துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இரு மகன்கள் பலி : மூன்று சந்தேகநபர்கள் கைது
மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 51 வயதான தந்தை மற்றும் 24, 23 வயதான அவருடைய இரு மகன்கள் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த சந்தேகநபர்கள், T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இவ்வாறு மரணமடைந்தவர்கள் கொலைச் சம்பவம் தொடர்பில் சிறை வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்றிருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபர்களுடன் நீண்ட காலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கண்காணிப்பின் கீழ் பல்வேறு பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கலேவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/YI1uPgk
via Kalasam
Comments
Post a Comment