அரசியல் கைதிகள் : சந்தர்ப்பம் பார்த்து காய் நகர்த்துகிறதா த.தே.கூ..? நாம்..?
இலங்கை நாடு பல்வேறு சவால்களை முகம் கொடுத்து வருவது நாம் அறிந்ததே. தற்போது பயங்கரவாத தடை சட்டத்தால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்குமாக இருந்தால் ஒரு டொலரின் பெறுமானம் 300 ரூபாயை எட்டுமென ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையை அறிந்த த.தே.கூ மிக நேர்த்தியாக காய் நகர்த்துவதாகவே உணர முடிகிறது.
அண்மையில் த.தே.கூவுக்கும், ஜனாதிபதி கோத்தாபாயவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஏற்பாடாகி, இரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு பாரிய அழுத்தங்களின் விளைவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. இதனை இரத்து செய்த நோக்கமென்ன என்ற சிந்தனை எழலாம். இது தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாத அழுத்தத்தால் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இதற்கு முன்பும் த.தே.கூவின் உறுப்பினர்கள் பல தடவை ஜனாதிபதி கோத்தாவை சந்தித்துள்ளனர். சந்திப்பதெல்லாம் இனவாதத்தை தோற்றுவிக்காது. இதனையெல்லாம் கவனிக்கும் நிலையில் தற்போது நாட்டு மக்களுமில்லை. அப்படியானால், ஏன் என கேட்கலாம். சந்தித்த பிறகு ஏதாவது தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால், அது இனவாதத்தை தோற்றுவிக்குமல்லவா?
சந்தித்தே சாதிக்க வேண்டுமென்றில்லை. இன்று பேச எத்தனையோ வழிகள் உள்ளன. த.தே.கூவானது தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சாதித்துவிட்டார்கள் என்றே கூற வேண்டும். கடந்த 22ம் திகதி ஏதோ ஒன்றை பேச கூடிய பாராளுமன்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியே அதிகம் பேசியது. இந்த பேச்சை நாமல் ராஜபக்ஸவே ஆரம்பித்து வைத்துமிருந்தார். இதனை விட சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யாருமிருக்க முடியுமா? இதனை எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் பேசினால் நியாயமெனலாம். நீதி அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு, ஆட்சியையே தன் உள்ளங்கையில் வைத்துகொண்டு நாமல் பேசுவது வேடிக்கை தான்.
இதன் பின்னால் நிச்சயம் வலுவான அரசியல் பின்னணி இருக்க வேண்டும். அன்று நடைதேறிய அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட நாடகங்களாகும். நாமல் பேசியதும், அவரது பேச்சை தொடர்ந்து சாணக்கியன், சுமந்திரன், கஜேந்திரகுமார், மனுச நானயக்கார, சரத் பொன்சேகா மற்றும் தயாசிரி ஜயசேகர ஆகியோர் இது தொடர்பில் பேசியிருந்தனர். எல்லோரும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே பேசியிருந்தமை பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சியினர் அரசியல் கைதிகளின் விடுதலையை விமர்சித்து த.தே.கூவினதோ அல்லது தமிழர்களினதோ எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பாது. எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிடாது த.தே.கூவினால் காய் நகர்த்தவும் இயலும். ஆளும் கட்சி பிரதானியே இந்த பேச்சை ஆரம்பித்து வைத்தால், அங்கு எதிர்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.
இது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் சில சல சலப்புக்களை ஏற்படுத்தும் வேலைகளும் பார்க்கப்பட்டிருந்தன. அரசியல் கைதிகள் பற்றி பேசிய சாணக்கியன் கருணாவையும், பிள்ளையானையும் வம்புக்கு இழுத்திருந்தார். சுமந்திரன் சுரேன் ராகவனையும் வம்புக்கு இழுந்திருந்தார். அன்று இவர்களை வம்புக்கு இழுக்க வேண்டிய எத் தேவையும் இருக்கவில்லை. ஏன் இழுத்தார்கள் தெரியுமா? எல்லோரும் "ஆம்" என தலையசைத்தால், பார்வையாளர்கள் நாடகமென கண்டுபிடித்துவிடுவார்கள். பேரினத்தை சேர்ந்த ஒருவரிடம் கேமை கேட்டால், அவர் குட்டையை குழப்பிவிடுவார். தமிழரிடம் கேமை கேட்டால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி சண்டை போன்ற ஒரு காட்சி ஏற்படுத்தப்படும். விடயமும் குழம்பாது.
இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிக்கு ஏற்பட்டுள்ள சவாலுக்கும், த.கூ.வின் சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொள்ளவே ஜனாதிபதி அவர்களை சந்திப்புக்கு அழைத்திருந்தார். அன்று சந்திப்பு நடைபெறாவிட்டாலும், வேலை நடந்துள்ளது. கடந்த பொசன் தினமன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பொசன் தினமன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமா என சுமந்திரன் பாராளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார். அவரின் சவாலை ஏற்ற அரசு விடுவித்து காட்டியுள்ளது. அவ்வளவு நல்லவர்களா இவர்கள்? இதுவெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட நாடக அரங்கேற்றங்கள்.
ஜனாதிபதி த.தே.கூவை சந்திக்க அழைத்தது போன்று, ஏன் எம்மவர்களையும் அழைத்து பேச எண்ணவில்லை என்பதுவே இங்கு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. எம்மவர்கள் சிலர் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியே ஜி.எஸ்.பி பிளஸ் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால், ஜனாதிபதி எம்மையும் அழைத்து பேச எண்ணியிருக்க வேண்டுமல்லவா..? எம்மவர்களை கணக்கில் கொண்டதாகவும் தெரியவில்லை. இதுவே எமது சமூகத்தின் நிலை.
எம்மவர்களிடம் பேசுவதென்றால், ஜனாதிபதி யாரிடம் பேசுவது என்ற வினா எழலாம். முஸ்லிம் கட்சி தலைவர்களாக ஹக்கீம், றிஷாத் ஆகியோரையே குறிப்பிட முடியும். இதில் றிஷாத் பயங்கரவாத தடை சட்டத்திலேயே சிறையில் உள்ளார். இது பற்றி ஹக்கீமே பேச வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அனைவரும் ஏற்றேயாக வேண்டும். அண்மையில் டுவிட்டர் பதிவொன்றில் கருத்து தெரிவித்திருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இது விடயத்தில் ஹக்கீம் எதுவும் பேசவில்லையென கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பில் ஹக்கீம் தொடர் தேர்ச்சியான அழுத்தங்களை செய்திருந்தால், ஜனாதிபதி நிச்சயம் ஹக்கீமையும் அழைத்து பேசியிருப்பார். பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகியுள்ள எம்மவர்கள் சிலரையும் விடுவிக்கும் நிலை உருவாகியிருக்கும்.
கடந்த பாராளுமன்ற அமர்வில் ஹக்கீம் பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகிய சிலரை பற்றி பேசிய போது அங்கு சல சலப்புக்கள் உருவாகியிருந்தன. ஆளும் கட்சியை சேர்ந்த பலர் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர். இந்த விடயமானது த.தே.கூவானது செய்தது போன்று முறையான விதத்தில் ஏற்கனவே திட்டமிட்டு பேசப்பட்டிருந்தால், இந்த சல சலப்புக்கள் எல்லாவற்றையும் இலகுவாக அடக்கியிருக்கலாம். இவற்றை அடக்க இதனை விட பொருத்தமான நேரமுள்ளதா? " இது பற்றி இப்படி பேசுவார்கள், யாரும் ஒன்றும் பேச வேண்டாம்" என்ற உத்தரவு ஆளும் மற்றும் எதிர்கட்சியினருக்கு அனுப்ப பட்டிருக்க வேண்டும். எம்மவர்களிடம் முறையான திட்டமிடல்கள் சிறிதும் இல்லை.
எமது அரசியல் வாதிகள் தான் அப்படி என்றால், எமது சிவில் சமூகம் அதனை விட அசமந்தமான போக்கில் உள்ளது. எல்லாம் அரசியல் வாதிகளே செய்யவேண்டும் என்பது எமது சிவில் சமூகத்தின் சிந்தனையாக உள்ளது. எமது சமூகத்தின் அடிமைச் சிந்தனையும் எம்மை அரசியல் உயர் மட்டங்கள் ஒரு பொருட்டாகவே கொள்ளாமைக்கான காரணமாக குறிப்பிடாலாம். எமது சமூகத்தின் அடிமைச் சிந்தனையும் மாற்றப்பட வேண்டும்.
இது பயங்கரவாத தடை சட்டத்தில் அநியாயமாக கைது செய்யப்பட்டவர்களை மீட்க மிக பொருத்தமான நேரமாகும். மயிலிடம் இறகு போடு என்றால் போடாது, பிடிங்கியே எடுக்க வேண்டும். எமது அரசியல் வாதிகளும், சிவில் சமூகமும் அரசுக்கு பாரிய அழுத்தம் ஒன்றை வழங்கினால், பயங்கரவாத தடை சட்டத்தில் அநியாயமாக கைதாகியுள்ள எம்மவர்களை மிக இலகுவாக மீட்க முடியும். அவர்களை மீட்க இதனை விட பொருத்தமான நேரம் எமக்கு ஒரு போதும் கிடைக்காது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3qCQBk3
via Kalasam
Comments
Post a Comment