அமைதிப்பூங்காவை அமர்க்களமாக்கும் அதிகார மோகம்!

 


-சுஐப் எம்.காசிம்- 

நிலைமைகள் சீராகி நாட்டின் ​பொருளாதாரம் வலுவடையும் என்ற எதிர்பார்ப்பு நிறைவடைவதற்கான சூழல்கள் தென்படாதுள்ளதுதான் இன்றுள்ள கவலை. 'செய்வதுமில்லை, செய்ய வந்தவனை விடுவதுமில்லை' என்றளவில்தான் அரசியல் நிலைமைகளும் உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டைச் சுற்றியும் ஆர்ப்பாட்டம், அமர்க்களம் என்றாகி பாராளுமன்ற அமர்வுகளும் பகிஷ்கரிக்கப்படுமளவுக்கு பொருளாதார நெருக்கடிக்குள் அரசியல் ஆசைகள் புகுந்துகொண்டன. 


பிரதமர் பதவியில் ரணில் அமராதிருந்திருந்தால் ஜனாதிபதியும் விலகி, வீட்டுக்குச் சென்றிருப்பார் என்ற பார்வைகள்தான் இப்புதிய களங்களை கொதிக்க வைக்கின்றன. எனவே, எப்படி நோக்கினாலும் அரசியல்தான் இதன் ஆக்கப்பொருள் என்றிருக்கிறது. 


ஒருவாறு ஜனாதிபதியும் வீட்டுக்குச் சென்றால், பிரதமர் ரணிலையும் ஜனாதிபதியாக இவர்கள் விடப்போவதில்லை போலுள்ளன புதிய நிலைமைகள். வெற்றிடமாகும்  ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றம் இன்னொருவரை நியமிக்கும் வரை, பிரதமர்தான் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். இன்று வரைக்கும் உள்ள அரசியல் ஏற்பாடுதானிது. பின்னர், எஞ்சிய காலங்களுக்கு பாராளுமன்றம் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்யும். இந்த தெரிவில் ஐக்கிய மக்கள் சக்திக்கு செல்வாக்குச் செலுத்த முடியாது. அந்தளவில்தான், அக்கட்சியின் பாராளுமன்ற பலமும் உள்ளது. 


இவ்வாறிருக்கையில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு இக்கட்சி முன்மொழிந்த ஷரத்துக்கள் சிலவற்றுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமென நீதிமன்றத் தீர்ப்புக்கள் வந்துமுள்ளன. இதன் பின்னர்தான் பிரதமர் வீடும் முற்றுகையானது. இம்முற்றுகையும், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் களியாட்டக்களமாக மாறியுள்ளதாக விமல்வீரவன்ச தெரிவித்திருப்பதும், இந்த பொருளாதார நெருக்கடியால் எழுந்த அரசியலை வேறு பரிமாணத்துக்குள் புகுத்தலாம். 


மாகாண சபைகளின் ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தையும், தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவராக ஜனாதிபதி இருப்பதையும், நீதியரசர்களை நியமிப்பதையும் இன்னும் ஆணைக்குழுக்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரங்களையும், மேலும் சிலவற்றையும் ஜனாதிபதியிடமிருந்து நீக்கவே இவ்வாறு மூன்றிலிரண்டும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியப்படுத்தப்பட்டுள்ளது. 


ஒருபக்கம் இப்படியும் சிந்திக்கலாம். இந்த அதிகாரங்கள் யாரிடமிருந்தால்தான் என்ன? இவற்றை, இப்போது உள்ளவரிடமிருந்து பாராளுமன்றத்துக்கோ அல்லது பிரதமருக்கோ மாறாக, அரசியலமைப்பு சபையிடமோ சமர்ப்பிக்குமாறு முன்மொழிவுகளை மொழிந்ததேன்?அதிகாரங்கள் ஒருவரிடம் குவிந்திருப்பதால்தான், இப்பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதென்றா இவர்கள் சொல்ல விழைகின்றனர்? அவ்வாறானால், பிரதமர் என்கின்ற தனி நபரிடம் இந்த அதிகாரங்கள் குவிவதும் தனிநபர் ஆளுகைதானே. மாறாக, அரசியலமைப்பு சபையிடம் இப்பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டாலும், அரசியல் பக்கச்சார்புகள் இருக்கவே செய்யும். பட்டினிச்சாவை எதிர்கொள்ளலாம் என்கின்ற இந்தப் பரிதாபச் சூழலிலே, அதிகார மோகம் ஒன்றுபடலைத் தூரப்படுத்தவில்லையா? அதனால்தான் இந்த ஆரூடமும். 


எனவே, உள்ள நெருக்கடியைப் போக்க உழைப்பது எப்படியென்று யோசிப்போம். ஏற்றுமதி வருமானம், சேவைகளால் கிடைக்கும் அந்நியச்செலாவணி (கப்பற்சேவை, விமானச்சேவை), சுற்றுலாத்துறை, வெளிநாட்டு நாணயங்களின் வரவுகள் (உழைப்போர் அனுப்புவது), நன்கொடைகள் கிடைப்பதற்கான அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதுதான் உள்ள வழிகள். 


இதைச் செய்யத்தான் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரையும் செய்யவிடாது ஆர்ப்பாட்டங்கள் தலையெடுத்தால், வெளிநாடுகள் எம்மை ஏறெடுத்தும் பார்க்காது.  'அமைதிப்பூங்கா' என்ற நம்பிக்கையில் வெளிநாட்டினர் வந்த நாடு இது. இப்போது அமர்க்களமானால் இங்குள்ள பலர் பட்டினிச்சாவால் அமரர்களாகலாம்!



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/cRaE831
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!