2 வழக்குகளில் ரிஷாத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நீக்கம்
இருவேறு வழக்குகளில் ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நீக்கப்பட்டன
இருவேறு வழக்குகளில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் நேற்றும் இன்றும் தளர்த்தப்பட்டுள்ளன.
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம்
நேற்று ( 24) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் விசாரணைக்கு வந்தது.
இதன்போது அவ்விவகாரத்தில் சந்தேக நபர்களின் பெயர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பிணையில் உள்ள ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி உள்ளிட்ட அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது ரிஷாட் பதியுதீனுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்தக் கோரினார்.
தனது சேவை பெறுநர் சம்பவம் இடம்பெறும் போது, விளக்கமறியலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக குற்றம் சுமத்த சாட்சியங்கள் இல்லாத நிலையில், தொடர்ச்சியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது விசாரணைகளை இழுத்துச் செல்வது நியாயமற்றது எனவும் சாட்சி இன்றேல் சந்தேக நபர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வாதங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில், சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதா? என்பது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி, அனைத்து விடயங்களையும் மன்றுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தர்விட்ட நீதிவான், ரிஷாட் பதியுதீனின் வெளிநாட்டு பயணத் தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என, கடந்த 2021 ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன், 2021 ஒக்டோபர் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று ( 25) அவ்வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ரிஷாட்டின் சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய அவரது வெளிநாட்டு பயணத் தடை அடுத்த தவணை வரை தளர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/6WUiScq
via Kalasam
Comments
Post a Comment