மாகாண இளைஞர் சேவைகள் காரியாலய விவகாரத்தில் முட்டுக்கொடுக்கப்பட்ட கம்பொன்று தழைத்ததை ஒத்த சம்பவமே நடந்துள்ளது - கிழக்கின் கேடயம்
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதில் இருந்து இடமாற்றம் செய்யப்பட இருந்த கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் காரியாலய விவகாரம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள சூழ்நிலையில் நேற்று பிரதமரை சந்தித்து தீர்வை பெற எத்தனித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த விடயம் தொடர்பில் கரிசனையுடன் செயலாற்றிய அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், ஊடகங்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், காரியாலய அதிகாரிகள், மறைமுகமாக உதவிய எல்லோருக்கும் நன்றிகள் என கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.
இளைஞர் பாராளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் எஸ்.எம். றிஹான், இளைஞர் கழகங்களின் சம்மேளன அம்பாறை கிளையின் பிரதித்தலைவர் எம்.எம். ருக்ஸான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ மாவட்ட கிளையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹிஸாம் ஏ பாவா, சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன தலைவர் எம். சிப்னாஸ், கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதிநிதி இஸட். சக்கி ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (24) இரவு சாய்ந்தமருது சீ பிரிஸ் இல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கிழக்கின் கேடயமானது அறிக்கைகளை விட்டுவிட்டு இருக்காமல் செயற்பாட்டில் இறங்கும் அமைப்பென்பது எல்லோருக்கும் தெரியும். இளைஞர்களின் சக்தி ஒன்றிணைந்தமையினாலையே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. அரச காரியாலயங்கள் எல்லா ஊர்களிலும் பகிர்தளிக்கப்பட்டு இருத்தலே சிறந்த முறையாக காண்கிறோம்.
தமது தேவைக்காக மக்கள் இன்னுமொரு ஊருக்கு பயணங்களை மேற்கொள்ளும் போது அந்த ஊரில் உள்ள வர்த்தக நிலையங்களை நாட வேண்டிய தேவை ஏற்படும். இதனால் அந்த பிரதேசம் அபிவிருத்தியை நோக்கி செல்லும். இதனால் பலருக்கும் தொழில் வாய்ப்பு கிட்டும் வாய்ப்புள்ளது.
இந்த காரியாலயத்தை மாற்ற எடுக்கப்படும் முயற்சிகளின் பிண்னனி தொடர்பில் ஆராய்ந்த போது முட்டுக்கு கொடுக்கப்பட்ட கம்பொன்று தழைத்ததை ஒத்த சம்பவமே நடந்துள்ளதை அறிந்து கொண்டோம்.
அதாவது கொரோனா காலத்தில் அன்றைய காலத்தின் நிர்பந்தம் காரணமாக மாகாண காரியாலய அதிகாரிகள் சிலர் அம்பாறையில் ஒப்பமிட தற்காலியமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அதனை மையமாக கொண்டு கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக போலியான காரணங்களை முன்வைத்து இந்த காரியாலயத்தை சாய்ந்தமருதிலிருந்து அகற்ற கோருகிறார்கள். ஆனால் கீழ்த்தளத்திலிருக்கும் பயிற்சி நிலையம் தொடர்ந்தும் அங்கு இயங்க வேண்டும் என்கிறார்கள். இதிலிருந்தே இவர்களின் அஜந்தா தெளிவாக விளங்கிறது.
இது தொடர்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர், தலைவர் ஆகியோருடன் தொடர்ந்தும் பேசி வந்தோம். அதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் நேற்று (நேற்றுமுன்தினம்) பேசியபோது சாய்ந்தமருதிலிருந்து மாற்றப்போவதில்லை என உறுதிமொழியொன்றை தந்தார். ஆனால் இன்று (நேற்று) அம்பாறைக்கு மாகாண சாரியாலய உத்தியோகத்தர்கள் சென்றுள்ளார்கள். ஒருவேளை தகவல் கிடைக்காமல் இருக்கலாம்.
கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த காரியாலயம் இளைஞர்களுக்கு மிக தேவையான, இலகுவாக பயணிக்க கூடிய இடத்தில் அமைந்துள்ள ஒன்றாகும். இதனை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது.
இந்த காரியாலய விடயம் தொடர்பில் ஒழுங்கான தெளிவூட்டல் மக்களுக்கு இல்லாமையினால் நேற்று (நேற்றுமுன்தினம்) இந்த காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்ற தயாராக இருந்தார்கள். நாட்டின் இக்கட்டான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் இந்த காரியாலய பிரச்சினை தேவையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
நாடு விரைவில் பழைய நிலைக்கு திரும்பலாம். ஆனால் காரியாலயம் மீண்டும் திரும்புமா என்பதை சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுவோர் சிந்திக்க வேண்டும். விமர்சனங்களை தாண்டி போராடி இன்று வெற்றி கண்டுள்ளோம். உத்தியோகபூர்வ கடிதங்கள் விரைவில் கிடைக்கும் எனும் செய்தி கிடைத்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் எந்த அரசியல்வாதியும் மக்களை பிழையாக வழிநடத்தாதீர்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் திகாமடுல்ல மாவட்ட எம்.பிக்கள் தொடர்பிலான அண்மைய அறிக்கை இளைஞர்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை திணிக்கும் செயலாகவே பார்க்கிறோம். அவர் கூறியுள்ளபடி அப்படி யாரும் செய்யமாட்டார்கள். பிழையான பாதையில் இளைஞர்களை வழிநடத்துவது எதிர்காலத்திற்கு சிறந்ததல்ல. திருகோணமலை சண்முகா வித்தியாலய மாணவிகளுக்கு அநீதி நடந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் குரல் கொடுத்த போது இம்ரான் மஹ்ரூப் அவர்களை அங்கு நாங்கள் காணவில்லை என்றார். இந்நிகழ்வில் இளைஞர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/nvsiFBI
via Kalasam
Comments
Post a Comment