தேர்தல் நிச்சயம் இடம்பெறும், பணிகளை முன்னெடுங்கள் - உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் பஷில் ராஜபக்ஷ



(இராஜதுரை ஹஷான்)


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெறும். ஆகவே தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உள்ளளூராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குருநாகல் மாவட்டத்தில் நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மே தின கூட்டத்தை கொழும்பில் தனித்து நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், நகர மேயர்கள் ஆகியோருக்கும், முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொதுஜன பெரமுன காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.


உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற உள்ளமை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இழுபறி நிலை, கட்சி என்ற ரீதியில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கபடாமல் உள்ளமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதன்போது அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்கள்.


உள்ளூராட்சி மன்றங்களில் சிறந்த சேவையாற்றியுள்ளோம், தேர்தல் பணிகளை ஆரம்பிக்காமல் இருப்பதால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தவறான சித்தரிப்புக்களை மேற்கொண்டுள்ளாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.


வெற்றியோ, தோல்வியோ தேர்தலை நடத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலைப்போல் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலையும் பிற்போட இடமளிக்க முடியாது. தேர்தலை பிற்போடும் கொள்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது எனவும் சுட்டிக்காட்டினர்.


இதன்போது கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆணைக்குழு வெளியிட்டதை தொடர்ந்து கட்சி என்ற ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக முன்னெடுத்தோம்.


தேர்தல் குறித்து கட்சி என்ற ரீதியில் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது. ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.


தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு எட்டப்படவில்லை, ஆகவே உறுதியான ஒரு தீர்மானத்துக்காக நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளோம் என்றார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெறும். ஆகவே தேர்தல் பணிகளை தொடருங்கள். உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குருநாகல் மாவட்டத்தில் நடத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மே தின கூட்டத்தை கொழும்பில் தனித்து நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/IAbCMS8
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?