உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பகிரங்கப்படுத்த முடியாத தகவல்கள் ஜனாதிபதியிடம் என்கிறார் ரமேஷ் பத்திரண
(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதும், தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியதுமான பகிரங்கப்படுத்த முடியாத சில தகவல்கள் மாத்திரமே ஜனாதிபதியிடம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண, இதனுடன் தொடர்புடைய எந்தவொரு விடயங்களையும் மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. எந்த வகையிலும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ அதில் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட பல சாட்சிகளை அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் இணைந்து மறைத்துள்ளன.' என்று குற்றஞ்சுமத்தினார்.
அத்தோடு குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 22 பகுதிகள் அடங்கிய முழுமையான அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும், அதற்கான கோரிக்கைகளை விடுத்த போதிலும், எவ்வித பதிலும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
பேராயர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகல அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தெரிவித்துள்ளமைக்கமைய தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவமுடைய சில காரணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தகவல்களும் பாராளுமன்றத்திற்கும் ஏனைய அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இவ்விடயத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் யார் மீதும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளும் அனைத்தும் நாட்டில் சட்டத்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகக்குறைவான தகவல்கள் மாத்திரமே தற்போது ஜனாதிபதி வசம் காணப்படுகிறது.
அவை தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகள் என்ற அடிப்படையில் கருத்திக் கொள்ளப்படுபவையாகும். அவற்றை மக்களுக்கு பகிரங்கமாக வழங்காவிட்டாலும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/5zDMk4U
via Kalasam
Comments
Post a Comment