விரைவில் 12 மணி நேர மின்வெட்டு
நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என, இன்று (22) பிற்பகல் தெரிவித்தார்.
கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மட்டுமே போதுமானது எனவும் நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகளையும் இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5000 மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
நிலக்கரி இல்லாவிடில் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்க நேரிடும் எனவும், மின்சாரத் தேவையில் 35 வீதத்தை நிலக்கரி உற்பத்தி செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
மிகக் குறைந்த விலைக்கு சமர்ப்பித்த நிறுவனத்துக்கு நிலக்கரி விலைமனு வழங்கப்பட்ட போதிலும், மற்றொரு நிறுவனம் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக விலைமனு பெற்ற நிறுவனம் நிலக்கரி வழங்க மறுத்துள்ளமையால் நிலைமை தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இருந்து விடுபட ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பலை கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு 21 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் கடந்த வருடம் செய்த 19 முன்பதிவுகளை பணம் கொடுத்து வாங்குவதே தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தலா 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள லங்கா நிலக்கரி நிறுவனம், முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/7w421MF
via Kalasam
Comments
Post a Comment