ஞானசார தேரருக்கு பிணையா ? விடுதலையா? வழக்கில் நடந்து என்ன?
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு, நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி உத்தரவிட்டது.
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியீட்டு, மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ள நிலையில், அம்மேன் முறையீட்டை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் மேன் முறையீட்டு நீதிமன்றில் திருத்தல் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமார் ரத்னம் ஆகிய நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழாம் அந்த திருத்தல் மனுவின் தீர்ப்பை அறிவித்தே, ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
உண்மையில், இலங்கையின் அரசியல் அமைப்பின் ஊடாக அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கும் அவருக்கு எதிரான மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. மேன் முறையீடு செய்யும் போது, விசாரணை முடியும் வரை பிணையில் இருக்க சந்தர்ப்பம் கோருவதற்கான பூரண உரிமை ஞானசார தேரர் உள்ளிட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.
மேல் நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கபப்டும் வரையில் ஞானசார தேரர் பிணையிலேயே இருந்த நிலையில், தற்போது அவரது மேன் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் வரை அவருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் ஞானசார தேரரை விடுவித்த நீதிமன்றம், அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்ததுடன், கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவும் கட்டளையிட்டது.
ஞானசார தேரரின் திருத்தல் மனு தொடர்பில் அவருக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, கொழும்பு மேல் நீதிமன்றம் தனது சேவை பெறுநருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பினை ஆட்சேபித்து தனது சேவை பெறுநர் மேன் முறையீடு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி முதல் படி முறையாக பிணை பெற தண்டனை அளித்த மேல் நீதிமன்றிலேயே பிணை விண்ணப்பம் செய்ததாகவும், விஷேட காரணிகள் எதுவும் இல்லை எனக் கூறி அந்த பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றம் நிராகரித்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா சுட்டிக்காட்டினார்.
இதன்போது மன்றில் மருத்துவ அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஞானசார தேரர் இருதய நோய் உள்ளிட்ட பல நோய் நிலைமைகளால் அவஸ்தைப்படுவதாக கூறினார். அத்துடன் அவாது மேன் முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கப்பட சுமார் 3 வருடங்கள் ஆகலாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அதனால் மேன் முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரினார்.
இந்த கோரிக்கைக்கு திருத்தல் மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார கடும் எதிர்ப்பு வெளியிட்டார். ஒரு பிரதிவாதி குற்றவாளியாக காணப்பட்ட பின்னர் 3 மாதங்களுக்குள் அவரது வழக்குக் கோவை மேல் நீதிமன்றில் இருந்து மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு மாற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறு அனுப்பப்படும் வழக்குக் கோவையை மையப்படுத்திய மேன் முறையீட்டு விசாரணையை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஒரு வருடத்துக்குள் ஆரம்பித்து, அவசரமாக முடிக்கும் முறைமை ஒன்று அமுல் செய்யப்பட்டுவரும் நிலையில், ஞானசாரரின் பிணை விண்ணப்பம் தொடர்பில் ஆராய்வது அநாவசியமானது என அவர் வாதிட்டார்.
இந்த நிலையில், முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டனர்.
உண்மையில் ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனுவில், அவர் குற்றவாளியாக காணப்படும் இடத்து, அல்லது தண்டனை காலம் திருத்தப்படும் இடத்து அவர் அவ்வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து அதனை அனுபவிக்க வேண்டி வரும். மாற்றமாக மேன் முறையீட்டில் அவர் நிரபராதியாக காணப்பட்டால் மட்டுமே அவருக்கு விடுதலை கிடைக்கும்.
மேன் முறையீட்டு நீதிமன்றமானது மேன் முறையீட்டை விசாரிக்கும் போது, மேல் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள், தீர்ப்புக்கு ஏதுவான காரணிகள், தண்டனை காலம் நியாயமானதா போன்ற விடயங்களையே ஆராயும். மாற்றமாக ஒரு மேல் நீதிமன்றம் செய்யும் சாட்சி விசாரணைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் செய்யப் போவதில்லை. மேல் நீதிமன்றம் முன்னெடுத்த விசாரணை, அதன் தீர்ப்பினை ஆராயும் வேலையையே மேன் முறையீட்டு நீதிமன்றம் செய்து, ஞானசார தேரர் குற்றவாளியா நிரபராதியா என்பதையும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம் தொடர்பிலும் தீர்மானிக்கப் போகிறது.
முன்னதாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், 4 வருட சிறைத் தண்டனை ஞானசார தேரருக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.-
எப்.அய்னா
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/xhcvibA
via Kalasam
Comments
Post a Comment