தமிழ் மொழியை கண்டுகொள்ளாத “மக்களின் பேரவை”
மக்களின் நாளைய நலனுக்காக என்ற போர்வையில் ஆளும் அரசாங்கத்தில் உள்ள பிரதான இனவாதிகளின் தலைமையில் பதினொரு கட்சிகள் சேர்ந்து அமைக்கப்பட்ட “மக்களின் பேரவை” யானது வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஆனால் அதன் ஆரம்ப வைபவ மேடையில் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பதாகைகளில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மொழியை காணமுடியவில்லை. மாறாக அனைத்து பதாகைகளும் சிங்கள மொழியிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதாவது பல இன, மொழி பேசுகின்ற மக்கள் வாழுகின்ற நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுபோலல்லாது ஒரு இனத்தை அல்லது ஒரு மொழியை பிரதிநிதித்துவம் செய்பவர்களின் நிகழ்வு போன்று இருந்தது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இந்த நாட்டில் வாழுகின்ற இரண்டு சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் தாய்மொழியான தமிழை புறக்கணித்துவிட்டு எந்த மக்களின் நலனுக்காக இதை தோற்றுவித்தார்கள் என்பது எமக்கு புரியாத ஒன்றல்ல.
இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தினை கோரியே ஆரம்பத்தில் தமிழர்கள் அஹிம்சை போராட்டத்தினை நடாத்தினார்கள். பின்பு அது தனிநாட்டுக்கான ஆயுதபோராட்டமாக மாறியது. அவ்வாறிருந்தும் இரண்டு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புறம்தள்ளிவிட்டு அமைக்கப்பட்ட மக்களின் பேரவையானது அது மக்களுக்கானதல்ல மாறாக அவர்களது அரசியலுக்கானது.
எது எப்படி இருப்பினும் சர்வாதிகாரப்போக்கில் நாட்டை ஆட்சி செய்கின்ற குடும்பத்தினரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திவிட்டு அவர்களது எதேச்சதிகாரத்துக்கு அடிபணியாமல் உள்ளே இருந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் வழங்குகின்ற இவர்களை பாராட்டுவதை விட இறைவனுக்கு நன்றி செலுத்துவது எங்களது கடமையாகும்.
ஏனெனில் இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் உருவாகாமல் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருந்தால் அதில் அதிகம் பாதிக்கப்படப்போவது முஸ்லிம்கள் என்பதில் சந்தேகமில்லை.
சில மாதங்களுக்கு முன்பு பிரதான எதிர்கட்சியினால் அமைச்சர் உதய கம்பன்விலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் ஆளும் கட்சிகளுக்குள் இருந்த பிளவுகளை தடுத்து அவர்களை ஒற்றுமைப்படுத்த முயற்சித்தனர். அதுபோல் மீண்டும் பிரதான எதிர் கட்சியினர் ஆளும் கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து ஆட்சியாளர்களுடன் மீண்டும் ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்யாமல் இருக்க வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.
எனவே இவ்வாறான துணிச்சலான நடவடிக்கைக்காக மக்களின் பேரவை ஏற்பாட்டாளர்களை பாராட்டுவதுடன், தமிழ் மொழியை புறக்கணித்ததற்காக கண்டனத்தினை இங்கே பதிவு செய்கிறோம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3muSr5M
via Kalasam
Comments
Post a Comment