முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர்.
நமது மக்கள் முழுமையான சம உரிமையுள்ள இலங்கை பிரஜைகளாக உதவுங்கள் -தமுகூ இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிப்பு இந்நாட்டில் இன்று குடியுரிமை பிரச்சினை சட்டப்படி தீர்க்கப்பட்டு விட்டாலும்கூட முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக நமது மக்கள் அனைவரும் மாறவில்லை.
ஆகவே, இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது. கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் எம்பி, ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது, இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும்படி தூதுவர் கோபால் பாக்லேவிடம் தந்திருந்த மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்தார்.
நிலவரம்பற்ற சமூக சபை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலதிக விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார்.
மேலும் 13ம் திருத்தம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முழு நாட்டுக்கும் உரித்தான அதிகார பரவலாக்கல் இயந்திரம் என்பது வலியுறுத்தப்பட்டது. நாடு முழுக்க சிதறி வாழும் அனைத்து மலையக மக்களை கூட்டிணைக்கும் அதிகார பரவலாக்கல் இயந்திரமாக நிலவரம்பற்ற சமூக சபை செயற்படுவதை தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என்பது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்து கூறப்பட்டது.
புதிய அரசியலமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குழுவிடம் இந்த யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்திய தரப்பில் மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், வீடமைப்பு ஆகிய துறைகளில் உதவிகளை இன்னமும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது பற்றி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர்.
நன்றி. அதேவேளை நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத அவமானத்தில் இருந்து இந்நாட்டு அரசாங்கமும் தற்காலிமாக காப்பாற்றப்பட்டுவிட்டது. இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது. தொடர்ந்து வெளியில் இருந்து உணவு வர முடியாதே. நாம் எமக்குள் விரைவில் இவற்றுக்கு தீர்வு காணுவோம் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளிவிவகார அமைச்சருக்கு மேலும் விளக்கம் அளித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/PYzHa7R
via Kalasam
Comments
Post a Comment