ட்ரில்லியன் ரூபா வரை கடனைப் பெறுவது தொடர்பான பரிந்துரையை பாராளுமன்றில் முன்வைக்க இணக்கம்
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையின் உண்மை யதார்த்தத்தை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்ளை ரீதியான தீர்மானங்களுக்கு குறுகிய அரசியல் லாபம் இன்றி கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இன்று (24) அரசாங்க நிதி பற்றிய குழுவில் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு முன்னர் எரிபொருளுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அதனை செயற்படுத்த முடியாமல் போன நிலையில் இதனை இன்று அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து விளக்கமளித்த மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகையில், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் கொள்கைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலரை எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.
அதேநேரம், எங்கிருந்தாவது டொலர்களைப் பெற்றுக் கொடுத்தாலும் மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லிட்ரோ காஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள அதிக நஷ்டம் காரணமாக டொலர்களைக் கொள்வனவு செய்வதற்குப் போதிய இலங்கை ரூபாய்கள் இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், முதல் சுற்றில் தொழில்நுட்பப் பிரிவின் பேச்சுவார்த்தைகளின் இறுதிநாள் இன்று எனவும் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடிய 3-4 மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும் என்றும், இதனை எதிர்கொள்ள முடிந்தளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அண்மைக்காலத்தில் வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானம் உண்மை நிலைமைக்கு அப்பால் நடைமுறைச்சாத்தியம் அற்ற வகையில் குறிப்பிடப்படுவதால் பாராளுமன்றம் பிழையாக வழிநடத்தப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அமைச்சுக்கள் உள்ளிட்ட செலவீனங்களுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுவது இறுதியில் செலவீனத்தை ஈடு செய்ய முடியாத அளவுக்கு வரவுசெலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகை ஏற்படுவதும், கடன் சுமைக்குள் சிக்குவதும் இந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபா வரை கடனைப் பெறுவது தொடர்பான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் இக்குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2JXAfZS
via Kalasam
Comments
Post a Comment