லது இறைதூதர்களின் புனிதப் பெருவெளியான இப்பிரதேசத்தில், இப்பதற்றம் தணிக்கப்பட வேண்டும். இதற்கு ஈரான் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிடின் அரபு மண்ணில் அமெரிக்க, ஐரோப்பியக் காலூன்றல்கள் மற்றும் கையாடல்களைத் தவிர்க்க முடியாதென்ற ஒரு பார்வை, இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்துக்கும் இருக்கிறது.


இஸ்லாமிய நிந்தனையாளரான ஸல்மான் ருஸ்திக்கு ஈரான் விதித்திருந்த மரண தண்டனைத் தீர்ப்பு, அந்தக் காலத்தில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில், பல சிந்தனைக் கிளர்ச்சிகள் மற்றும் கருத்தாடல்களைக் கிளறிவிட்டிருந்தன. இத் தீர்ப்பில் சில இஸ்லாமிய நாடுகள் வேறு நிலைப்பாட்டில் இருந்ததையும் நாம் நினைவில் கருதுவது கண்டிப்பானதாகும். இஸ்லாத்துக்காக ஈரான் இதைச் செய்கிறதா? அல்லது பிராந்தியப் பலத்தின் இருப்பை, ஸ்திரமாக்கச் செய்கிறதா? என்ற சிந்தனைக் கோணங்களின் எழுகைகளே, இன்று வரைக்கும் ஈரானை ஒரு வேறுபாட்டில் வைத்திருக்கிறது.


யுரேனியம் செறிவூட்டல் விடயத்திலுள்ள ஈரானின் நியாயம், யெமனில் ஹுத்தி போராளிகளுக்கு உதவுவது, சிரியாவில் நுழைந்துள்ள தெஹ்ரானின் தலையீடு, பலஸ்தீன் மற்றும் காஸாவில் ஹமாஸுக்கான அறிவியல் ஆதரவு, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு அள்ளி வழங்கும் ஆயுதக் கொடுப்பனவுகள்தான், வளை குடா வீரனென்ற விம்பத்தில் ஈரானை வைத்துள்ளது. இதிலுள்ள சர்ச்சைதான், அரபு மற்றும் அயல் நாடுகளுக்கு திண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.


பயங்கரவாதத்தின் ஏற்றுமதிகளாக மேற்குலகம் கருதும் இவற்றை, இஸ்லாத்தின் இருப்புக்கானது என்று எப்படிக் கருதுவது? எனவே, இருப்புக்கான ஈரானின் நலன்கள்தான், அரபு மண்ணை ஆக்கிரமிப்பதாக அரபு நாடுகள் கருதுகின்றன. இதில் சில இஸ்லாமிய நாடுகளுக்கு உள்ள இணக்கம் முஸ்லிம் உலகில் மௌனித்தும் கிடக்கிறது. எனினும், இதற்கான ஈரானின் மறுதலைச் சிந்தனைகளும், முஸ்லிம் உலகின் மீதான மேற்குலகின் ஓரக்கண் பார்வைகளும் அதிகமான இஸ்லாமிய நாடுகளை, ஈரானின் வளர்ச்சியை வேண்டி நிற்கவே செய்கின்றன.


காஸா, இஸ்ரேல் போர் முடிந்த கையோடு,"காஸாஸ்ரிப்" எனும் மிகப் பெரிய ரொக்கட்டுக்களை ஈரான் உற்பத்தி செய்து, தனது பலத்தை உறுதி செய்துள்ளது. சுமார் 2500 கிலோமீற்றர் வீச்செல்லை உடைய இது, மத்திய கிழக்கின் எந்த வான்மூலைகளையும் இலக்கு வைக்கும் இயல்தகவிலுள்ளன. சிரிய ஜனாதிபதித் தேர்தலில், பஸீர் அல்அஸாத் 91வீத வாக்குகளைப் பெற்று, நான்காவது தடவையாக ஜனாதிபதியாகிறார். இவையெல்லாம் பயங்கரவாதத்தின் ஏற்றுமதிகளென அமெரிக்கா எப்படிச் சொல்லும்? காஸா, இஸ்ரேல் யுத்தக் குற்றங்களை ஆராய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நடாத்தப்பட்ட வாக்களிப்பை நிராகரித்த மேற்குலகமா?பயங்கர வாதத்துக்கு வரைவிலக்கணம் சொல்வது? இந்தப் பிரச்சாரங்கள்தான் ஈரானின் ஜனாதிபதித் தேர்தலைச் சூடேற்றவுள்ளது.


மொத்தம் 590 பேர் விண்ணப்பித்தும் ஏழு பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு தடவைகள் பதவியிலிருந்து தற்போது விலகிச் செல்லும் ஜனாதிபதி ஹஸன் ரூஹானிக்கு நெருக்கமான அனைவரது வேட்புமனுக்களையும் பாதுகாப்புச் சபை நிராகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்களில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், அணுநிலை உலையத்தின் தளபதி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் முன்னாள் நீதிபதியொருவரும் போட்டியிடுகிறார். 1998இல் இவர் வழங்கிய தீர்ப்புத்தான் நாட்டில் இவரைப் பிரபலமாக்கியது. "லொக்கர் பீ" விமானக் குண்டு வெடிப்புக்கு சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர், ஈரானின் நலன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூளைகளைச் சுட்டிக்காட்டியிருந்தது இவரது தீர்ப்பு.


எதுவானாலும், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக்கள்தான் 1979 க்குப் பின்னர் ஈரானில் வென்று வருகின்றன. இந்நிலைப்பாடுகளை மாற்றுவதற்கான சிந்தனைகள் தூவப்பட்டாலும் இது இன்னும் நிலைக்கவில்லை என்பதையே, கடந்த காலத்தில் எழும்பி, அடங்கிப்போன கிளர்ச்சிகள் காட்டுகின்றன.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3yQjtbZ
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்