மருதமுனையில் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு..!கொரோனா தொற்று, இறப்பு வீத அதிகரிப்பால் நடவடிக்கை என்கிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்..!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதால், நாளை வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அப்பிரதேசத்தில் ஆள் நடமாட்டத்தை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் கூறியிருப்பதாவது;


கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரத்துறையினரதும் மருதமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமா சபை மற்றும் வர்த்தகர் சங்கத்தினரதும் பங்கேற்புடன் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மருதமுனையில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


சுகாதாரத்துறையினரால் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மருதமுனைப் பிரதேசத்தில் பரவும் கொவிட் வைரஸானது திரிப்படைந்த, வீரியம் கூடிய வைரஸாக இருக்கக்கூடும் என சுகாதாரத்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இப்பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பிரதேசத்தில் உடனடியாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சினால் 2020/03/25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2168/6ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி மற்றும் 2020/10/15/ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2197/25ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியின் 91ஆம் ஒழுங்கு வீதி ஆகியவற்றின் பிரகாரம் மாநகர முதல்வராகிய என் மீது உரித்தாக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ்,


மருதமுனை வீ.சி. வீதி தொடக்கம் செட்டியார் வீதி வரையான முழுப்பிரதேசத்திலும் ஆள் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான உத்தரவு இத்தால் விடுக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடு 2021/07/01ஆம் திகதி இரவு 10.00 மணி தொடக்கம் 2021/07/07ஆம் திகதி காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.


இக்காலப்பகுதியில் பிரதான வீதி ஊடான போக்குவரத்துகளைத் தவிர உள் வீதிகளில் எவரும் நடமாட முடியாது. அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோர் தவிர எவரும் வீட்டில் இருந்து வெளியேற முடியாது. மருந்தகங்கள் தவிர்ந்த கடைகள் எதுவும் திறக்கப்பட மாட்டாது என இத்தால் அறியத்தரப்படுகிறது.


ஆகையினால், உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் ஆட்கொல்லி நோயான கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வீட்டில் இருந்து கொள்ளுங்கள். மருதமுனைப் பிரதேசத்தில் கொவிட் வைரஸ் தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை, பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்- என முதலவர் ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேற்படி கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர், எம்.எஸ் உமர் அலி, பி.எம்.சிபான் உள்ளிட்டோரும் மருதமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமா சபை மற்றும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

@

முதல்வர் ஊடகப் பிரிவு



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3dpuKHl
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!