காணாமல் போயுள்ள மருந்துகள் தொடர்பான தகவல்கள் : சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி
(எம்.எப்.எம்.பஸீர்)
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்துகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ' ஈ.என்.எம்.ஆர்.ஏ.', அதிலிருந்த தகவல்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் நளின் பண்டார சட்டத்தரணிகளுடன் கோட்டையிலுள்ள சி.ஐ.டி. தலைமையகத்துக்கு சென்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.
ஏற்கனவே குறித்த தரவுக் கட்டமைப்பு தகவல்கள் அழிந்தமை தொடர்பில் சி.ஐ.டி.யின் கணினி குற்றப் பிரிவு பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒளதடங்கள் அதிகார சபையின் இந்த தரவுக்கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக எபிக் லங்கா டெக்னொலஜி நிறுவனம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன 2018 ஆம் ஆண்டு ஐந்து வருட கால உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.
அந்த தரவுக் கட்டமைப்பில் மருந்துகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் பதியப்பட்ட நிலையிலேயே அண்மையில் அந்த கட்டமைப்பிலிருந்த அனைத்து தகவல்களும் அழிந்துவிட்டதாக தெரியவந்தது. இந்நிலையிலேயே சி.ஐ.டி. விசாரணைகள் இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் தரவுக் கட்டமைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டன என்பதை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
எனினும், மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும் என்றோ தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்படும் என்றோ தேவையற்ற விதத்தில் அச்சமடைய வேண்டாம் என அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறான பின்னனியிலேயே, இந்த விவகாரத்தில் மருந்து மாபியாக்களின் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், மிக ஆழமான, விரிவான விசாரணைகளை கோரி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முறைப்பாடளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3kHnI3g
via Kalasam
Comments
Post a Comment