பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு
இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.
சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்.
இரவு நேர பொருளாதாரம் என்ற பதத்திற்குள், ஹோட்டல் வியாபாரம், உணவகங்கள், மதுபானசாலைகள், பாலியல் தொழில் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி இதுவரை இல்லாத பின்னணியில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற இடத்திற்கு வந்துள்ளனர்.
"புத்தர் காலத்திலேயே இருந்த தொழில்"
பாலியல் தொழில் என்ற விடயம் புத்த பெருமானின் காலத்திலிருந்து காணப்படுவதாக ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவிக்கின்றார்.
அரச தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற விவாதமொன்றின் போதே அவர் இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.கோகிலா குணவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த கருத்துக்கு ஒரு சில தரப்பு ஆதரவு வழங்கிய வருகின்ற நிலையில், மற்றுமொரு தரப்பு எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளது.
பாலியல் தொழில் என்பது, உலகிலேயே மிக பழமை வாய்ந்த தொழில் என கோகிலா குணவர்தன கூறுகின்றார்.
தான் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிடுகின்ற போதிலும், இந்த கருத்தினை தனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை முச்சக்கரவண்டி சாரதிகள், இடை த்தரகர்கள் என அனைத்து தரப்பினரும் மோசடி செய்து வருகின்றனர்.
இதைவிட, தனது உடலை விற்பனை செய்து, வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, பாலியல் தொழிலை சட்டமாக்கிக் கொடுக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் கஷ்டத்தில் விழ மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.
இதைச் சட்டமாக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள், சிறைச்சாலைகளுக்கு செல்லாது, தமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என அவர் கூறுகின்றார்.
எனினும், இது தனது தனிப்பட்ட கருத்து எனவும், இது அரசாங்கத்தின் கருத்து கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோர் இறுதி வரை இவ்வாறான தீர்மானமொன்றை எடுக்க மாட்டார்கள் என்பதனை தான் நன்கறிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கேகிலா குணவர்தன கூறுகின்றார்.
எனினும், பெண் என்ற விதத்தில், பெண் ஒருவரை பாலியல் ரீதியில் மோசடி செயற்பாடுகளுக்குள் இட்டு செல்வதற்கு தான் எதிர்ப்பு என்ற விதத்திலேயே இதனை தான் கூறுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
பாலியல் மோசடிகளிலிருந்து 100 வீதம் பெண்கள் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்வதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே தான் இதனைக் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
"பெண்களுக்கான முடிவை பெண்களே எடுக்க வேண்டும்"
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவும், பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து கருத்து வெளியிட்டார்.
பெண்ணொருவரின் உடல் தொடர்பிலான தீர்மானத்தை எடுக்க வேண்டியது, குறித்த பெண்ணே தவிர, வேறொருவரும் கிடையாது என அவர் கூறுகின்றார்.
எந்தவொரு பெண்ணும் பாலியல் தொழிலில் விருப்பத்துடன் இணைவதில்லை என கூறிய அவர், பெண்களை மோசடி செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படாத பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாலியல் தொழில் என்ற ஒன்று உள்ளமையினால், அந்த தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற இடத்திலிருந்து, தான் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.
பெண்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது அவர் என்ற போதிலும், இன்றைய உலகில் பெண்கள் தொடர்பில் வேறு நபர்களே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
"தமிழ்ப் பெண்களே பாதிக்கப்படுவார்கள்"
பாலியல் தொழிலை சட்டமாக்கும் பட்சத்தில், கட்டாயமாக தமிழ் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என பெண் சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள யுவதிகள் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஏனைய சமூகங்களை விடவும், பின்தங்கிய நிலையில் பெரும்பாலும் தமிழ் சமூகம் உள்ளமையினால், அந்த பெண்கள் விபசார தொழிலுக்கு ஈடுபடுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
பொருளாதார ரீதியில் தம்மையும், தமது குடும்பத்தையும் வலுப்படுத்த அந்த பெண்கள், இவ்வாறான தொழில்களில் ஈடுபடக்கூடும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
அதுமாத்திரமன்றி, குறிப்பிட்ட காலப் பகுதியில் தமது அழகு மற்றும் உடல் எடை மாறுபடும் பட்சத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அந்த தொழிலிலிருந்து தவிர்க்கப்படும் நிலை ஏற்படும் என கூறிய அவர், அதன் பின்னரான காலத்தில் அவர்களின் வாழ்க்கை முழுமையாகவே பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன், பல்வேறு நோய்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதுடன், சட்டவிரோத குழந்தைகளை ஈன்றெடுக்கும் நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.
பாலியல் தொழில் சட்டமாக்கப்படும் பட்சத்தில், திருமண பதிவுகளின் போது தொழில் என்ற இடத்தில் 'விபசாரம் ' என்பதனை குறிப்பிட்டு, அதனை ஆண் ஏற்றுக்கொள்வாராயின், அது சாத்தியமானது என உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.
அதைவிடுத்து, பாலியல் தொழிலை சட்டமாக்கும் கருத்தானது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என பெண் சமூக செயற்பாட்டாளர் உமா சந்திரா பிரகாஷ் குறிப்பிடுகின்றார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/31dFHsz
via Kalasam
Comments
Post a Comment