பதினேழு தடவை சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திய இலங்கை. மீண்டும் இந்த நிலமை ஏற்படாமலிருக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; விளக்குகிறார் ரிஷாத் பதியுதீன்.
-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது அது தொடர்பாக கடந்த 26,27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவது குறித்தும் பல்வேறு விடயங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன் வைத்திருந்தார்.
அந்த வகையில் நாட்டினுடைய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற இந்த கடன் தொகையை வைத்துக்கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய முடியாது. எனவே இந்த நாடு அன்னிய செலவாணியை பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். என்ற விடயத்தை வலியுறுத்திக் கூறி இருந்தார்.
இந்த நாட்டில் அன்னிய செலவாணியை பெற்றுக் கொள்வதற்கான முக்கிய துறைகளாக சுற்றுலாத்துறை மற்றும் விவசாய ஏற்றுமதி துறை இறக்குமதிக்கு பகரமான உற்பத்தி துறை ஆகியவற்றை விரிவு படுத்தி அதன் மூலமாக இந்த நாட்டினுடைய பொருளாதார சீரணத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசாங்கத்திடம் வேண்டிக் கொண்டார்.
தற்போது நாட்டில் ஆடை ஏற்றுமதி துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. எமது நாட்டினுடைய அன்னியச் செலவாணி வருமானத்தில் அதிகமான பங்கினை ஈட்டித் தந்த ஆடை ஏற்றுமதி துறை தொடர்பாக அரசாங்கம் புதிய கொள்கை சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டிற்குள் அன்னிய செலவாணியை கொண்டுவர முடியும் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும் இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக காணப்படுகின்ற சுற்றுலா துறையை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த இடத்திலே வைத்திருந்தார். நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கான வசதி வாய்ப்புகள் மேம்படுத்தப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய சிறப்புரிமை என்பன பேணப்படக்கூடிய வகையில் நாம் பல்வேறு ஏற்பாடுகள் இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இலங்கை இந்தியாவுக்கு இடையிலான ராமேஸ்வரம் தலைமன்னாருக்கு இடையில் இடம்பெற்ற கப்பல் போக்குவரத்தானது மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது அதிகூடிய இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. எனவே அவ்வாறான செயற்பாடுகள் குறித்தும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதேபோன்று வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற பாதை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பனிகள் நன்மை அடைவார்கள் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இந்த நாட்டுக்கு இறக்குமதி செய்கின்ற அதிகமான விவசாயம் சார்ந்த பொருட்களின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதோடு அவ்வாறான விவசாய பொருட்களை இந்த நாட்டிலேயே பயிரிட்டு அதனை உள்ளூர் உற்பத்தியாக மாற்றுவதற்கான புதிய கொள்கை திட்டங்களையும் அமுல்படுத்த இந்த அரசாங்கம் முன் வர வேண்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார்.
மேலும் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய ஏற்றுமதி பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உற்பத்தி தொடர்பாகவும் இந்த அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துகின்ற போதுதான் இந்த நாட்டில் தேவையான அன்னிய செலாவானியை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுமிருந்தார்.
அதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பிலும் தனது கருத்தினை வெளியிட்டு இருந்த அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் இலங்கை முதலீட்டு சபை அல்லது இலங்கையினுடைய வெளி விவகார அமைச்சு அல்லது ஜனாதிபதி செயலகம் ஊடாக புதிய செயல்திட்டத்தை உருவாக்குவதுடன் அதற்கான ஒரு சிறந்த செயலணியை கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற விடயத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டி இருந்தார்.
அதேவேளை நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கின்ற நிலையிலும் இந்த நாட்டில் இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய பொறிமுறையினை அரசாங்கம் உடனடியாக முன்வைத்து அதனை செயல்படுத்தாவிட்டால் இந்த நாட்டை பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலும் மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என்பதை சுட்டி காட்டியதுடன் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பாக காணப்படுகின்ற அபகீர்த்தியை போக்கும் வண்ணம் அரசாங்கமானது தமது நல்லெண்ண செயற்பாடுகளை இந்த நாட்டுக்குள் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஏற்படுத்துவதுடன் அவ்வாறான செயற்பாட்டுகளுக்கு குந்தகம் விளைவிக்கின்றவர்களை பாரபட்சம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் அவர் இந்த அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே இந்த நாட்டில் ஒரு அமைச்சராக தான் பணியாற்றிய காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் அவருடைய ஆளுமையையும் வெளிப்படுத்துவதாகவே இன்று இந்த பாராளுமன்ற உரையானது அமைந்திருந்ததை நாங்கள் கண்டு கொள்ளலாம். ஆகவே அவருடைய உரையிலிருந்து வெளிப்படுகின்ற விடயம் யாதெனில் அவர் இந்த நாட்டை நேசிக்கக் கூடிய, இந்த மக்களை நேசிக்கக் கூடிய, இன மத பேதங்களுக்கு அப்பால் இருக்கின்ற தலைவர் என்பதனை அவர் வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே இவருடைய பாராளுமன்ற உரையானது தன்னை ஒரு மக்கள் தலைவனாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/JwAtUTm
via Kalasam
Comments
Post a Comment