பங்காளிக் கட்சிகளை பிடிக்குள் இறுக்கும் ஜனாதிபதியின் நகர்வு!

 

சுஐப் எம். காசிம்-


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் நான்தான் என்று அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பங்காளிக் கட்சிகளின் பிரச்சினைகளுக்கு முடிச்சுப் போட்டுவிட்டார். தவணைகள் வரையறுக்கப்பட்டிருந்த 19 ஐ இல்லாமலாக்கியதும் இதற்குத்தானே! இப்போது எத்தனை தடவைகளும் கேட்கலாம் என்றிருக்கையில், ஒற்றைத் தடவையோடு ஏன் ஒதுங்க வேண்டுமென அவர் நினைத்திருக்கலாம். எதிர்க்கட்சி இப்போது உள்ள லட்சணத்தில், எத்தனை தடவைகள் போட்டியிட்டாலும் வெல்லலாம் என்ற தைரியமும் இவ்வாறு சொல்ல இவரைத் தூண்டியிருக்கும். உடனிருப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக மாட்டிக்கொள்கையில், அவர்களை அரவணைத்துச் செல்லாது உதைத்துத் தள்ளுகின்ற கட்சியாகவும் இது பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற இந்த அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகளின் பிரச்சினைகளுக்குரிய தீர்வும் இந்த அறிவிப்பிலுள்ளது.


குறிப்பாக, ஒற்றையாட்சியை விரும்பும் அல்லது வலியுறுத்தும் பங்காளிக் கட்சிகளின் பிரச்சினையைத் தீர்க்கும் அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் இந்த அறிவிப்பில் விருப்புற்றிருக்கவில்லை. எதிர்கால ஜனாதிபதிக் கனவுடன் இந்தக் கட்சிக்குள் பலர் இருப்பதால், இந்த அறிவிப்பு இவர்களில் சிலருக்கு குலுக்கலையும் ஏற்படுத்தியிருக்கலாம். இதனால்தான், சில விரிசல்களுடன் வெளியேற இருந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இப்போது ஏற்படச் சாத்தியமென எதிர்பார்க்கப்படும் இன்னும் சில அமைச்சரவை மாற்றங்களும் விரைவில் நடக்கலாமென நம்பப்படும் மாகாண சபைத் தேர்தலும்தான், மைத்திரி அணியை மௌனம் காக்க வைத்திருக்கிறது.


இதிலிருந்து புரியவரும் ஒன்றுதான், அதிகாரப்பகிர்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு இல்லை என்பதாகும். இந்த நிலைப்பாடுகளைத் தென்படவைத்து, சிறுபான்மைக் கட்சிகளைச் சேர்ப்பதற்கே மைத்திரி அணி முயல்வதாகத்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பியது. இதுதான் நீறுபூத்த நெருப்பாக புகைந்து இப்போது நீங்கியிருக்கிறது.


இப்போது, வருவோம் விடயத்துக்கு. இந்த மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென்ற பிரச்சினையின் இழுபறிகள்தான், கடந்த மூன்று வருடங்களாக இந்தத் தேர்தலுக்கு தடையாக இருக்கிறது. நல்லாட்சி அரசில் 2017 இல் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்டம்தான், ஏற்கெனவே இருந்த எல்லாவற்றையும் இல்லாமலாக்கி, தேர்தலையும் குழப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றாச்சாட்டுக்கள் தென்னி லங்கையில் இல்லாவிடினும், வடக்கு, கிழக்கில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு அடிநாதமாக அறிமுகப்படுப்படுத்தப்பட்ட அதிகாரப்பகிர்வல்லவா மாகாண சபை. இதையும் இல்லாமலாக்கிய ஐக்கிய மக்கள் சக்தியுடனா இன்னும் இவர்களுக்கு கூட்டு என்றுதான், தமிழர்களின் ஏக அரசியல் விமர்சிக்கப்படுகிறது.


இது போதாதற்கு இந்த ஏக உரிமைகள் இந்த விடயத்தில் இன்னும் தவறுகள் செய்வதாகவும் விமர்சனங்கள் தொடராமலில்லை. மாகாண சபைகளின் அதிகாரங்களின் கீழுள்ள அரச நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகளை தரமுயர்த்துதல் மற்றும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தாமையால் மீளத் திரும்பல் என்பவையும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலுள்ள இவர்களின் இயலாமைகளையே காட்டுகின்றன.


இந்த இயலாமைகளைத்தான் இப்போது மத்திய அரசின் ஆளுமைகள் அள்ளிச் செல்லப் பார்க்கின்றன. ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தி, பிரிவினைவாதத்தை தோற்கடித்துள்ள இந்த அரசாங்கத்தில், மாகாண சபைக்கு உள்ளதையாவது காப்பாற்றும் யுக்தியுடன் நடந்துகொள்வதில்லையா? உரிமைக்காக குரல்கொடுக் க வந்துள்ள நமது சிறுபான்மை தலைமைகள். வட மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சமன் பந்துலசேனவின் விடயத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கப் புறப்பட்டுள்ள ஏக உரிமைகள், ஏற்கனவே விட்ட தவறுகளை எண்ணிப்பார்த்துவிட்டுப் புறப்பட வேண்டும். இதுதான் இன்றுள்ள கவலை.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3xmi4s0
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!