'ஒரே நாடு ஒரே சட்டம்' : மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உள்ளிட்டவற்றுக்குத் தடைவிதிக்கப் படுமா ? - ஷரீன் அப்துல் ஸரூர் அதிரடி
(நா.தனுஜா)
'ஒரே நாடு, ஒரே சட்டம்' கொள்கை தொடர்பான புதிய ஜனாதிபதி
செயலணியானது முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்திருத்தம் தொடர்பில் மாத்திரமன்றி மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உணவு, அரபுமொழி நூல்கள், மாடு அறுத்தல் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்படக்கூடும் என்ற கரிசனைகளையும் தோற்றுவித்திருப்பதாக பெண்கள் தொடர்பான செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகரும் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷரீன் அப்துல் ஸரூர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிய செயலணி தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
அண்மைக்காலத்தில் நாடு பொருளாதாரம் உள்ளடங்கலாக அனைத்துத்துறைகளிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தூண்டுதல் என்பது ராஜபக்ஷக்களின் அரசியல் உத்தியாக மாறியிருக்கின்றது. அதன்மூலம் அவர்கள் தொடர்ந்து அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றார்கள். 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அண்மைக்காலத்தில் பெருமளவான மக்கள் அதிருப்தியடைந்திருக்கும் சூழ்நிலையில், இந்தப் புதிய செயலணியின் நியமனத்தை முஸ்லிம்களுக்கு எதிரானதொரு நகர்வாகவே நோக்கவேண்டியிருக்கின்றது.
குறிப்பாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலணிக்கு சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சட்டத்திருத்தங்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் நெருக்கடிக்குரிய விடயமாகவே காணப்படும்.
இந்தப் புதிய செயலணியானது முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்திருத்தம் தொடர்பில் மாத்திரமன்றி மத்ரஸாக்கள், புர்கா, ஹலால் உணவு, அரபுமொழி நூல்கள், மாடு அறுத்தல் ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்படக்கூடும் என்ற கரிசனைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து, ஜனாதிபதியின் கைகளில் மட்டுமீறிய அதிகாரங்களை வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3Cvzp4R
via Kalasam
Comments
Post a Comment