அல்லாஹ்வினால் சிறப்பிக்கப்பட்டுள்ள ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை அதிகம் ஓதுவோம்!
உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது குணநலன்கள் என்ன? பழக்கவழக்கங்கள் என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது சாத்தியமாகும். ஆனால் இப்பொதுவிதியிலிருந்து அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் விலக்கு பெறுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்களது வாழ்வுதனை முழுமையாக அறிந்து கொள்ள இரண்டு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கொண்டு அன்னாரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதல். இது எல்லாருக்குமான பொது வழிமுறையாகும். மற்றையது நபி(ஸல்) அவர்கள் மாத்திரம் கொண்டுள்ள தனிச்சிறப்பு. அது தான் ரமழான் மாதம் அருளப்பட்ட அல் குர்ஆன் ஆகும்.
இதன்படி அல் குர்ஆன் வாயிலாகவும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வொழுங்கை தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம்.
அல் குர்ஆன் என்பது மக்களைப் பண்படுத்தவும், நேர்வழிப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் அருளப்பட்ட பொது வேதம். இது முழு மனிதர்களுக்கான அறிவுரைகளையும் ஆர்வமூட்டல்களையும் உள்ளடக்கியுள்ளதோடு நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் கூடியதாக உள்ளது. அல் குர்ஆன் வேறு, நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் குர்ஆனோடு பிணைந்ததாக அன்னாரின் வாழ்க்கை அமைந்திருந்தது. குறிப்பாக நபித்துவம் கிடைக்கப்பெற்று அல் குர்ஆன் அருளப்பெற்றதிலிருந்து அன்னாரது வாழ்வு அல் குர்ஆனின் ஒவ்வொரு சொல்லையும் பிரதிபலிப்பதாக இருந்தது.
அல் குர்ஆனிய ஒளியில் நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்க்கைப் பாதையை வெளிச்சமுள்ளதாக ஆக்கியிருந்தார்கள். இது தொடர்பில் ஒரு தடவை அன்னாரின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா (ரழி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அன்னாரின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறியதாக சஃத் பின் ஹிஷாம் (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: அஹ்மத்)
அல் குர்ஆன் எதைப் போதிக்கின்றதோ அதுவே நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்று இந்நபிமொழியின் ஊடாக ஆயிஷா (ரழி) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அவ்வாறு மகத்துவம் மிக்க அல் குர்ஆன் அருளப்பட ஆரம்பமான ரமழான் மாதத்தைத் தற்போது அடைந்துள்ளோம். மனிதனின் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சத்துக்கு நேர்வழிகாட்டி மனிதனை நெறிப்படுத்தி பக்குவப்படுத்துவதே இக்குர்ஆனின் நோக்கமும் இலக்குமாகும். உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் நேர்வழிகாட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள இக்குர்ஆன் என்றும் உயிரோட்டத்துடன் இருக்கும்.
இக்குர்ஆன் அருளப்பட்ட தினமான லைலத்துல் கத்ர் இரவை ஆயிரம் மாதங்களை விடவும் மக்கத்துவம் மிக்கதாக அல்லாஹ்தஆலா ஆக்கி வைத்துள்ளான். அதன் விளைவாக முழு மாதத்தையும் சிறப்பித்து வைத்துள்ள அல்லாஹ் இம்மாதத்தில் ஆற்றப்படும் ஒவ்வொரு நற்காரியத்திற்கும் ஒன்றுக்கு பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மைகள் வழங்குவதாக நபிமொழிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு சிறப்பும் மகத்துவமும் கொண்ட இக்குர்ஆன் அருளப்பட ஆரம்பமான இம்மாதத்தை அல்லாஹ்தஆலா இறையருள் நிறைந்த மாதமாக ஆக்கி வைத்திருக்கிறான். குறிப்பாக சுவனத்தின் வாசல்கள் திறந்து வைக்கப்படுவதோடு நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு விடுகின்றன. மனிதனுக்கு கெடுதல்கள் மற்றும் தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய ஷைத்தான்களும் விலங்கிடப்படுகின்றன. பாவமன்னிப்புக்கான சிறந்த காலப்பகுதிகளில் ஒன்றாக இம்மாதம் விளங்குகின்றது.
ஆகவே அல் குர்ஆனினதும் நபிமொழிகளினதும் கட்டளைகள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் நோன்பு நோற்று, இறை வணக்கங்களில் ஈடுபடுவதில் ஒவ்வொருவரும் அதிகூடிய கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் சிறப்பிக்கப்பட்டுள்ள இம்மாதத்தில் அல் குர்ஆனை ஒதுவதிலும், அதனை படித்து விளங்கிடுவதிலும், அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்வதிலும் கூடிய முயற்சிகளை முன்னெடுக்கவும் தவறக்கூடாது. இம்மாதம் கொண்டுள்ள இறையருள்களை உச்சளவில் பெற்றுக்கொள்வதில் ஒவ்வொருவரும் உச்சபட்ச முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற நேர காலமும் இதுவேயாகும்.
அபூமதீஹா
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/byZWLg9
via Kalasam
Comments
Post a Comment