சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக அராஜகங்களில் இருந்து படிப்படியாக மீள்வதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைமையான பொருளாதார சீர்திருத்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, இந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றும் வகையில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பாராளுமன்ற நீதிக்குழு கட்டமைப்பை மீள அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான நிலையை கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவை ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/jf5SIPJ
via Kalasam
Comments
Post a Comment