தெஹிவளை பள்ளி தாக்குதல்தாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
தெஹிவளை - கொஹுவலை பாத்தியா மாவத்தை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி .வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த சந்தேக நபர் பள்ளிவாசல் பிரதான வாயில் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து சிசிரிவி பதிவுகளின் உதவியுடன் கொஹுவலை பொலிஸார் அவரை கைது செய்து கல்கிசை நீதிவான் நீதிமன்றில் கடந்த 18 ஆம் திகதி ஆஜர்படுத்தினர்.
நீதிவான் சந்தேக நபரை கடந்த 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பிணை வழங்கக் கூடியது எனக்கூறி பிணை மனுவொன்றினைத் தாக்கல் செய்தனர்.
இதேவேளை பொலிஸ் தரப்பில் ஆஜரான கொஹுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிணை வழங்கப்படுவதை ஆட்சேபித்தார். தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் இன முறுகல்களை ஏற்படுத்தும் காரணிகள் உள்ளனவா என்பதை அறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
பள்ளிவாசல் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஷிராஸ் நூர்தீன், பசன் வீரசிங்க மற்றும் இர்சாத் அஹமட் என்போர் பிணை வழங்கப்படக்கூடாது என வாதிட்டனர்.
சந்தேக நபர் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர் எனவும், மன அழுத்தங்களுக்கு உள்ளானவர் எனவும் ஏற்கனவே மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டால் தனக்கோ அல்லது பிறருக்கோ எதுவித தீங்கும் விளைவிக்கக் கூடாது என்பதற்காக மேலுமொரு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென வாதிட்டனர். இதனை நீதிமன்றம் மருத்துவ அறிக்கை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டுமென்றனர்.
இரு தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை செவிமடுத்த கல்கிசை நீதிவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றையதினம் மேலதிக வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்கும் படியும் உத்தரவு பிறப்பித்தார்.
Vidivelli
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3bo1C1P
via Kalasam
Comments
Post a Comment