நபி அவர்களின் வாரிசுகளே உலமாக்கள்: அவர்களின் நுபுவத் அவர்களிடம் இருக்கும்.
"கம்பஹா மாவட்ட உலமாக்களாக இருக்கலாம். ஏனைய பகுதிகளைச் சேர்ந்த உலமாக்களாக இருக்கலாம். இந்த நாட்டிலே வாழுகின்ற நமது உலமாக்களுடைய வரலாற்றுப் பங்களிப்புக்கள், நம்மால் கண்டிப்பாக கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும்.
அந்த வகையில், கம்பஹா மாவட்டத்தின் ஜம் இய்யத்துல் உலமா, இந்த உயர் மனிதப் பண்பை புரிந்து கொண்டு, இஸ்லாமிய வழி முறையைத் தயார் படுத்தியுள்ளது. அதுமாத்திரமல்ல, மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு நிகழ்வை, மிக கண்ணியமாக ஏற்பாடு செய்திருப்பதையும் பாராட்ட வேண்டும்".
இவ்வாறு, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் செயற்குழு உறுப்பினரும், பேருவளை ஜாமிஆ நழீமிய்யா கலாபீடத்தின் முதல்வருமான அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் புகழாரம் சூட்டினார்.
கம்பஹா மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவினால், மாவட்டத்தின் 56 மூத்த ஆலிம்கள், வத்தளை - ஹுணுப்பிட்டிய, "ஹெவன்'ஸ் கேட் பென்கட் ஹோல்" ( Heaven's Gate Banquet Hall ) வரவேற்பு மண்டபத்தில், (23/05/2024) வியாழக்கிழமை கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் மினுவாங்கொடை, நீர்கொழும்பு, திஹாரிய, கஹட்டோவிட்ட, பஸ்யாலை, மல்வானை, பூகொடை, வத்தளை ஆகிய எட்டு கிளைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 மூத்த ஆலிம்களே, இம்மாபெரும் சிறப்பு நிகழ்வில் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
இச்சிறப்பு நிகழ்வில், பிரதம விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு, அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
"பாராட்டப்பட வேண்டியவர்களை பாராட்ட வேண்டிய அளவுக்கு பாராட்டுவது என்பது, ஒரு உயர்ந்த மனிதப் பண்பு. இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஒரு உயர்ந்த குணம். அது மாத்திரமல்ல, மனம் விட்டுப் பாராட்டுவது இஸ்லாத்தின் தூய்மையான வெளிப்பாடு. இவை அனைத்துக்கும் மேலாக, கௌரவிக்கப்பட வேண்டியவர்களை கௌரவிப்பது என்பதும், பாராட்டப்பட்ட வேண்டியவர்களை பாராட்டுவது என்பதும், ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களின் ஒரு சுன்னத்தான நபி வழி. அந்த வகையில், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை வேரூன்றச் செய்யும் வகையில், கம்பஹா மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கின்றமை எல்லா வகையிலும் பாராட்டப்பட்ட வேண்டியது.
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நிறைய ஸஹாபாத் தோழர்களைத் தட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். மெச்சி இருக்கின்றார்கள், பாராட்டி இருக்கின்றார்கள், புகழ்ந்து பேசி இருக்கின்றார்கள். ஹழ்ரத் அபூபக்கர் (ரழி), ஹழ்ரத் உமர் (ரழி), ஹழ்ரத் உஸ்மான் (ரழி), ஹழ்ரத் அலி (ரழி) ஆகியோர்கள் உள்ளிட்ட மேலும் பல அதிகமான ஸஹாபாத் தோழர்களையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனம் விட்டுப் பாராட்டிப் புகழ்ந்து பேசி இருக்கின்றார்கள் என்பது மாத்திரமல்ல, உற்சாகப்படுத்தியும் இருக்கின்றார்கள். இதனை நாம் ஹதீஸ் கிரந்தங்கள் வாயிலாக அறிகின்றோம்.
உலமாக்கள், நபிமார்களின் வழியில் வந்த வாரிசுகள். இன்று நபிமார்கள் இல்லாத போதும், உலமாக்கள் அவர்களுடைய நுபுவ்வத்துடைய தன்மைகளைச் சுமந்து இருப்பவர்கள்.
உலமாக்கள் குர்ஆனையும் சுன்னாவையும் சுமந்தவர்கள். தீனைக் கட்டிக் காக்கும் பெருமையும் அந்தஸ்தும் உலமாக்களையே சாரும். இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் சத்தியத்தைக் காத்தவர்களாக உலமாக்கள் திகழ்கின்றார்கள்.
உலமாக்கள் வானத்தின் நட்சத்திரங்களை ஒத்தவர்கள். நட்சத்திரங்களைப் பார்த்து, மக்கள் தமது பயணங்களையும் திசைகளையும் எவ்வாறு அறிந்து கொள்வார்களோ, அவ்வாறே உலமாக்களைப் பார்த்து மனிதர்கள் நேர்வழியைக் கற்றுக் கொள்வார்கள்.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள், "உண்மையான புகஹாக்களும் உலமாக்களும் தான், இந்த பூமியிலுள்ள அவுலியாக்கள்" என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். "எந்தவொரு ஆலிமையும் நீங்கள் நோவிக்க வேண்டாம். யார் ஒரு ஆலிமை துன்புறுத்துகின்றாரோ, காயப்படுத்துகின்றாரோ, அவர் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களைக் காயப்படுத்தியவர் போலாவார்" என, ஹழ்ரத் அல்கமா (ரழி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
எனவே, உலமாக்களை சொல்லாலும் செயலாலும் நோவினை செய்வது பெரும் குற்றமாகும். உலமாக்களுடைய அந்தஸ்து, இந்த சமுதாயத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் தான், இந்த விதமான ஒரு அற்புதமான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொழில், சம்பளம், நியமனம், பதவி உயர்வு என்று எதுவுமே இல்லாமல், அல்லாஹுத் தஆலாவுக்காக காலாகாலமாக இயங்கி வருகின்ற ஒரு உன்னதமான சமூகம் தான், உலமாக்கள் சமூகம். ஆனால், அவர்களுடைய சகல பணிகளையும் இஸ்லாமிய தொடர்பு அறுபடாமல், விடுபடாமல், ஆரவாரம் இல்லாமல், அலட்டிக்கொள்ளாமல் கடமை கண்ணியம் பேணி, மிகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் செய்து வருகின்றார்கள். இதனால்தான், உலமாக்கள் என்றும் எவ்விடத்திலும் கட்டாயம் கண்டிப்பாக கௌரவிக்கப்பட வேண்டியவர்கள், பாராட்டப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், கம்பஹா மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா, இவ்வாறான மாபெரும் ஒரு கண்ணியமான சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக மீண்டும் ஒருமுறை எனது பாராட்டையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/a0mfOiC
via Kalasam
Comments
Post a Comment