பெருந்தோட்ட மக்கள் வாழும் 102 பிரதேச செயலக பெயர் பட்டியல், நிதி அமைச்சுக்கும், உலக வங்கிக்கும் கையளிக்கப்பட்டுள்ளது : மனோ கணேசன்
மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின், பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை, குருநாகலை, காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் அமைந்துள்ள 102 பிரதேச செயலக பிரிவுகளில் பெருந்தோட்ட துறை அமைந்துள்ளது. இந்த பிரதேச செயலக பெயர் பட்டியலை, “ஆறுதல் (அஸ்வெசும)” என்ற நலன்புரி திட்டத்துக்கு பொறுப்பான நிதி ராஜாங்க அமைச்சுக்கும், இந்த திட்டத்துக்கு நிதி உதவி வழங்கவுள்ள உலக வங்கிக்கும், இன்று அனுப்பியுள்ளேன்.
மலையக தமிழர் என்றால் நுவரேலிய மாவட்டத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல. அதுபோன்று, பெருந்தோட்ட மக்கள் என்றால் அது நுவரேலிய மாவட்டத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல. நுவரேலியா முதல் கொழும்பின் அவிசாவளை, பாதுக்கை வரை பன்னிரண்டு மாவட்டங்களில் பெருந்தோட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளை இந்த நலன்புரி திட்டம், தோட்ட தொழிலாளருக்கு மாத்திரம் வழங்கப்படும் ஒரு திட்டமும் அல்ல. ஆகவே பெருந்தோட்டங்களில் எத்தனை பேர் தொழிலாளர்கள் என்ற கணக்கு இங்கே அவசியமில்லை.
இன்று பெருந்தோட்டங்களில் வாழும் மக்களில், பெரும்பான்மையோர் தோட்டத்தொழிலாளர் அல்ல. ஆகவே பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களை, அவர்கள் அங்கே தொழில் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, வறுமை நிலைமையை மாத்திரம் கணக்கில் எடுத்து, அவர்களுக்கு நலன்புரி திட்டத்தில் இணைந்துக்கொள்ள வாய்ப்பு வாய்ப்பு வேண்டும். நாட்டின் ஏனைய சமூக குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் எமது குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எமது இந்த நிலைப்பாட்டை உலக வங்கியும், நிதி ராஜாங்க அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளன.
நாட்டின் வறுமை அதிகமான மாவட்டங்களில், மலையக மற்றும் பெருந்தோட்ட மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் முதல் வரிசையில் உள்ளது. இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட பெருந்தோட்ட துறை சார்ந்த தரவுகளில், மாவட்டத்தின் பெருந்தோட்ட ஜனத்தொகை விகிதாசாரம் சரியாக பொருந்தவில்லை. நேற்று நிதி ராஜாங்க அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் செஹான் சேமசிங்க எமக்கு வழங்கிய தரவுகளில் இது தெரிந்தது.
ஆகவே நுவரெலியா மாவட்டத்திலேயே இன்னமும் விண்ணப்பிக்காத பெருந்தோட்ட மக்கள் இருக்கிறார்கள். அதேபோல்தான் ஏனைய மாவட்டங்களில் நிலைமை நிலவுகிறது. இதை சரி செய்து நாட்டின் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள், எமது மக்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ் முற்போக்கு கூட்டணி போராடுகிறது. உலக வங்கி, நிதி அமைச்சு, ஜனாதிபதி ஆகிய தரப்புகளுடம் நாம் தொடர்ந்து பேசுகிறோம் என்பதை புரிந்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட விஷயத்தில் தெளிவும் இல்லாமல் இதுபற்றி பேசி இதை யாரும் குழப்ப கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, இனி நாம் செய்யவேண்டியது பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நலன்புரி உதவிக்கு விண்ணப்பிக்க, பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் வாய்ப்பு வேண்டும். 102 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள பெருந்தோட்ட துறையில் இது நிகழ வேண்டும். ஒரு வீட்டில் வசிக்கும், திருமணமான வெவ்வேறு குடும்பங்களையும் வெவ்வேறாக கணக்கெடுக்க வேண்டும். வழங்கும் நிதி உதவி, பெருநர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வைப்பு செய்யப்பட வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அரசு வங்கிகளில் உடனடியாக விதிகளை தளர்த்தி கணக்குகள் ஆரம்பிக்க இடந்தர வேண்டும். ஆறுதல் (அஸ்வெசும)” என்ற நலன்புரி திட்டத்தில் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, தொழிற்சங்கங்களுக்கு, தேவையின்றி தலையிட இடம் கொடுக்க கூடாது. அவ்வளவுதான்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KfBp0na
via Kalasam
Comments
Post a Comment